வெல்லத்தோடு எள்ளை சாப்பிடலாமா? வெல்லம் டீ நல்லதா? வெல்லமும் நெய்யும் சாப்பிட்டால் என்னாகும் பாருங்க
சென்னை: வெல்லம் சாப்பிடுவது நல்லதா? வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? வெல்லத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? வெல்லம் சேர்த்து டீ தயாரித்து குடிக்கலாமா? வெல்லத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. உடலிலுள்ள ரத்த விருத்தியை அதிகரிக்க செய்வதுடன், ரத்தசோகையை விரட்டக்கூடிய தன்மை வெல்லத்துக்கு உண்டு.. எனவே, அனீமியா பாதிப்பில் இருப்பவர்கள், வெல்லத்தை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். இதனால் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் பெருகும்.

வெல்லத்தின் நன்மைகள்
ஜீரண சக்தியை பெருக்கும் தன்மை வெல்லத்துக்கு உண்டு.. அதனால்தான் வேர்க்கடலை உள்ளிட்டவைகளை சாப்பிட்டதுமே சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர்.. இதனால் உடல் வெப்பம் அதிகரிக்க செய்து செரிமானம் சீராகும்.. மலச்சிக்கல் தொந்தரவு இருந்தால் வெல்லத்தை வெந்நீரில் கலந்து குடித்தால் தீர்வு காணலாம்.
சர்க்கரை நோயாளிகள் வெல்லத்தை தவிர்க்கலாம்.. ஏனென்றால், வெறும் 100 கிராம் வெல்லத்தில் 98 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.. சர்க்கரையில் 100 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளன. அதாவது வெறும் 2 கிராம்தான் வித்தியாசம் உள்ளதே தவிர, வெல்லத்துக்கும் சர்க்கரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
மேலும் வெல்லம் உயர்ந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால், இதை சாப்பிட்டதுமே, உடனடியாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் . எனவேதான், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் வெல்லத்தை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.
வெல்லம் டீ
சிலர் டீ தயாரிக்கும்போது, சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து குடிப்பார்கள்.. எப்போதாவது என்றால் பிரச்சனை இல்லை.. ஆனால், இதையே தொடர்ந்து கடைப்பிடித்தால், உடல்நல கோளாறு வரக்கூடும்..
காரணம், வெல்லம் வெப்பத்தன்மை கொண்டது, பால் குளிர்ச்சி தன்மை கொண்டது.. எதிரெதிர் தன்மை கொண்ட உணவுகளை சேர்த்து சாப்பிடுவது தவறானது.. இதை ஆயுர்வேத மருத்துவமும் ஆதரிப்பதில்லை.. முரண்பட்ட உணவுகளை சாப்பிடும்போது, அஜீரணம், மலச்சிக்கல். வாந்தி, குமட்டல் உள்ளிட்ட பிரச்சனைகள் வரலாம்.. ஆனால் பிளாக் டீயில் வெல்லம் சேர்த்து குடிப்பது நல்லது.. அல்லது வெல்லத்தை வெந்நீரில் கலந்தும் குடிக்கலாம்.
கருப்பு எள்ளுடன் வெல்லம்
கருப்பு எள்ளுடன் வெல்லத்தை ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. பற்கள், எலும்புகள் வலுவாகுவதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் பெருகும் என்பதால், வளரும் பிள்ளைகளுக்கு வெல்லம் சேர்த்து எள்ளில் செய்யப்பட்ட பலகாரங்களை அதிகம் தரலாம்.
1 ஸ்பூன் வறுத்த எள்ளுடன், 1 ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து சாப்படும்போது, இதயம் பலம் பெறுகிறது.. ஏனென்றால், எள், வெல்லம் இந்த இரண்டிலுமே நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், இதய நோய்களின் ஆபத்து குறைகிறது. எள்ளும், வெல்லமும் சேர்ந்த கலவையை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஹீமோகுளோபின் பிரச்சனை, கொலஸ்ட்ரால் பிரச்சனை தீர்ந்துவிடுமாம்.
வெல்லமும் நெய்
அதேபோல வெல்லத்துடன் சிறிது நெய் கலந்து தினமும் சாப்பிட்டு வரும்போது, மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.. இதனால் குடல் ஆரோக்கியமும் சீராகும்.. ஏனென்றால், வெல்லத்தில் உள்ள நார்ச்சத்தும், நெய்யின் பிசுபிசுப்புத்தன்மையும் ஒன்றாக சேர்ந்து இணைந்து மலக்குடல் இயக்கத்தை இலகுவாக மாற்றிவிடுமாம். குடல் புண்களும் ஆறிவிடும்.
வெல்லம், நெய் இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது, உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சீராக இருக்கும்.. ஆயுர்வேதத்தில் வெல்லத்துடன் நெய் கலந்து சாப்பிடுவது இன்னும் பல நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications