• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
|

எண்ணமே செயல்..!

சுகி சிவம்

மனித வாழ்வை அவரவர் எண்ணங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன. எண்ணங்கள் செயலாக வெளிப்படுகின்றன. சொல் செயலாக மாறுகிறது. எனவே மனத்தில் இருந்து தோன்றுகிற எண்ணங்கள் சொல்லாகி, செயலாகி நம் வாழ்வாகி விடுகிறது என்பதை உணர வேண்டும்.

ஒரு விதை, செடியாகி, பூவாகி, காயாகி, கனியாகி மீண்டும் விதையாவது போல எண்ணம் சொல்லாகி, செயலாகி, விளைவாகி, வெவ்வேறு எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. நாம் நனைப்பது, சொல்வது எப்படி செயலாகும் என்று பலர் கேட்பார்கள்.

இந்த உலகம் என்பதும் அது இப்படி இருக்கிறது என்பதற்கும் காரணம் கடவுளின் எண்ணம். ஹிந்துமதம், வேதங்களில் இந்த உலகக் கடவுளின் சங்கல்பம் அதாவது உறுதியான ஓர் எண்ணம் என்று வர்ணிக்கிறது. பைபிளிலும், குரானிலும் கடவுள் பூமி இருக்கட்டும் என்றார் பூமி உண்டாயிற்று என்பது போன்ற கருத்துக்கள் அடங்கிய வாசகம் உண்டு.

எனவே வாழ்க்கை என்பது எண்ணங்கள் மற்றும் சொற்களின் விளைவுதான். இராமாயணத்தில் உயர்ந்தவளான சீதை அக்கினிப்பிரவேசம் செய்ய நேர்ந்தது ஏன்? ஒழுக்கம், நேர்மையும் உள்ள பெண்ணுக்கு இந்தத் தண்டனை எப்படி ஏற்பட்டது.?

சீதையை அடைய நினைந்த இராவணன் மாயமானாக மாரீசன் என்பவனை அனுப்பினான். கொம்பெல்லாம் வைரம். குளம்பெல்லாம் வைடூரியம். உடம்பெல்லாம் பொன்னாக அந்த மான் சீதை முன் துள்ளிக்குதித்தது. மாயமானாயினான். மாயமானாயினான். என்று மான் துள்ளுகிற மாதிரியே எழுதுகிறார் கம்பன். மாய என்றால் மாயை என்று ஒரு பொருள். சாக என்று இன்னொரு பொருள். இரண்டையும் இணைத்தது கம்பன்கவி.

இந்தக் காலத்தில் , இங்கிலீஷ் மற்றும் தமிழ் கலந்து இராமாயணம் சொல்லும் நாங்கள், சீதை மான் கேட்டதை வேடிக்கையாக இப்படிச் சொல்லுவோம். அதோ போகிறது பொன்மான். நான் ஒரு பெண்மான். ராமா நீர் எனது எஜமான்... கமான்...மானைப் பிடித்துத்தா! தமிழ்ப்பற்றாளர்கள் எங்களை மன்னிக்க.

மானைத் தேடி ராமன் புறப்பட்டதும் இலக்குவன் தடுத்தான். வேண்டும் என்றால் தானே பிடித்துத்தருவதாகவும் சொன்னான். சீதை ஏற்கவில்லை. மான் முக்கியம் அல்ல. மானை ..மனைவிக்காக சிரமப்பட்டு கணவன் பிடித்துத் தருவதே மகிழ்ச்சி என்றாள் சீதை. இது மனைவிகளின் பிடிவாதம். தன் பொருட்டு கணவன் கஷ்டப்படுவதில் பெருமிதமான கர்வம்.

ஆணுக்கும் இந்தக் குரூரமான கர்வம் உண்டு. தான் வீடு வருகிற வரை சாப்பிடாமல் மனைவி காத்திருப்பதை வெளிவேஷத்திற்குக் கண்டிப்பார்கள். நீ சாப்பிட வேண்டியதுதானே என்பார்கள். ஆனால் அவள் காத்திருப்பதில் ஒரு சாம்ராஜ்யத்தை அடைந்த பெருமிதம் ஒவ்வொரு ஆணுக்கும் உண்டு.

இராமன் மானைத்தேடி ஓட .... மான் ஓட....இறுதியில் இலக்குவன் சொன்ன மாதிரி வஞ்சனை மான் என்று அறிந்து அம்பு விட்டுக் கொன்றான் இராமன். சில பேர் சாகும்போது கூட பிறருக்குக் கெடுதல் செய்வார்கள். அந்த மாதிரி பொன் மான் சாகும்போதும் பொய்க்குரலில் இராமன் மாதிரி கத்தியது. ஹே லட்சுமணா..ஹே சீதா.. என்று பொய்யாக அலறிவிட்டுச் செத்தது.

எங்கள் ஊரில் ஒரு வஞ்சனையான கஞ்சன் இருந்தான். வாழ்நாாள் முழுக்க அவனால் அனைவருக்கும் துன்பம். அவன் சாகிற போது ஊர்ப் பெரியவர்களைப் பார்த்து நான் மகா பாவி. சாகும் போதாவது எனக்குத் தண்டனை வேண்டும். நான் செத்ததும் அடக்கம் செய்யும் முன் எல்லாரும் என்னை செருப்பால் இரண்டு அடி அடித்து அடக்கம் செய்ய வேண்டும் என்று பரிதாபமாக வேண்டினான். உயிர் பிரிந்தது.

தவறு என்றாலும் அவனது கடைசி ஆசை என்பதால் ஊர்ப்பெரியோர்கள் செருப்பால் இரண்டு தட்டு தட்ட பெரியவர்களைப் போலீஸ் வந்து கைது செய்து விட்டது. பிணத்தை அவமதிப்பது குற்றம் என்று நீதிமன்றத்தில் நிறுத்தியது போலீஸ். அவனது கடைசி ஆசை என்று பெரியோர்கள் சொல்ல போலீஸ் நிம்பவில்லை. காரணம், சாகும்முன் அவன் போலீசுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தான்.

இந்த ஊர்க்காரர்கள் என்மீது பகையாக இருக்கிறார்கள். உயிரோடு இருக்கும் வரை என்னை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால்தான் இறந்தபிறகு என்னைச் செருப்பால் அடிக்க முடிவு செய்துள்ளனர். எனவே அப்படி நடந்தால் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று எழுதியிருந்தான்

இப்படி செத்தும் கெடுக்கிற ஜென்மங்கள் சில உண்டு. மாரீசன் அந்த ஜாதி, இராமன் போலவே கத்தியதும் இராமன் குரலோ என்று கலங்கிய சீதை துடித்தாள். தவித்தாள். அழுதாள். இது தவறில்லை. கணவன் பலசாலி என்றாலும் பாசமுள்ள மனைவி பயந்து போவது இயற்கை.

அடுத்து இலக்குவனைப் பார்த்துச் சீறினான். நீ நிற்பது நெறியா என்றாள். உன்மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றாள். இது தவறு. சின்னக்குழந்தைகள் தன் தவறை யாராவது சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டியவர்கள் மீது தவறு சொல்லும். அந்தச் சின்னப் பிள்ளை மாதிரி சீறினாள். அடுத்து ஒழுக்கத்தைச் சந்தேகப்பட்டது குற்றம் போலத் தோன்றும்.

ஆனால் இலக்குவனது ஒழுக்கத்தின் சீதை வைத்த மரியாதையில் அப்படிச் சொன்னாள் என்பது என் கருத்து. ஒழுக்கத்தைக் குறை சொன்னால்தான் ஒழுக்கத்தின் மீது மரியாதை வைத்துள்ளவன் இராமனைத் தேடி நகருவான் என்று அப்படி சொல்லி இருக்கலாம்.

