• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கூட்டணிக்கு அதிமுக தயார்: ஜெ

By Staff
|

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று முதல்வர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களைசந்தித்து விரிவாகப் பேசினார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. சட்டசபைத் தேர்தல் முதல் இலங்கை,அமெரிக்க, ஈரான் விவகாரங்கள் வரை முதல்வர் விலாவாரியாகப் பேசினார்.

செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது.அந்த சாதனைகளை முன் வைத்தை எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் மக்களை சந்திக்கப் போகிறோம்.

தேர்தலை மனதில் வைத்து எனது அரசு சலுகைகளை அறிவிக்கவில்லை. எனது தலைமையில் ஆட்சிக்கு வந்தது முதலேபல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுத் தான் வருகின்றன. புதிதாக நாங்கள் சலுகைகளை அறிவிக்கவில்லை.

எனது அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதல பாதாளத்தில் இருந்த நிதி நிலையை மீண்டும் சீராக்கிவளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளோம். இது சாதனை இல்லையா? 2 மாநிலங்களை அச்சுறுத்தி வந்த காட்டுக்கொள்ளையன் வீரப்பனை ஒழித்த சாதனை, நிரந்தரமாக குடிநீர்ப் பற்றாக்குறையால் தவித்து வந்த சென்னை மாநகருக்கு வீராணம்திட்டத்தை நிறைவேற்றி சாதனை, 3 ஆண்டுகளாக வறட்சியாலும், பின்னர் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் கனமழை, வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளை பாதுகாத்தது, இந்த பாதிப்புகளால் ஒரு பிரச்சினை கூட இல்லாமல்விவசாயிகளை காப்பாற்றியது சாதனை இல்லையா?

வெளிநாட்டு தொழில் முதலீடுகளுக்கு தமிழகமே சிறந்த இடம் என்பதை நிலைநிறுத்தி, உலகளாவிய மிகப் பெரியநிறுவனங்களான நோக்கியா, பிஎம்டபிள்யூ, டெக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்களை இங்கே முதலீடு செய்ய வைத்தது, மிகப்பெரிய நிறுவனங்கள் தமிழகத்தை விரும்பி வரும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகளை உலகத் தரம் வாய்ந்ததாக அமைத்தது,தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வலை அமைத்து அவர்களை காத்தது, காத்துவருவது.

இந்தியாவிலேயே பொது விநியோக முறையில், குறைந்த விலையில் கிலோவுக்க ரூ. 3.50 என்ற அளவுக்கு குறைந்த விலைக்குஅரிசி வழங்கி வருவது, புதிய மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஐந்து முறை பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்திய பின்னும், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல், பொதுமக்கள் மீது சுமையை ஏற்றாமல் அவர்களைக்காத்தது.

இந்தியாவிலேயே வீடுகளில்,மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்கி வருவது,அதற்காக ஏறக்குறைய ரூ. 1000 கோடி மானியத்தை மின்வாரியத்திற்கு செலுத்தி வருவது என சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளோம். உழவர் பாதுகாப்புத் திட்டம் போல ஒருஅருமையான திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறோம்.குடிசைவாசிகளுக்கு இலவச மின்சாரம், அரசு ஊழியர்களுக்கு வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல்வேறு சலுகைகள்வழங்கி வருகிறோம்.

சமுதாயத்தின் எல்லாத் தரப்பினருக்கும் பாதுகாப்பு அளித்துள்ளோம். நெசவாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் கொண்டுவந்துள்ளோம். கைத்தறி நிெசவாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு அளிப்பதற்காக 3.28 கோடி பேருக்கு இலவச வேட்டி,சேலைகளை வழங்கி வருகிறோம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த சாதனைகளையெல்லாம் மக்களிடத்தில் சொல்லி, மீண்டும் ஆதரவு தாருங்கள் என்று கேட்போம்.

எனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றாமல் விட்ட திட்டங்கள் என்று ஏதாவது உள்ளதா? தலைமைச் செயலகம் புதிதாககட்டப்படும் என்று சொன்னேன். அதை மட்டும் தான் நிறைவேற்ற முடியவில்லை.

