Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: காத கொடு காச எடு- மனகோட்டை மண்கோட்டையாச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க? ராஜா காலத்து கதைன்னா நம்ம எல்லாருக்கும் ரொம்ப புடிக்கும்ல. இந்த வாரம் அப்படி ஒரு கதையை ரெடி பண்ணிருக்கேன். அதுல ரெண்டு நண்பர்கள் இருக்காங்க. எப்படிப்பட்ட நண்பர்கள்னு தெரிஞ்சுக்கணுமா. வாங்க சொல்றேன்.

பல்லாண்டுகளுக்கு முன்பு பூவையூர் என்ற அழகான குக்கிராமம் இருந்தது . மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த கிராமத்தில் ராஜா, ராமன் என்ற சிறுவர்கள் இருந்தனர். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து கொண்டிருந்தனர். ராமன் நேர்மையானவன். கடுமையாக உழைப்பவன். அறிவாளியும் கூட, பெற்றோரும் ஆசிரியரும் பெருமைப்படும்படி நடந்து கொள்வான்.

ராஜா அதற்கு தலைகீழான குணமுள்ளவன். நாணயமில்லாதவன், தேர்வில் ஏமாற்றுவான். மற்றவர்களை பார்த்து எழுதக்கூடியவன். யாரையும் மதிக்கமாட்டான். அடுத்தவர் மீது அன்பு இல்லாதவன். ஆனால் சாமர்த்தியமுள்ளவன். எளிதாக மற்றவர்களை ஏமாற்றுவான். பெரிதாக உழைக்கமாட்டான். ஆனால் வேலைவாங்குவதில் திறமையானவன்.

Short story for kids in Tamil : The Secret

ராஜாவிற்கு ராமனுக்கும் ஒத்துவருவதில்லை. ராமன் ராஜாவிற்கு உதவ மாட்டான். திருடுவதற்கும் ஏமாற்றுவதற்கும் அடிக்கடி ராஜா உதவி கேட்பான். ராமனோ அதற்கு, "நல்ல காரியத்திற்கு எப்போது வேண்டுமானாலும் உதவி கேள் செய்கிறேன். ஆனால் திருடவோ ஏமாற்றவோ ஒரு போதும் உதவமாட்டேன்"என கண்டிப்பாக கூறிடுவான்.

இருவருக்கும் படிப்பு முடிந்தது. வாலிப வயதை அடைந்தனர். ராஜா கிராமத்தை விட்டு நகரத்திற்கு இடம்பெயர்த்தான். ராமன் அதே ஊரில் வசித்து வந்தான். நன்றாக படித்துதேர்ந்தான். ஆனால் தனது தந்தைக்கு உதவும் பொருட்டு அவருடன் விவசாயத்தில் ஈடுபட்டான். தந்தையின் காலத்திற்கு பிறகு அதே சிறிய நிலத்தில் விவசாயம் செய்து எளிமையாக வாழ்ந்து வந்தான்.

நல்லவன் என்று கிராம மக்கள் அனைவரும் ராமனை நேசித்தார்கள். நிறைய ஆண்டுகள் சென்றன. ராஜாவும் ராமனும் சந்தித்து கொள்ள வாய்ப்பே வரவில்லை.

ராஜாவிற்கு அவன் சென்ற நகரம் சிறப்பாக அமையவில்லை ஆனால் ஏமாற்றும் வித்தையை மேலும் நுட்பமாக கற்று கொண்டான். அதனது நாட்டை ஆளும் ஆசை வந்தது அவனுக்கு. மன்னரே ராஜாவின் சொற்களுக்கு மயங்கி அவனை முதலமைச்சர் ஆக்கியதாக ராமனின் காதுகளுக்கு செய்தி வந்தது. அதை ராமன் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ராஜா யோக்கியன் இல்லை என தெரிந்தும் அதற்கும் அவன் கவலை கொள்ளவில்லை. இப்படித்தான் தனக்கு சம்பந்தம் இல்லாத விசயங்களை பற்றி சிந்திக்கமாட்டான்.

