அரசு தூதராக காட்டுக்கு செல்ல தயார்: கொளத்தூர் மணி
கோபி:
அரசு தூதுவராக காட்டுக்குள் அனுப்பினால் தான் வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பெரியார் திராவிடர்கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்தமுறை நடந்த வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அப்பாவிபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் 59 பெண்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம்பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட சதாசிவம் கமிஷனின் விசாரணை இன்னமும் முடிவடையவில்லை.குற்றச்சாட்டுகளில் சேர்க்கப்பட்டவர்களில் தேவாரமும் ஒருவர்.
அவர் மீண்டும் அதிரடிப்படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை கமிஷன் முன் சாட்சியம் அளிக்க வேண்டியபொதுமக்கள் வாழும் காட்டுப் பகுதியில் முகாமிட்டு இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பதுசந்தேகத்திற்குரியது. எனவே விசாரணை முடிந்த பின் அவர் தேடுதல் வேட்டையை தொடரட்டும்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது அதிரடிப்படிையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக,கர்நாடக அரசுகள் ரூ 5 கோடி வழங்குவதாகவும், இடைக்கால நிவாரணமாக ரூ 1 கோடி வழங்குவதாகவும் ஒப்புக் கொண்டன.ஆனால் இதுவரை எந்த பணமும் கொடுக்கப்படவில்லை.
இந்த தொகையை வழங்க அரசு உடனே ஆவன செய்ய வேண்டும். பெங்களூரிலிருக்கும் வள்ளுவர் சிலையை திறப்பதாககர்நாடக முதல்வர் ஒப்புக் கொண்டார். உடனே வள்ளுவர் சிலை திறக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை இரு அரசுகளும் நிறைவேற்றினால், நான் அரசு தூதராக காட்டுக்குச் சென்று வீரப்பனுடன் பேசதயாராகவுள்ளேன் என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!