For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
மண்டபம் முகாமில் அவல நிலையில் வாழும் இலங்கை அகதிகள்

மண்டபம்:

இங்கே மின்சாரம் கிடையாது, நோய் வந்தால் நல்ல டாக்டர் கிடையாது. கிட்டத்தட்ட சிறைக் கொட்டடி போல ஒரு அறை. இப்படி பல அசெளகரியங்களுடன்உள்ளுக்குள் குமுறிக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர் மண்டபத்திலுள்ள அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள்,

இலங்கையின் வட பகுதியில் பல ஆண்டுகளாக ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலின் விளைவாக அங்கிருந்து கள்ளத்தோணியில் தமிழகத்திற்கு அகதிகளாக வரத் துவங்கினர் இலங்கைத் தமிழர்கள். அவர்களது நுழைவாயிலாக உள்ளது தனுஷ்கோடியும், மண்டபமும்.

தமிழகத்தில் மொத்தம் 129 அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பழமையானது மண்டபம் முகாம். அகதிகளாக வருவோர் முதலில்இங்கு அழைத்தது வரப்படுவர். அவர்களிடம் மூன்று நாட்களுக்கு விசாரணை நடத்தப்படும். புலிகள் உள்பட எந்த தீவிரவாத அமைப்பையும்சேராதவர்கள் என்று நிரூபனமானால், அவர்களுக்கு முகாமில் தங்க அனுமதியளிக்கப்படும்.

முகாமில் தங்க அனுமதிக்கப்படும் அகதிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் முகாமுக்குள் வழங்கப்படும் அரிசி உள்ளிட்டஉணவுப் பொருட்களை சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

வரிசையாக சின்னச், சின்ன அறைகளாக அகதிகளுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குதான் அவர்கள் தங்க வேண்டும். சிலகுடும்பங்களுக்குத் தேவைக்கேற்றபடி இரண்டு அறை கொண்ட இருப்பிடம் தரப்படும். ஒவ்வொரு அறையும் மிகவும் சிறியது.

பல அறைகளில் ஐந்து பேருக்கும் மேல் வசித்து வருகின்றனர். பலர் இடம் போதாததால், அறைகளுக்கு வெளியே குடிசை போட்டுக் கொண்டுஇருக்கின்றனர். இங்குதான் பல குடும்பங்களின் சமையல் நடக்கிறது. இரவில் தூங்குவதற்கு இவற்றை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அறைகள் அமைந்துள்ள ஒவ்வொரு பிளாக்கிலும் ஒரு கழிப்பறை உண்டு. இவை பல நேரங்களில் சுத்தமில்லாமலும், பயன்படுத்த இயலாத நிலையிலும்உள்ளன.

மண்டபம் முகாமில் 1500 அகதிகள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் 8000 அகதிகள் வரை அங்கு இருக்கலாம் என்றுஉறுதிப்படுத்தப்படாத தகவல் கூறுகிறது.

யாழ்ப்பாணத்தை விட இங்கு வாழ்க்கை மிகவும் மோசமாக இருப்பதாக அகதிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இருப்பினும் போரில் சிக்கிஉயிரிழப்பதிலிருந்து தங்களைக் காப்பாற்றி வாழ வழி கொடுத்திருப்பதால் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

மண்டபம் முகாமில் பல ஆண்டுகளாக வசித்து வரும் டேணியல் என்பவர் கூறுகையில், காலை 6 மணிக்கு முகாமில் மின்சாரம் துண்டிக்கப்படும். அதன் பிறகுஎப்போது வரும் என்று தெரியாது. நாங்கள் மின் விசிறிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி இல்லை. விலங்குகளைப் போல வசிக்கிறோம். டி.வி வைத்துக்கொள்ளவும் எங்களுக்கு அனுமதி இல்லை என்கிறார்.

இலங்கைக் கடற்படையில் பணியாற்றி வந்தவர் டேணியல். கிளிநொச்சி என்ற பகுதியைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சண்டைமூண்டபோது, இவரது பண்ணைகள், வீடு ஆகியவை சூறையாடப்பட்டன. மகன், மகள் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். இதையடுத்து மனைவியுடன்தமிழகத்திற்கு அகதியாக வந்தார்.

டேணியலின் மனைவிக்கு நீண்டகாலமாக உடல் நலம் சரியில்லை. இவருக்குச் சிகிச்சை பார்க்க வேண்டுமென்றால், முகாமுக்கு அவ்வப்போது வரும்டாக்டரிடம்தான் காட்ட வேண்டும். நல்ல டாக்டராக பார்க்க வேண்டுமானால், வெளியே செல்ல வேண்டும். ஆனால் அதற்குத் தேவை பணம். அதுஇல்லாததால், வேறு வழியின்றி முகாம் டாக்டரிடம் காட்டிக் கொண்டுள்ளார் டேணியல்.

குமுதா என்ற மற்றொரு அகதி கூறுகையில், எங்களுக்கு மாதத்திற்கு ரூ. 200 மட்டுமே அரசு வழங்குகிறது. இதை வைத்துக் கொண்டு எங்களால்எப்படி நல்ல டாக்டரிடம் செல்ல முடியும்?. மண்ணெண்ணை, காய்கறி, சோப், சமையல் பொருட்கள் ஆகியவற்றை இந்தப் பணத்தைக் கொண்டுதான் வாங்கவேண்டும்.

இந்தப் பணத்தை அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டுமானால், முதலில் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் முகாமில் லஞ்சம்என்கிறார்.

தேசிகன் என்ற மற்றொரு அகதி கூறுகையில், லஞ்சத்தை முகாமில் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் யாழ்ப்பாண அகதிகள்தான். மன்னார் பகுதி அகதிகள்மிகவும் ஏழ்மையானவர்கள். ஒன்றுமேயில்லாமல் இங்கு வந்தார்கள். உண்மையில் அவர்கள்தான் அகதிகள் என்ற சொல்லுக்குப்பொருத்தமானவர்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் பணக்காரர்கள் அல்லது வசதியுடையவர்கள். நகைகள், பணம் ஆகியவற்றுடன் தமிழகம் வந்தார்கள். முகாமுக்குவந்தவுடன், அதிகாரிகள், ஊழியர்களுக்கு பணம் அல்லது நகையைக் கொடுத்து விட்டு முகாமில் தங்காமல் வெளியேறி விட்டார்கள். அங்கிருந்துமேற்கத்திய நாடுகளில் உள்ள தங்களது உறவினர்களிடம் சென்று விட்டார்கள். பலர் இந்தியர்களைப் போல நிம்மதியாக வெளியே வசித்து வருகிறார்கள்என்றார் தேசிகன்.

அகதிகளாக வருவோர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும். இருப்பினும் முகாமில் வசிக்கும் காலத்தில் கிட்டத்தட்டஒரு சிறை வாழ்க்கையையே அவர்கள் வாழ்ந்து முடித்து விடுகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X