பெங்களூர், மைசூருக்கு ரயில்கள் ரத்து: பஸ்களும் ஓசூருடன் நிறுத்தம்
சென்னை:
நாகப்பா கொல்லப்பட்டதையடுத்து தமிழகத்திலிருந்து பெங்களூர், மைசூருக்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.பெரும்பாலான பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழக மற்றும் கர்நாடக பயணிகள் பெரும் தொல்லைக்கு உள்ளாகநேர்ந்துள்ளது.
வீரப்பன் பிடியில் இருந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மரணமடைந்துள்ளதையடுத்து கர்நாடகத்தின்சில பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.
குறிப்பாக மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் ஆகிய பகுதிகளில் பெரும் வன்முறை மூண்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ், பெங்களூர் செல்லும் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய இருரயில்களும் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, பெங்களூர்-மைசூர் இடையிலான அனைத்து ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, தமிழகம்-கர்நாடகத்திற்கு இடையிலான பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலிருந்து பெங்களூர் செல்லும் பஸ்கள், ஓசூருடன் நேற்றிரவு நிறுத்தப்பட்டன. ஆனால், இன்று காலைமுதல் ஓரிரு பஸ்கள் மீண்டும் பெங்களூருக்குள் இயக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடக போலீசார் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்ததால் இந்த பஸ்களை இயக்குவதாக தமிழகபோக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழக பதிவு எண் கொண்ட பிற வாகனங்களைஓசூருக்கு மேல் செல்ல வேண்டாம் என போலீசார் தடுத்து வருகின்றனர்.
கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், தனியார் பஸ்கள்மட்டுமே ஓசூரைத் தாண்டி பெங்களூருக்குள் வருகின்றன.
தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான லாரிகள் ஓசூரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இது தவிர தமிழகத்தில் இருந்து மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துபஸ்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
சேலம் மாவட்டம் பாலாறு எல்லைப் பகுதியில் தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்குள் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.நூற்றுக்கணக்கான லாரிகள், பிற வாகனங்கள் கர்நாடகத்திற்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல, சத்தியமங்கலம், பன்னாரி பகுதியிலும் தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள்வாகனங்கள் வர அனுமதிக்கப்படுகின்றன. அப்படி வரும் தமிழக வாகனங்களில் பெரும்பான்மையானவை கண்ணாடிகள் உடைக்கப்பட்டுசேதத்துடன்தான் வருகின்றன.
-->