கூட்டணி: அதிமுக எப்போதுமே கூட்டணிக்கு தடையாக இருந்ததில்லை. அதிமுகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. வருகிற4ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடப்போகிறது. அந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும்,முடிவெடுக்கவும் எனக்கு அதிகாரம் வழங்கப்படும். அதன் பிறகே கூட்டணி குறித்து உங்களிடம் பேச முடியும்.

இருப்பினும் இப்போதே சில கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பொதுக்குழுவுக்குப் பின்னர் அதுகுறித்து தெரிவிக்கப்படும்.

தேர்தல் பணிகளில் எப்போதுமே அதிமுக தான் முன்னணியில் இருக்கும். இப்போதும் கூட தேர்தலில் போட்டியிட விரும்பும்அதிகவினரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறும் பணி தொடங்கி விட்டது.

காளிமுத்து அவைத்தலைவரா?: சபாநாயகர் பதவியிலிருந்து காளிமுத்து விலகி விட்டார். அவருக்கு அவைத் தலைவர் பதவிஅளிக்கப்படுமா என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு தான் முடிவு செய்யும். அந்தக் கூட்டத்தில் அது தெரிய வரும்.

புதுமுகங்களுக்கு சீட்: சட்டசபைத் தேர்தலில் புதுமுகங்களுக்கு சீட் வழங்கப்படுமா, தற்போதைய உறுப்பினர்களுக்கு மீண்டும்போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை நான் முடிவு செய்ய முடியாது, ஆட்சிமன்றக் குழு தான் அதுகுறித்து முடிவுசெய்யும்.

எம்.ஜி.ஆர். நகர் விவகாரம்: எம்.ஜி.ஆர். நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்த சம்பவம் தொடர்பான உச்சநீதிமன்றஉத்தரவில், தமிழக அரசு குறித்து தெரிவிக்கப்பட்டவை உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களே தவிர, அது இறுதியான தீர்ப்பு அல்ல.அதை வைத்து போராட்டம் என்ற பெயரில் திமுகவினர் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

மோனோ ரயில்: மோனோ ரயில் திட்டம் மிகவும் சிறந்த திட்டம். சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டம். இந்தத் திட்டம் குறித்து மத்தியரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு குறை கூறியிருக்கிறார். தமிழக அரசு என்ன திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை குறைகூறுவதே வேலுவுக்கும், அவர் சார்ந்துள்ள கட்சிக்கும் வேலையாகப் போய் விட்டது.

கேபிள் டிவி சட்டம்: கேபிள் டிவி கையகப்படுத்தும் சட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டியது அவரது கடமையாகும்.

இலங்கை: இலங்கையிலிருந்து மீண்டும் அகதிகள் தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர். இது கவலை தருகிறது. முன்புஇலங்கையில் இனக் கலவரம் வெடித்த போது அகதிகள் அதிக அளவில் வந்த பழைய நாட்களை நினைவுபடுத்தும் விதமாகதற்போதைய அகதிகள் வருகை உள்ளது. இலங்கை விவகாரத்தில் இந்தியா எக்காரணத்தைக் கொண்டும் தலையிடக் கூடாது.

தயாநிதி மாறனுக்கு சூடு!: சென்னை நகர சாலைகள் சரியில்லாத காரணத்தால் தான் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸை டைடல் பூங்காவுக்கு அழைத்து வர முடியவில்லை என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியிருப்பது அவரதுஅறியாமையை காட்டுகிறது. சென்னையில் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக உள்ளன. அவற்றை மேலும் மேம்படுத்தவும்வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க தூதரை திரும்பப் பெற வேண்டும்: ஈரான் விவகாரம் தொடர்பாக இந்தியாவை மிரட்டும் வகையில் அமெரிக்கதூதர் டேவில் முல்போர்டு பேசியுள்ளார். அவரை உடனடியாக திரும்பப் பெறுமாறு அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தவேண்டும். ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களிக்கக் கூடாது என்றார் ஜெயலலிதா.

கூட்டணிக்கு அதிகமுவின் கதவுகள் திறந்தே உள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளதன் மூலம் அதிமுகவுடன் சில முக்கியகட்சிகள் கூட்டணி வைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. விஜயகாந்த்தின் தேமுதிக, பாஜக ஆகியவை அதிமுகவுடன் கூட்டணிஅமைக்கலாம் என்று தெரிகிறது. இது தவிர திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளும் கூட்டு சேர வாய்ப்புகள் பிரகாசமாகஉள்ளன.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X