Indian Railways: ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை.. 1,250 பணியிடங்கள்! டிகிரி தகுதி தான்! மாதம் 35,400 சம்பளம்
சென்னை: இந்தியன் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1,250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே மாதம் ரூ.35,400 வழங்கப்படும். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் இந்த பணியிடங்களை நிரப்பி வருகிறது. லோகோ பைலட், குரூப் டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.

ரயில்வேயில் 1,250 பணியிடங்கள்
இந்நிலையில் ரயில்வேயில் 1,250 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனம் என்பதால் ரயில்வேயில் வேலை செய்ய வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் லட்சியமாக உள்ளது. இதற்காக ரயில்வே நடத்தும் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்கள்.
அந்த வகையில் தான் தற்போது மத்திய அரசு வேலைக்குத் தயாராகி வரும் பட்டதாரிகளுக்கு ஏற்ற அறிவிப்பானது தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 1,250 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி என்ன?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.இ. / பி.டெக்., இதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு எவ்வளவு?
01.01.2027 தேதி அடிப்படையில் வயது வரம்பானது கணக்கிடப்படும். அதன்படி 18 முதல் 33 வயதுக்குள் இருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு ஏற்ப 10 முதல் 15 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு 7-வது ஊதியக் குழுவின் லெவல் 6-இன் படி, தொடக்க அடிப்படைச் சம்பளமாக மாதம் ரூ.35,400 வழங்கப்படும். இதனுடன் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) உள்ளிட்ட படிகளும் வழங்கப்படலாம்.
தேர்வு முறை
கணினி வழித் தேர்வு (CBT), கணினி வழித் திறனறித் தேர்வு (CBAT), சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனையின் படி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆர்.ஆர்.பியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு மீதம் 400 ரூபாய் திருப்பி வழங்கப்படும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். தேர்வு எழுதியதும் முழு தொகையும் திருப்பி வழங்கப்படும்.
எப்போது விண்ணப்பிக்கலாம்?
ஆன்லைன் விண்ணப்பம் பதிவு தொடக்கம் 27.10.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.11.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here




Click it and Unblock the Notifications