ஒருநாள் ராமன் தனது நிலத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு நகரத்திற்கு செல்லவேண்டியதாக இருந்தது. பயணத்தில் மிகவும் களைப்பு ஏற்பட்டது அவனுக்கு, அருகில் குடிப்பதற்கு தண்ணீர் தேடினான். பக்கத்தில் மாளிகை போல ஒரு வீடு இருப்பதை பார்த்தான். உள்ளே நுழைந்து பணியாட்களிடன் தண்ணீர் கேக்கலாம் என்று பார்த்தான். அதற்குள் ஒரு குரல், "அட ராமா நீயா" என்று. வேறு யாரும் இல்லை அது ராஜா தான். ராஜாவை ராமனுக்கு அடையாளம் தெரியவில்லை. ஒரு உண்மையான ராஜாவை போல உடை அணிந்திருந்தான். அருமையான பட்டாடைகள் பளபளக்க, தங்க சங்கிலிகளும் வைர மோதிரங்களும் பகலோன் ஒளியில் தகத்தக்க, மாணிக்ககல் பதித்த சரிகைத்தலைப்பாகை சிரத்தை அலங்கரிக்க, கம்பிர தோற்றத்தில் நின்றான். ராஜாவிற்கு ராமன் வணக்கம் கூறினான். ராஜாவோ ராமனை ஏளனமாக பார்த்தான். சிரித்தபடியே, "ஏன் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறாய் ராமா!. உன்னை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறாய். இவ்வளவு தொலைவும் நடந்து வந்தாயா? உன்னிடம் ஒரு மாட்டுவண்டி கூடவா இல்லை. அட பிச்சைக்காரா!. என்னை பார்த்தாயா ஒரு ராஜாவைப்போல் இருக்கிறேனா இந்த ராஜா. தேவலோகத்தில் இருப்பவர்கள் கூட என்னைப்பார்த்து பொறாமைப்படுவார்கள் அல்லவா?" என தற்பெருமைப்பட்டு கொண்டிருந்தான். "இவ்வளவும் எனது திறமையால் வந்தது. உனது நேர்மையை வைத்து ஒரு கட்டை மாட்டுவண்டி கூட உன்னால் வாங்க முடியவில்லையே" என மேலும் ஏளனம் செய்தான்.

ராமன் உடனே, "போதும் ராஜா. நான் ஏழையாக இருக்கலாம். இதுவே எனக்கு போதுமானது.நிறைவாக இருக்கிறேன்" என்றான்.தொடர்ந்து,"நான் அறிவில் மந்தமானவன் இல்லை என்பது உனக்கும் தெரியும்.விரும்பியிருந்தால் உன்னைவிட அதிக பணமும் அதிகாரமும் அடைத்திருப்பேன்.உன்னைப்பொல் ஏமாற்றுவதை நான் விஷமாக பார்க்கிறேன்" என்றான், கோபமாக.

உடனே "மூடுடா வாயை அவ்வளவு திறமைசாலி என் வீட்டிற்கு பிச்சை எடுக்க எதற்கு வந்தாய்? என்றான்,ராஜா. அதற்கு ராமனோ, "நான் ஒன்றும் உன் வீட்டுக்கு பிச்சை எடுக்க வரவில்லை. தாகமா இருந்தது தண்ணீர் கேட்க வந்தேன். இது உன் வீடு என்று கூட தெரியாது" என்றான்.

"ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது. போடா வெளியே!." என்று ஆத்திரமாக கத்தினான் ராஜா. "சரிப்பா நான் போகிறேன்" என்று போக திரும்பினான் ராமன். ராஜாவோ விடுவதாய் இல்லை. ராமனை வெளியே தூக்கி ஏறிய தனது பணியாட்களுக்கு உத்தரவிட்டான். ராமனுக்கு அப்போது கோபம் வந்தது. "நான் உனக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை. தேவையில்லாமல் என்னை அவமானப்படுத்தாதே. அழிந்து போவாய்" என சாபமிட்டான் ராமன். "என்ன எனக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லையா? பள்ளியில் எனக்கு உதவி செய்ய மறுப்பாயே அது என்னவாம், என் ஆசை தீர உன்னை அவமானபடுத்துவேன். என்னடா செய்யமுடியும் உன்னால், சிறையில் போட்டுவிடுவாயா? நான் இந்த நாட்டின் முதலமைச்சராக்கும். எல்லா மந்திரிகளுக்கும் வேலை சொல்பவன், நான். சேனாதிபதி எனக்கு சிநேகிதன். தனாதிகாரி என் மாமனார். தலைமை நீதிபதி என் மைத்துனன். தெரிந்ததா?" என்று கத்தினான் ராஜா. "பாவிகளே நீங்கள் எல்லாம் அழிந்து போவீர்கள்" என்று கூறிய ராமனை பணியாட்கள் தூக்கி தெருவில் போட்டார்கள். அவமானத்துடன் சென்றான் ராமன்.

