கோவையில் 3 லட்சம் முட்டைகள் அழிப்பு
கோவை:
கறிக் கோழியின் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள கரு முட்டைகளை அழிக்க பிராய்லர் கோ ஆர்டினேசன் கமிட்டி முடிவுசெய்துள்ளது. இதன் முதல் கட்டமாக மூன்று லட்சம் முட்டைகள் அழிக்கப்பட்டன.
கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பெரும் தொழிற்சாலைகளாக பிராய்லர்ஸ் எனப்படும் கறிக் கோழி உற்பத்தி பெருமளவில் நடந்துவருகிறது. இந்தப் பகுதியில் உள்ள கறிக் கோழிகள் அனைத்தும் கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டிலும் இதன் விற்பனை இருந்து வருகிறது. நாமக்கல் மற்றும் கோவை பகுதிகளில் உற்பத்தியாகும் கறிக் கோழிகளில் 50 சதவீதம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக கறிக் கோழியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. கறிக் கோழியின் உற்பத்தி செலவு ரூ. 28 ஆக இருந்து வருகிறது. ஆனால்,விற்பனை விலை ரூ. 25 ஆக மட்டுமே உள்ளது.
இந்நிலையில் கறிக் கோழியின் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, கரு முட்டைகளை அழிக்க பிராய்லர் கோ ஆர்டினேசன் கமிட்டி முடிவு செய்தது. கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்படுத்தியுள்ள இந்த கமிட்டி, கறிக் கோழி மற்றும் முட்டை விலையை நிர்ணயிப்பதுடன், அவ்வப்போது விலைஉயர்வையும் கட்டுப்படுத்தி வருகிறது.
கடந்த 1995ம் ஆண்டு உற்பத்தியான கறிக் கோழியின் அளவு, 2000ம் ஆண்டில் 100 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் நுகர்வோரின் எண்ணிக்கைமற்றும் விற்பனை 15 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
எனவே, தேவைக்கு மேல் உற்பத்தியானதால், கறிக் கோழி குஞ்சுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிராய்லர் கோ ஆர்டினேசன் கமிட்டி முடிவுசெய்தது. இதன்படி 25 லட்சம் முட்டைகளை அழிக்க இக்கமிட்டி முடிவு செய்தது.
இந்த முட்டையின் மதிப்பு ஒரு கோடியே 25 லட்ச ரூபாயாகும். முட்டைகளை அழிக்கும் முதல் முயற்சியாக உடுமலைப் பேட்டை அருகே உள்ளமானுப்பட்டியில் செப்டம்பர் 17ம் தேதி 3 லட்சம் முட்டைகள் அழிக்கப்பட்டன.
இந்த முட்டைகளை உணவாகப் பயன்படுத்த இயலாது என்பதால், இவற்றை ஏழை மக்களுக்கு வழங்க இயலவில்லை என கமிட்டியின் உறுப்பினர்மார்ட்டின் கூறினார். அவர் மேலும், இந்த கறிக் கோழியின் கரு முட்டைகளின் மூன்றே நாட்களில் சாதாரண வெப்ப நிலையில் கரு உருவாக முடியும்.
எனவே, இதனைப் பயன்படுத்துவது உடல் நலக் குறைவை ஏற்படுத்தும். எனவே இதனை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கறிக் கோழியின் விலைவீழ்ச்சியுடன், கேரள அரசு மாநிலத்திற்குள் கோழி எடுத்துச் செல்வதற்கும் வரி விதித்துள்ளதால், கடினமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியுள்ளது.
எனவே, கட்டுபடியாகும் விலையை பெறுவதற்காக இந்த முட்டைகளை அழித்து, கோழி உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிக உற்பத்தியை ஏற்றுமதி செய்ய வேண்டுமானால், நமது நாட்டில் அத்தகைய பதப்படுத்தும் நவீனத் தொழில் நுட்பம், குளிர்சாதன வசதி ஆகியவைபோதுமானதாக இல்லை. மேலும், உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளுடன் போட்டியிட முடியவில்லை என்றார் மார்ட்டின்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!