For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எண்ணை தடவாமல் தலை சீவலாம்கருணாநிதிக்கு இல.கணேசன் பதில்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:எண்ணை தடவாமல் தலை சீவ முடியாது. அதுபோல ராமர் பாலத்தை இடிக்காமல் சேது கால்வாயை அமைக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு அவரது பாணியில் பாஜக தலைவர் இல.கணேசன் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்த வட இந்திய மதவாதத் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். அயோத்தியைப் போல தமிழகத்திலும் ரத்த ஆறை ஓட வைக்க முயலுகிறார்கள் என்று கடுமையாக சாடியிருந்தார்.

இதற்கு பாஜக தலைவர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை,

சேது சமுத்திரத் திட்டத்தை தனது அரசு கொள்கை அளவில் ஏற்பதாக அறிவித்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று முதன் முதலில் அறிவித்த பிரதமர் வாஜ்பாய்தான்.

இதையடுத்து அதற்கான ஆய்வுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. பல்லாண்டுகளாக பேசப்பட்ட விஷயம் சேது சமுத்திரத் திட்டம்.

இந்தத் திட்டத்தை எப்படி மேற்கொள்ளலாம் என்பது குறித்து மொத்தம் 6 வகையான வழித்தடங்கள் பரிசீலிக்கப்பட்டன. முதல் வழித்தடமானது, மண்டபம் அருகே கடலை ஆழப்படுத்தலாம் என தெரிவித்தது. அது பின்னர் நிராகரிக்கப்பட்டது.

பின்னர் பாம்பன் அருகே ஆழப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. அது பின்னர் கைவிடப்பட்டது. இதையடுத்து 3வதாக, தனுஷ்கொடி அருகே மூன்றாவது பாதை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்படிச் செய்தால் கோதண்டராமர் கோவில் இடிபடும் என்பதால் அதுவும் கைவிடப்பட்டது.

நான்காவதாக, தனுஷ்கோடியின் எஞ்சியிருக்கிற பகுதி வழியாக ஆழப்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. இதை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இதன் மூலம் குறைந்த தூரம், குறைந்த செலவு, ராமர் பாலம் இடிபடாது என்பதால் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

எனவே ராமர் பாலத்திற்கு சேதம் விளைவிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். எண்ணை தடவாமல் தலை சீவ முடியும். அது சாத்தியமாகும். எண்ணை தடவாமல் தலை சீவுவதுதான் இன்றைய நாகரீகம்.

ஏதோ சேது சமுத்திரத் திட்டத்திற்கே நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது போலவும், வகுப்பு வாதம் என்றும் முத்திரை குத்திப் பேசுவதும் நியாயமற்ற பேச்சு, கண்டனத்துக்குரியது.

ஆதாம் பாலம் வேறு, ராமர் பாலம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். முகாலாயர் ஆட்சிக்காலத்தில் தயாரிக்கப்பட்ட பாரத நாட்டு வரைபடத்திலேயே இது ராமர் பாலம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மத ரீதியிலான பிரச்சினை அல்ல. எப்படி பூம்புகாரை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பதில் நியாயம் உள்ளதோ, லெமூரியா கண்டம் குறித்து ஆராய வேண்டும் என்று கூறுவதில் நியாயம் உள்ளதோ, அந்த அளவுக்கு ராமர் பாலத்தின் தொன்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

எனவே இதில் மதவாதம், ரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்று அச்சுறுத்தும் வாசகங்களைக் கூறி பேசத் தேவையே இல்லை என்று கூறியுள்ளார் இல.கணேசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X