ஒரு சில மாதங்கள் கழித்து ஒருநாள் நீண்ட தாடியும் மீசையுமாய் ஒரு புதியவர்; அரசரை நிறைய பொருட்களை பரிசாக கொடுத்து விட்டு சொன்னார். "அரசரே நான் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு ஐம்பது தங்ககாசுகள் தருவேன். பதிலாக தாங்கள் அரசவையில் இருக்கையில் தங்கள் காதில் சில நிமிடங்கள் ரகசியம் ஓத எனக்கு அனுமதி அளிக்கவேண்டும்" அரசரோ, "ஆகட்டும். அதிலென்ன கஷ்டம் எனக்கு" என்று பதில் மொழிந்தார். மறுநாள் மந்திரிகள் புடைசூழ மன்னர் அரசவையில் இருந்த போது, அந்த புதியவரை பார்த்து கிட்ட வாரும் என ஜாடை காட்டினார்.

அருகில் சென்று அவர் அரசர் காதில், "இன்று சிறப்பான நாள். கதிரவன் பளிச்சென்று ஒளிவீசி கொண்டிருக்கிறான்". என்றார் புதியவர். கிசுகிசுத்து கொண்டே அடிக்கடி ராஜாவை நோக்கினார். தங்க காசுகளை அரசரின் பையில் ரகசியமாக போட்டுவிட்டு சென்றார். முதன்மை மந்திரியான ராஜா அவர் பின்னால் பயபக்தியுடன் சென்று கேட்டான். "அரசரிடம் தாங்கள் சொன்னதென்னவோ? என்னை அடிக்கடி நோக்கியது ஏன் கொஞ்சம் சொல்லுங்களேன்." இதைத்தான் அந்த புதிய மனிதரும் எதிர்பார்த்தார். அந்த மாறுவேடத்தில் இருப்பது ராமன் தான்.

" அரசருக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் தங்களுக்கு சொல்லமுடியுமா?" என்றான் அவன். ராஜாவின் பயம் பன்மடங்கானது. மண்டிய போட்டுவிட்டான். ராமனின் கையில் நூறு தங்கக்காசுகளை திணித்தான். "மாலையில் மேலும் நூறு காசுகளை தருவேன். ரகசியத்தை மட்டும் சொல்லிவிடுங்கள்" என்று கெஞ்சினான். மிகவும் தயக்கம் காட்டியவாறு நடித்து பின் ராஜாவின் காதில் ராமன், "நீர் நிறைய லஞ்சம் வாங்குவதாக அரசரிடம் நிறைய பேர் புகார் அளித்துள்ளனர். அதை விசாரிப்பதற்கு அரசர் என்னை நியமித்துள்ளார்," என்று ஒரே போடாக போட்டான். பயந்து போன ராஜா, "இன்று அரசரிடம் என்ன கூறினீர்கள் "என கேட்டான். "இன்னும் விசாரித்து கொண்டுள்ளதாக கூறியிருக்கிறேன்" என்றான் ராமன். "இந்த ஏழையின் மீது கருணை காட்டுவார் ஐயா! இன்னும் ஆயிரம் பொற்காசுகளை தருகிறேன்" என்று கெஞ்சிய ராஜாவிடம். "பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு நகர்ந்தான் ராமன்.

மறுநாள் வந்தது. ராமன் அரசரின் காதுக்குள் கிசுகிசுத்தான். "இன்று காலையில் காற்று வலுவாக வடக்கிலிருந்து தெற்கு வீசுகிறது. வீசிக்கொண்டு நகர்கிறது" என்று சொல்லிகொண்டே அடிக்கடி ராஜாவை பார்த்துக்கொண்டான். இந்த அற்ப சொற்களை கேட்டு அரச தனக்குள் சிரித்துகொண்டார். இந்த செய்திகளுக்கு அன்றாடம் ஐம்பது தங்கக்காசுகள் கிடைக்கின்றன என நினைத்துக்கொண்டார். தூண்டிற் புழுவைப்போல் துடிக்கும் ராஜா ராமனை தொடர்ந்தான். "முதன்மை அமைச்சர் ஏதும் முறைகேடாக நடக்கவில்லை. எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது" என்று கூறியதாக சொன்னான் ராமன். ராமனுக்கு நன்றி கூறி ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான் ராஜா.

அடுத்த சிலநாட்களில் மீதமுள்ள அனைத்து அமைச்சர்களையும் தனது கிலியால் ஆடவைத்தான் ராமன். சேனாதிபதி, தனாதிகரி, நீதிபதி என யாரையும் விடவில்லை அனைவரையும் தனது கட்டுக்குள் வைத்திருந்தான். தினமும் அரசருக்கு ஐம்பது பொற்காசுகளை வழங்கிவிட்டு மற்ற மந்திரிகளிடம் ஆயிரக்கணக்கில் பொற்காசுகளை கறந்தான். பிறகு ஒருநாள் அரசரும், அதிகாரிகளும், சாதாரண மக்களும் அரசவையில் கூடிருந்த போது, ராமனும் அங்கு இருந்தான். அரசரின் முன் வந்து சொன்னான்.

"என் அரசே, இத்தனை நாள் தங்கள் காதுகளில் அர்த்தமற்ற வார்த்தைகளை சொன்னது நான்தான். இன்று அர்த்தமுள்ள ஒரு வார்த்தை சொல்லவந்துள்ளேன். இந்த பையுடன்" என்று கூறி மன்னர் முன்பே அந்த பட்டுப்பை ஒன்றை போட்டான். பத்தாயிரம் தங்கக்காசுகள் அதில், அரசருக்கு ஒன்றும் விளங்கவில்லை. "சற்று விளக்குவீராக"என்று உத்தரவிட்டார். ராமன் நடந்தவற்றை எல்லாம் கூறினான்.

"தங்கக்காசு குவியலை பாருங்கள். உம்மை சூழ்ந்துள்ள பொய்க்கு உண்மையான சான்று இதுவே!. அமைச்சர்கள் அனைவரும் மனத்தூய்மை உள்ளவராயிருந்தால், தளபதி தன் பணியை உளமார செய்திருந்தால், தலைமை நீதிபதி லஞ்சம் வாங்காமல் இருந்துருந்தால், நான் அவர்களிடம் அவர்களிடம் கூறிய பொய்களுக்கு பயந்து நடுங்கிருக்கமாட்டார்கள். மேலும் முதன்மை அமைச்சர் ஒரு கேடுகெட்டவர் என்றான் ராமன். மக்களும் அதற்கு ஆமோதித்தனர்.

தன் அதிகாரிகள் கும்பலில் ஒரு ஆள்கூட பதவிக்கு தகுதி இல்லை என அரசருக்கு புரிந்தது. எல்லாரும் லஞ்ச ஊழல் பிடித்தவர்கள். குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பதால் சதா கிலியில் ஆழ்ந்தார்கள். ராஜாவும் மற்ற மந்திரிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜாவின் மண்ணராசை மண்கோட்டை போல சரிந்தது.

ராமன் முதன்மை மந்திரி ஆக்கப்பட்டான். மதி தெளிந்த மன்னனின் கீழ், கடமைப்பற்றும் கண்ணியமுமாய் பணி புரிந்திட நல்லவர்கள் குழு ஒன்றை ராமன் விரைவிலே சேர்த்துக்கொண்டான். நாடு செழித்தது.

கதை எப்படி இருந்துச்சு குட்டிஸ். நேர்மையோடு வலிமை என்னனு தெரிஞ்சுக்கிட்டீங்களா. ஏழையாக இருந்தாலும் வாழ்க்கையில் நெறியோட நடக்கணும். சரியா

நேர்மையே வெல்லும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+