தாயையும், தனயனையும் மோத விடும் அதிமுக
சென்னை:
அரசியலில் பதவியை காப்பாற்றிக் கொள்ள தாயும் மகனும் கூட வசை மாரி பொழிய வேண்டியதிருக்கிறது.
தனது கட்சித் தலைவி ஜெயலலிதாவை விமர்சித்தார் என்ற காரணத்திற்காக சொந்த மகனான தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை,அரைவேக்காடு என்று கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிமுக மகளிரணித் தலைவி சுலோசனா சம்பத்.
வீரப்பன் விவகாரத்தில் தமிழக, கர்நாடக மாநில முதல்வர்கள் பதவி விலக வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கைவெளியிட்டார்.
கர்நாடக முதல்வர் காங்கிரஸ்காரர் என்பதால் தமிழக காங்கிரஸ் தலைவரான இளங்கோவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஜெயலலிதாவின் இந்த வாதம் சிறுபிள்ளைத்தனமானது என்று இளங்கோவன் விமர்சித்தார். அவ்வளவு தான், அ.தி.மு.க. வட்டாரமே பொங்கிஎழுந்து விட்டது.
அ.திமு.க .சார்பில் "அறிக்கைப் புயல் காளிமுத்து பெயரில் இளங்கோவனுக்கு கண்டனம் என்ற பெயரில் ஒரு சூடான அறிக்கை வெளி வந்தது.
இளங்கோவனோடு நிறுத்தாமல் சோனியாவையும் வம்புக்கு இழுத்து தாறுமாறாக தாக்கி விட்டனர். அம்மாவின் ஆசீர்வாதத்தோடு வெளியானஇந்த அறிக்கையின் மூலம் இரு கட்சிக்கும் இடையிலான கூட்டணி உறவை கொச்சைப்படுத்தி விட்டனர். அதோடு நிற்கவில்லை இந்த அறிக்கைப் போர்.
வெள்ளிக் கிழமை இளங்கோவனை கண்டித்து அவரது தாயார் சுலோசனா சம்பத் பெயரில் அ.தி.மு.க. ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையிலும்இளங்கோவனுக்கு கடும் அர்ச்சனை தான்.
அறிக்கை இதுதான்:
சமூக பொறுப்புணர்வோடு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எங்கள் தலைவி வெளியிட்ட அறிக்கையை விமர்சித்து தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் தனது அறிவீனத்தை வெளிப்படுத்தி விட்டார்.
கடத்தல்காரனின் மோசடி வித்தைக்கு ஏற்ப நாடகம் ஆடுவதில் முன்னணியிலிருப்பது கர்நாடகமா, தமிழ்நாடா என்ற அளவுக்கு நிலைமையைச் சீரழியவைத்ததில் கருணாநிதிக்கும் பொறுப்பு உண்டு. கிருஷ்ணாவுக்கும் பொறுப்பு உண்டு.
கடத்தல்காரனிடம் கைகட்டி நிற்கும் கருணாநிதியைப் பதவி விலகச் சொல்லும் அதே காரியத்தைச் செய்யும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவையும் பதவிவிலகக் கோரியுள்ளார்.
இதனை அரசியல் முதிர்ச்சியோடு அணுகாமல் சிறுபிள்ளைத்தனமாக ஆத்திரப்பட்டு அறிக்கை வெளியிட்டு வேதனைப்படும் அளவுக்கு இளங்கோவன்செய்கை அமைந்து விட்டது.
கொடியவன் மிருகவெறிக்கு தாலாட்டுப் பாடும் கருணாநிதிக்குப் பாராட்டு தெரிவிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் நிலைமை தரம் கெட்டுப் போகஇளங்கோவன் காரணமாகி விட்டார்.
சத்தியமங்கலம் அருகிலுள்ள வெள்ளித் திருப்பூர் காவல் நிலையத்தைச் சூறையாடும் அளவுக்கு வீரப்பனுக்கு வலுவும் வசதியும் தந்து வளர்த்த கருணாநிதியைக்கண்டிக்க வேண்டிய இளங்கோவன், அதை விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் அறிக்கை வெளியிடுவதும்,பேட்டி கொடுப்பதும் கேவலமானசெயலாகும்.
கர்நாடக மாநிலத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் ஜனாதிபதிக்கு ஒரு மனுவை அனுப்பியிருக்கிறார். அந்த மனுவில்வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக எஸ்.பி.அரிதேஸ் இருந்தபோது அரசுக்கு ஒரு அறிக்கை கொடுத்தாராம். அதில்வீரப்பனின் நடமாட்டம் குறித்தும், அவரால் யார் யாருக்கு ஆபத்து உள்ளது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதன்படி நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது ராஜ்குமார் கடத்தப்பட்டிருக்க மாட்டார். இதில் கர்நாடக அரசு அலட்சியமாக நடந்து கொண்டது. இதற்குமுதல்வர் கிருஷ்ணாவும், காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்க்கேயும் தான் பொறுப்பு. எனவே அவர்கள் பதவி விலக வேண்டும் என்றுகுறிப்பிட்டிருக்கிறார். இதுதான் கர்நாடக மாநிலத்தில் இருக்கிற பெரும்பாலோரின் கருத்து.
இதைத்தான் எங்கள் தலைவி ஜெயலலிதா சுட்டிக் காட்டினார். இதை அறிவுப்பூர்வமாக அணுகாமல் ஆத்திரத்தோடு விமர்சித்த அரைவேக்காடுஇளங்கோவனுக்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தாய் தனது மகனை கண்டித்துள்ளார்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...!
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!