மனித குளோனிங்: கலாம் கடும் எதிர்ப்பு
மும்பை:
குளோனிங் முறை மூலம் மனிதனை உருவாக்கும் முறைக்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குளோனிங் மூலம் மனிதனை உருவாக்குவது குறித்த அறிவியல்ஆராய்ச்சிகள் வெளியாகி மக்களை ஆச்சரியப்படுத்தின.
ஆனால் மனித குளோனிங்கால் பெரும் குழப்பம் ஏற்பட்டு விடும் என்று கூறி பலரும் அதைக்கடுமையாக எதிர்த்தனர்.
இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகின் முதல் குளோனிங் குழந்தை பிறந்து விட்டதாக,இது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் ஒரு நிறுவனம் தெரிவித்தது.
விரைவில் அடுத்தடுத்து குளோனிங் குழந்தைகள் பிறக்கப் போவதாகவும் அந்நிறுவனம்கூறியுள்ளது.
இந்நிலையில் குளோனிங் மூலம் மனிதனை உருவாக்கும் முறையை டாக்டர் கலாம் கடுமையாகஎதிர்த்துள்ளார். மும்பையில் நடந்த ஒரு விழாவின்போது அவர் வழக்கம்போல் மாணவ,மாணவிகளைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசுகையில்,
மனித குளோனிங் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இது ஒரு தவறான முறையாகும்.குளோனிங் மூலம் மனிதனை உருவாக்கக் கூடாது.
வரும் 2029ம் ஆண்டுக்குள் மனித மூளையை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்உருவாக்கப்படும். ஆனால் மனித மூளையை உங்களில் யாராவது உருவாக்க முடியுமா?
உலகின் பல இடங்களில் நடக்கும் போருக்கு வறுமைதான் காரணம். வறுமையை முற்றிலும் ஒழித்துவிட்டால் அதற்குப் பின் போர் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. மதம் மற்றும் பொருளாதாரப்பிரச்சனைகளும் போர் வரக் காரணமாக உள்ளன என்றார் டாக்டர் கலாம்.
விஞ்ஞானியாக இருந்து, பின்னர் நாட்டின் முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உங்கள்மனநிலை எப்படி இருந்தது என்று ஒரு மாணவி கேட்டபோது, "நான் எப்போதுமே ஒருவிஞ்ஞானிதான். இப்போது ஜனாதிபதி ஆகியுள்ளேன். அவ்வளவுதான்.
தலைசிறந்த ஒரு விஞ்ஞானி ஆவதற்கு சுமார் 40 ஆண்டு காலம் வியர்வை சிந்தியுள்ளேன். ஆனால்திடீரென்று ஜனாதிபதி ஆகிவிட்டேன்.
ஆனாலும் ஒரு ஜனாதிபதியாக இந்தியாவைப் பாதுகாப்புடன் எதிர்காலச் சந்ததியினரிடம்ஒப்படைப்பதுதான் என்னுடைய முக்கியக் குறிக்கோள்" என்று பதிலளித்தார் டாக்டர் கலாம்.


