For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நுழைவுத் தேர்வு ரத்துக்கு இடைக்காலத் தடை இல்லை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நுழைவுத் தேர்வு ரத்து மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.இதுதொடர்பாக தாக்கலாகியுள்ள வழக்குகளில் அரசுத் தரப்பு வருகிற 23ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளதைஎதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பி.டி.தினகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், அடுத்த கட்ட விசாரணை முடியும் வரை புதிய முறைப்படி மாணவர்சேர்க்கை இருக்காது. புதிய முறைப்படி மாணவர்களை சேர்க்க அரசுத் தரப்பில் கால அவகாசத்தை நீட்டிக்கவும் தயாராக இருக்கிறது.

இம்ப்ரூவ்மென்ட் முறைப்படி விண்ணப்பித்துள்ள மாணவர்கள், புதிய முறைப்படியான மாணவர் சேர்க்கைக்கு முந்தைய மதிப்பெண் சான்றிதழ்நகலுடன் விண்ணப்பித்தால் போதுமானது என்று தெரிவித்தார்.

இதை ஏற்ற நீதிபதி தினகரன் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி, புதிய முறைப்படி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு அரசுநிர்ணயித்துள்ள கால அவகாசம் 23ம் தேதிக்குப் பதில் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

மாணவர்களின் மனுக்கள் தொடர்பாக வருகிற 23ம் தேதிக்குள் அரசுத் தரப்பு பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை புதிய திட்டப்படிமாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது.

இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி தலைமையிலான முதலாவது டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்படுகிறது. மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தாக்கலாகியுள்ள மனுக்களின் நிலை குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று கூறி வழக்கை வருகிற 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அடுத்த கட்ட விசாரணை வரை புதிய முறைப்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட மாட்டாது என்று அரசுத் தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளதால்,அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

மீண்டும் விண்ணப்பங்கள் விநியோகம்:

இதற்கிடையே, பொறியியல் கல்வியில் சேர மீண்டும் இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகம்மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள மையங்கள் மூலம் இந்த விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே இம்ப்ரூவ்மென்ட் மதிப்பெண் அடிப்படையில்,விண்ணப்பித்துள்ளவர்கள், தங்களது முந்தைய மதிப்பெண் சான்றிதழின் நகலை மட்டும் அனுப்பினால் போதும்.

மதிப்பென் சான்றிதழ் நகல் இல்லாதவர்கள், தங்களது தேர்வு பதிவெண்ணை அனுப்பினால் போதும். வருகிற 23ம் தேதி வரை விண்ணப்பம் அனுப்பஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களின் சோகம்:

நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ரத்தினால் பாதிக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மிக சாதாரண குடும்பத்தைச்சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

வழக்கு தொடர்ந்துள்ள மாணவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். செருப்புத் தைக்கும்தொழிலாளியின் மகன், விவசாயியின் மகன், டெய்லரின் மகன் என மிகவும் சாதாரண, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது எதிர்காலம் குறித்த மிகப் பெரிய கவலையுடன் நீதிமன்றத்தைநாடியுள்ளனர்.

தமிழ் மீடியம் மாணவர்களுக்கு பாதிப்பு:

சுதாகர் என்ற மாணவரின் கதை மிகவும் சோகமானது. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயியின் மகனான சுதாகர், 2003ம் ஆண்டு நடந்த பிளஸ் டூ தேர்வில் 1083 மதிப்பெண்கள் பெற்றார்.அவரது டாக்டர் கனவை நிறைவேற்ற இந்த மதிப்பெண்கள் போதவில்லை.

இதனால் 2004ம் ஆண்டு நடந்த நுழைவுத் தேர்வுக்கு மிகக் கடுமையாக பாடுபட்டு தேர்வு எழுதி 95.31 மதிப்பெண்களைப் பெற்றார். இதுவும் போதாது என்பதால், மீண்டும் 2005ம் ஆண்டுநுழைவுத் தேர்வை எழுதினார். இந்த முறை அவருக்கு வெற்றி கிடைத்தது. நுழைவுத் தேர்வில் 99.17 மதிப்பெண்கள் பெற்றார்.

உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் அவருக்கு 297.42 கட் ஆப் மதிப்பெண்கள் கிடைத்தது. இதனால் தனது டாக்டர் கனவு நனவாகப் போகும் சந்தோஷத்தில் இருந்தார் சுதாகர்.

ஆனால் தமிழக அரசின் உத்தரவு அவருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

2 வருடங்கள் காத்திருந்து, கடுமையாக உழைத்ததற்குப் பலனே இல்லாமல் போய் விடும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக சோகத்துடன் கூறினார் சுதாகர்.

சுதாகர் தமிழ் மீடியத்தில் படித்தவர். அரசின் புதிய கொள்கை தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாக கூறுகிறார் சுதாகர்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் முகம்மது நிவாஸ். இவரது தகப்பனார் கெளஸ் பாஷா, சாதாரண செருப்புத் தைக்கும் தொழிலாளி. தனது மகன் குறித்து பாஷா கூறுகையில், கடந்த ஆண்டு எனதுமகன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் அவனுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை.

இதனால் இந்த முறை மிகக் கடுமையாக படித்து கூடுதலாக 30 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளான். எம்.பி.பி.எஸ். கிடைக்காவிட்டாலும், பல் மருத்துவ சீட்டாவது கிடைக்கும் என்றநம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அதிலும் இடி விழுவது போல அரசின் உத்தரவு அமைந்து விட்டது என கண்களில் நீர் தழும்ப கூறுகிறார் பாஷா.

இதே கதைதான் சென்னையச் சேர்ந்த ஹரி சங்கரின் நிலையும். கடந்த ஆண்டு இவர் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதியிருந்தார். ஆனால் அந்த மதிப்பெண்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டதால் மற்ற மாணவர்களைப் போல ஹரி சங்கரும், கிடைத்த கல்லூரியில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ரூ. 20,000 கொடுத்து கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துவந்தார்.

இந் நிலையில், இம்ப்ரூவ்மென்ட் தேர்வு செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்காக விண்ணப்பித்து கடுமையாக படித்துவந்தார்.

இவரது கடுமையான உழைப்பால் தற்போது 296.5 கட் ஆப் மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. இவரது ஆசையான மருத்துவ சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் இப்போதுதமிழக அரசின் உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹரிசங்கரின் தந்தை சாதாரண டெய்லர் ஆவார்.

இப்படி ஏகப்பட்ட சோகப் பின்னணிகளுடன் ஏராளமான மாணவர்கள் நீதிமன்றப் படியேறியுள்ளனர்.

இந் நிலையில் அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஆனாலும் மனுக்கள் தொடர்பாக வருகிற 23ம் தேதிக்குள் அரசுத் தரப்பு பதில் மனுவைத் தாக்கல் செய்யவும், அதுவரை புதிய திட்டப்படி மாணவர்சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் வழக்கு தொடர்ந்துள்ள மாணவர்கள் தங்களுக்கு ஏதாவதுவகையில் விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X