பா.ஜ.க. அவசர செயற்குழுக் கூட்டம்- டெல்லியில் கூடுகிறது
டெல்லி:
தெகல்கா டாட் காம் கிளப்பிய ஆயுத பேர ஊழல் விவகாரம் ஆளும் பா.ஜ.கவை மிகவும் பாதித்துள்ளதையடுத்து அதை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை அக் கட்சி எடுக்கத் துவங்கியுள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும் ஆளும் கூட்டணிக்கு எதிரான மக்கள் அலை தோன்றியுள்ளதுதெரியவந்துள்ளது. 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த எதிர்ப்பு அலையை முறியடிக்கும் தீவிரமுயற்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளது.
சட்ட அமைச்சரான ஜேட்லி, செய்தித்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறந்த பேச்சாளரான அமைச்சர் வெங்கைய்யா நாயுடுஆகியோரிடம் இந்த விவகாரத்திலிருந்து கட்சியை வெளியே கொண்டு வரும் பணி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், எப்படியாவது இதில் அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. எதிர்க் கட்சிகளின் உதவியோடு கடந்த 7நாட்களாக இந்திய நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் காங்கிரஸ் தடுத்துவிட்டது. இதையடுத்து நாடாளுமன்றக்கூட்டத்தையே அரசு அடுத்த மாதம் வரை ஒத்தி வைத்துவிட்டது.
நீங்கள் போபர்ஸ் விவகாரத்தில் செய்யாத ஊழலையா நாங்கள் செய்துவிட்டோம் என பாரதீய ஜனதா கேட்கிறது.அப்படியென்றால் ஊழல் செய்ய உங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று சொல்கிறீர்களா என பா.ஜ.கவை நோக்கி எதிர்க்கட்சிகள் கேட்டு வருகின்றன.
பிரச்சனையின் ஆழம் பா.ஜ.கவை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளதால் உடனடியாக இந்தப் பிரச்சனைக்கு மருந்து தேடும்முயற்சிகளில் வாஜ்பாய் ஈடுபட்டுள்ளார். நாளை (சனிக்கிழமை) டெல்லியில் அவசர அவசரமாக பா.ஜ.க. செயற்குழுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் 2 நாட்கள் நடக்கும்.
இதில் நாடு முழுவதும் இருந்தும் 150 பிரதிநிதிகள் கலந்து கொள்வர். அடுத்த வாரம் கொல்கததாவில் நடத்தத்திட்டமிடப்பட்டிருந்த இந்தக் கூட்டம் மம்தா பானர்ஜயின் ராஜினாமாவால் அவசரமாக டெல்லியில் நாளையே கூட்டப்படுகிறது.
வரும் 25ம் தேதி டெல்லியில் பெரிய பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வாஜ்பாய் உள்பட பல தலைவர்கள் பேசஉள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி, ஊழலில் பெயர் அடிபடும் சமதா கட்சியின் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மறுமலர்ச்சிதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ ஆகியோர் இதில் பேச உள்ளனர்.
அதே நேரத்தில் கட்சிக்காக பணம் வாங்கிய பங்காரு லட்சுமணனை பா.ஜ.க. தலைவர் பதவிலிருந்து நீக்கிய செயல் தவறானதுஎன பா.ஜ.கவில் உள்ள பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட தலைவர்கள் குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளனர். அவர் தனக்காக பணத்தைவாங்கவில்லை. கட்சிக்காக வாங்கினார். ஆனால், அவர் தலித் என்பதால் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்என்கின்றனர். உள்கட்சியிலேயே கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு பா.ஜ.கவை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!