தென்காசியில் இரு பிரிவினர் பயங்கர மோதல்:நடுரோட்டில் 6 பேர் ஓட ஓட வெட்டி கொலை

Subscribe to Oneindia Tamil

தென்காசி:நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று பட்டப் பகலில் இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் ஓட ஓட விரட்டி அரிவாள்களால் வெட்டிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் படுகொலையாயினர்.

இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.

Thenkasi Murder

தென்காசி நகர இந்து முன்னணித் தலைவராக இருந்த குமார் பாண்டியன் கடந்த வருடம் ஒரு இஸ்லாமிய அமைப்பினரால் கொலை செய்யப்பட்டார்.

கோவில் அருகே மசூதி கட்ட அவர் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஹனீபா, அப்துல்லா, சுலைமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து பாண்டியனின் ஆதரவாளர்களுக்கும் இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வந்தது.

Thenkasi Murder

சமீபத்தில் குமார் பாண்டியனின் சகோதரர் செந்தில் என்பவரும், நடராஜன் என்பரும் வெட்டப்பட்டனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட தமிழக முஸ்லீம முன்னேற்றக் கழகத் தலைவர் மைதீன் சேட்கானை ஒரு கும்பல் கடந்த மார்ச் மாதம் வெட்டியது.

குமார் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுலைமான் மைனர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டார். ஹனீபா, அப்துல்லா ஆகியோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜாராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஹனீபா, அப்துல்லா ஆகியோர் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜாராகி வந்த நிலையில் அவர்களது நடவடிக்கைகளை குமார் பாண்டியன் ஆதரவாளர்கள் கண்காணித்து வந்துள்ளனர்.

Thenkasi Murder

அவர்களை போட்டுத் தள்ள முடிவு செய்து இன்று காலை குமார் பாண்டியனின் தம்பி செந்தில் தலைமையில் ஒரு கும்பல் கூலக்கடை பஜார் பகுதியில் காரில் பதுங்கியிருந்தனர்.

தங்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்த்திருந்த ஹனீபா, அப்துல்லா தரப்பினரும் ஆயுதங்களுடன் தான் நடமாடி வந்தனர்.

இந் நிலையில் இன்று காலை ஹனீபா, அப்துல்லா ஆகியோர் 4 ேபருடன் தென்காசி காவல் நிலையத்துக்கு 2 பைக்குகளில் கையெழுத்துப் போட சென்றனர்.

Thenkasi Murder

அவர்களை கூலக்கடை பஜார் பகுதியில் முத்தாரம்மன் கோவில் அருகே வைத்து செந்தில் கும்பல் சுற்றி வளைத்தது. காரில் வந்த அவர்கள், பைக்குகளை வழி மறித்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். ஆனால், அவை வெடிக்கவில்லை.

இதையடுத்து அரிவாள்களுடன் காரிலிருந்து குதித்து தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ஹனீபா, அப்துல்லா தரப்பினரும் தங்களிடம் இருந்த அரிவாள்கள், பட்டா கத்திகளுடன் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இதில் குமார் பாண்டியனின் தம்பி சேகர், அவரது நண்பர் ரவி, மற்றும் அசன் கனி ஆகியோர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு அந்த இடத்திலேயே பலியாயினர். இவர்களுக்கு கை, கழுத்து, தலை, கால் என பல இடங்களிலும் வெட்டு விழுந்துள்ளது.

Thenkasi Murder

ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி வெட்டியதில் குமார் பாண்டியனின் இன்னொரு தம்பி செந்தில், அப்துல்லா, அபு அன்சாரி, நாகூர் மிரான், ராஜா, மீரான் மைதீன், செய்யது அலி ஆகிய 7 பேர் படுகாயமடைந்து தென்காசி மேலமுத்தாரம்மன் கோவில் அருகேயும், கூலக்கடை பஜாரிலிருந்து பூங்கொடி விநாயகர் கோவில், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியிலும் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடந்தனர்.

போலீசார் விரைந்து வந்து இவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இவர்களில் செந்தில், நசீர், நாகூர் மீரான் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

இத் தாக்குலில் சையத் அலி, அபு, மீரான், ராஜா, அப்துல்லா ஆகியோர் படுகாயமடைந்து பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Thenkasi Murder

சிறிய தெருவுக்குள் இரு தரப்பினரும் பயங்கரமாக ஓடி, விரட்டி வெட்டிக் கொண்டத் அந்தப் பகுதியையே பீதியில் ஆழ்த்திவிட்டது.

அந்த வழியாக சென்ற பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு சிலர் கடைகளில் புகுந்து உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் தென்காசியில் கடைகள் மூடப்பட்டுவிட்டன. இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் பஜார் பகுதியிலும் மருத்துவமனையிலும் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதக் கலவர அபாயம் நிலவுவதால் ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக மீட்டு வர பள்ளிகளில் குவிந்தனர். இதனால் பள்ளிகள் முன் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

தென்காசி முழுவதும் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. பஸ்கள் அனைத்தும் தென்காசி புது பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டுவிட்டன. அதே போல தென்காசி வழியாக செல்லும் வாகனங்கள், பேருந்துகள் அனைத்தும் நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

தென்காசி நகருக்குள் வாகனங்கள் எதையும் போலீசார் அனுமதிக்கவில்லை. ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

இந்த சம்பவத்தையடுத்து கடையநல்லூரிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் பிரகாஷ், எஸ்.பி ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் தென்காசியில் முகாமிட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற