இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கு தடை - வன்முறையில் 3 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இஸ்லாமிய மாணவர்களின் அமைப்பான "சிமி" இயக்கத்திற்குத் தடை விதித்து, மத்திய அரசு இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, 3 "சிமி" தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்துஏற்பட்ட வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் இந்த இயக்கத்திற்குத் தொடர்பு இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, இந்த இயக்கத்தைத் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ், "சிமி" இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், தொடர்ந்து சிலமாதங்களாகவே இந்த இயக்கம் பெரும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தன.

இதனால் இந்த மாநிலங்கள் மத்திய அரசுக்குத் தொடர்ந்து விடுத்த கோரிக்கைகளை அடுத்து, "சிமி" இயக்கத்தைமத்திய அரசு தடை செய்துள்ளது.

தேசத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்த இயக்கத்தைச் சேர்ந்த 3 தலைவர்களும்உத்தரப் பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, லக்னோவில் வன்முறை வெடித்தது. கைது செய்யப்பட்ட "சிமி" தலைவர்களை விடுதலைசெய்யக் கோரி, மக்கள் வன்முறையில் இறங்கினார்கள்.

போலீசாருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள், திடீரென்று வன்முறையில் இறங்கினர். நிலைமைகட்டுக்கடங்காமல் போகவே, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில், 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும்2 பேர் படுகாயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அதிரடியாக 67 "சிமி" தலைவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற