மேட்டூர் அணை மூடப்பட்டது: சம்பா பயிர்கள் கருகும் அபாயம்
மேட்டூர்:
காவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுவது நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து சம்பா பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென்று குறைந்து வருவதால் எந்த நேரத்திலும் பாசனத்திற்காகதிறந்துவிடப்படும் நீர் நிறுத்தப்படலாம் என்று நேற்றுதான் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 அடியாகக் குறைந்துவிட்டதால், நேற்று மாலையே அணைமூடப்பட்டது.
பாசனத்திற்காகத் திறந்துவிடப்பட்டுக் கொண்டிருந்த மேட்டூர் அணை நீர் நின்று விட்டதைத் தொடர்ந்து, காவிரிடெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இப்பகுதிகளில் அரிசி விலை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டூர்அணையும் மூடப்பட்டு விட்டதால், அரிசி விலை கிடுகிடுவென்று உயரத் தொடங்கி விட்டது.
மொத்த வியாபாரிகள் அனைவரும் அரிசியை மூட்டை மூட்டையாகப் பதுக்கத் தொடங்கி விட்டதைத்தொடர்ந்தே இவ்வாறு விலை ஏறத் தொடங்கியுள்ளது.
கடந்த அக்டோபரில் பருவமழை நன்றாகத்தான் தொடங்கியது. ஆனால் ஒரு சில நாட்களே பெய்த மழை அதன்பின்னர் ஏமாற்றி விட்டது. பருவமழை சீசனும் முடிந்து விட்டது. இனி மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகமிகஅரிது.
எனவே காவிரி ஆற்றில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட்டால்தான் சம்பா பயிர்கள் பிழைக்க வாய்ப்புள்ளது.இதற்காக அந்த மாநிலத்தை தமிழக அரசு உடனடியாக வற்புறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கு காரணமாக ஏற்கனவே தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடியை இழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயாவுக்கு ராமதாஸ் வேண்டுகோள்:
இதற்கிடையே காவிரியில் உடனடியாக நீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதாவுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சுமார் 6.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ரூ.1,200 கோடி மதிப்புள்ள சம்பா மற்றும் குறுவைப்பயிர்கள் ஏற்கனவே கருகிவிட்டன.
இந்நிலையில் காவிரி டெல்டா விவசாயிகள் தற்போது பயிருட்டுள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
எனவே காவிரியில் 15 டி.எம்.சி. நீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவை ஜெயலலிதா வற்புறுத்த வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரை கர்நாடக அரசு காவிரியில் 108 டி.எம்.சி.நீரைத் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் 70 டி.எம்.சி. நீரை மட்டுமே அம்மாநிலம் திறந்து விட்டுள்ளது.
எனவே சம்பா பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் உடனடியாக நீர் திறந்துவிட கிருஷ்ணாவை ஜெயலலிதாவற்புறுத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.
-->