அடுத்துப் பேசியது அபஸ்வரம். சுருதி விலகிய பேச்சு. நெருப்பு தெரித்த மாதிரி வார்த்தை வந்தது. நீ இங்கிருந்து போகவில்லை என்றால் நான் நெருப்பில் விழுவேன். கண்டிப்பாக நெருப்பில் விழுவேன் என்றாள். நெருப்பில் விழலாம் என்ற எண்ணம் அழுத்தமாக வந்துவிட்டது. அது சொல்லாக வெளிவந்தது.

பின்னால் சீதை அக்னிப் பிரவேசம் செய்ய நேர்ந்தமைக்கு இதுவே காரணம். நெருப்பில் விழுவேன் என்ற அவள் சொல் பலிக்காமல் போகுமா? பலித்து விட்டது. இராமன் சீதையின் ஒழுக்கத்தை விமர்சனம் செய்கிற துயரமான சம்பவம் நடந்தது. அடுத்து எந்த இலக்குவனிடம் நெருப்பில் விழுவேன் என்றாளோ அதே இலக்குவனை அழைத்து,""இளையவா இடுதி நீ என்று சீதை சொல்வதாகக் கம்பர் எழுதுகிறார்.

வாழ்வார்க்குச் சீதேவி வாயிலே என்று என் அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. நமது சொல்லும் நினைப்புமே நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன. இதே சீதை ஆண்டாளாகப் பிறந்த போது நடக்க முடியாத நன்மையை நினைத்தாள்...சொன்னாள்.. நடத்திக் காட்டினாள்.

எப்படிப் பெண்ணாக மண்ணுலகில் பிறந்த ஒருத்தி கோயிலில் இருக்கிற கடவுளை மணப்பேன் என்றாள்? நடக்கிற காரியமா இது? ரங்கம் பெருமாளையே கோயிலில் மணந்து சாதித்தாள். எனவே எண்ணிய எண்ணியாங்கு எய்துவாழ் எண்ணியந் திண்ணியராகப் பெறின் என்ற திருக்குறள் அழியாத உண்மை.

மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பினார். தன்னைப் பார்த்து பலமுறை சொல்லிக் கொண்டார். அவருக்கு மாலைகள் விழுந்தவண்ணம் இருந்தன.

தமிழ்த்திரையுலகப் பின்னணிப் பாடகர்களில் கொடிகட்டிப் பறந்த பெருமை உயர்திரு டி.எம்.செளந்தர்ராஜன் அவர்களுக்கு உண்டு. எக்குத்தப்பாக அவர் பாடி ஒரு பாட்டு வெற்றி பெற்றது. நான் ஒரு ராசியில்லாத ராஜா என்ற பாட்டு அதன்பிறகு அவர் திறமையிருந்தும் குரல் இருந்தும் பழைய இடத்தை அடைய முடியவில்லை.

எனவே வார்த்தைக்கும், வாழ்வுக்கும் சம்பந்தம் உண்டு. வாழ்க வையகம். வாழ்க வளமுடன் என்று ஒருவரை ஒருவர் வாழ்த்தும் உலகு தழுவிய இயக்கம் ஒன்றை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தொடங்கியிருக்கிறார். இப்படி வாழ்த்த வாழ்த்த வையகம் வாழும்.

தேசிய கீதம் என்று விழாக்களின் இறுதியில் அறிவித்ததும் பலர் கேசட்டைப் போட்டு விடுகிறார்கள். இது தவறு. கூட்டத்தில் எல்லாரும் வாய்விட்டு தேசத்தை வாழ்த்திப் பாடினால் தேசம் வாழும். டேப் ரிக்கார்டர் அலறினால் தேசம் வாழ்ந்து விடுமா?

"ஜெய்ஹிந்த்" ஜெய்ஹிந்த் என்று எல்லாரும் வாழ்த்திய போதுதான் இந்தியா ஜெயித்தது. எனவே வார்த்தைகள் தான் வருங்கால வாழ்க்கையின் வரவேற்புத் தோரணங்கள்.

இந்தக் காரணங்களிலும், தோரணங்களிலும் மிகவும் ஜாக்கிரதையாய் இருக்கலாமே!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more