For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த கட்சியும் எதிரிக்கட்சி அல்ல- திமுகஅரசை 5 ஆண்டுகள் ஆதரிப்போம்: ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

திண்டிவனம்:திமுக உள்பட எந்தக் கட்சியையும் நாங்கள் எதிரிக் கட்சியாக கருதவில்லை. ஆளுங்கட்சி 5 ஆண்டுகாலம் முழுமையாக பதவி வகிக்கும் வகையில் பாமகவின் ஆதரவு தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திமுக, பாமக இடையிலான சண்டை சமீப காலமாக பெரும் போராக மாறி வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தொல்லை தரும் கட்சிகள் நமக்குத் தேவையில்லை. அடுத்த தேர்தலில் தனித்து நிற்போம் என்று ஆவேசமாக கூறினார்.

இது பாமக தரப்பில் பெரும் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், பாமகவின் செயற்குழுக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் அவசரமாக கூட்டினார்.

திமுக கூட்டணியில் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து விவாதிக்கவே இந்தக் கூட்டம் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால் கூட்டத்தின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

திண்டிவனத்தை அடுத்துள்ள டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மாங்கனி அரங்கில் நேற்று மாலை செயற்குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் டாக்டர் ராமதாஸ்.

அப்போது அவர் கூறுகையில், நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் எந்த விஷயம் குறித்தும் நாங்கள் விவாதிக்கவில்லை.

மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு வருகிற 6ம் தேதி 2வது ஆண்டு பிறக்கிறது. இதைக் கொண்டாடுவது குறித்துப் பேசினோம். கட்சி நிர்வாகிகளுக்கு அரசியல் பயிற்சி அளிப்பது குறித்துப் பேசினோம்.

தமிழக அரசுக்கு பாமக 5 ஆண்டுகள் முழுமையும் ஆதரவு அளிக்கும். இது எங்களது கொள்கை முடிவு. இதில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் சார்ந்த பிரச்சினைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

சட்டசபைத் தேர்தலில் எங்களது கட்சிக்கென்று தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். அதில் எங்களது செயல்பாடுகளை வகுத்துள்ளோம். அதன்படி நாங்கள் செயல்படுவோம்.

மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் வரும்போது நாங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்து தெரிவிக்கிறோம். தேவையானால் போராடவும் செய்கிறோம்.

விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது குறித்து நாங்கள் புகார் கூறினோம். இப்போது அதுகுறித்து சில முடிவுகளை அரசு எடுத்துள்ளது. அதை செயற்குழுவில் பாராட்டினோம்.

பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் என்று உலகெங்கும் வகுக்கப்பட்டுள்ள அடிப்படையின்படி, நாங்கள் செயல்படுகிறோம். அரசியல் செயல்பாடுகளில் பாராட்ட வேண்டியதைப் பாராட்டுகிறோம். எங்கள் கொள்கையை ஏற்காதபோது நாகரீகமாக, தோழமையோடு, பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டுகிறோம்.

எந்தக் கட்சியையும் நாங்கள் எதிரிக் கட்சிகளாகப் பார்க்கவில்லை. குறிப்பாக ஆளுங்கட்சியை அப்படிப் பார்க்கவில்லை. எல்லோரையும் தோழமையுடன்தான் பார்க்கிறோம்.

திமுக தலைவர்கள், அமைச்சர்கள் யாராவது பாமகவை விமர்சித்துப் பேசினால், அதற்குப் பதிலாக விமர்சித்துப் பேசக் கூடாது என்று பாமகவினருக்கு நான் கட்டளையிட்டுள்ளேன் என்றார் டாக்டர் ராமதாஸ்.

தீர்மானங்கள்

முன்னதாக செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் விளம்பரப் பலகைகளை அற்றுவது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதைப் பாராட்டி வரவேற்கிறோம். ஆனால் இத்துடன் நின்று விடாமல் நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துக்கள் என அனைத்து இடங்களிலும் விளம்பரப் பலகைகள் இல்லாதவாறு இந்த நடவடிக்கையை விரிவுபடுத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் பிரசார விளம்பரப் பலகைகளை அகற்றுவது போல தமிழக அரசு விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும்.

- இதேபோல நகர்ப்பகுதிகள் மற்றும் சாலைகளை அழகுபடுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதைத் தடுக்கவும் சுவர்கள், பாலங்கள் போன்ற பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் அமைக்கப்படுகின்ற அனைத்து வகையான அரசு சாரா விளம்பரங்கள், சுவரொட்டிகளையும் தடை செய்ய வேண்டும். விளம்பரங்களுக்கு நாள் கணக்கில் வாடகை வசூலிக்க வேண்டும். விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். சிங்கப்பூரில் உள்ளதைப் போல ெபாது விளம்பரங்களுக்கு அரசே சிறிய அளவிலான பொது விளம்ரப் பலகைகளை அமைத்துத் தர வேண்டும்.

- சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக விவசாயிகளின் நலம் கையகப்படுத்தக் கூடாது என்பது பாமகவின் கொள்கை. விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழியில் அவர் உறுதியாக இருந்து செயல்படுத்த வேண்டும்.

- சென்னை நகர நெருக்கடியைக் குறைக்க துணை நகரங்கள் என்ற பெயரில் பல தலைமுறையாக இருந்தும் குடியிருப்புகளையும், சிற்றூர்களையும், அந்த ஊர்களில் உள்ள உழவர்களையும் அகற்றி நிலங்களை அபகரிக்கக் கூடாது. இதுதொடர்பாக முதுல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார். அதற்காக அவரைப் பாராட்டுகிறோம்.

- 40 ஆயிரம் ஏக்கர், 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரே இடத்தில், துணை நகரம் அமைப்பதை விட்டு விட்டு சென்னை மாநகரத்தைச் சுற்றிலும் சிறிய சிறிய குடியிருப்புகளை அமைக்கலாம். அதற்குத் தேவையான நிலம் சென்னையைச் சுற்றிலும் உள்ளது.

சென்னை நகரில் மாமல்லபுரம் வரை உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் ஏராளமானோர் பெருமளவிலான நிலங்களை வளைத்துப் போட்டுள்ளனர். இதுதவிர தனிப்பட்டவர்கள், சென்னை நகரைசத் சுற்றிலும் 10 ஏக்கர் முதல் 100 ஏக்கர் வரை வளைத்துப் போட்டுள்ளனர்.

விவசாயிகளின் நிலத்தைப் பறிப்பதற்குப் பதில் இந்த நிலங்களைக் கைப்பற்றி அங்கு குடியிருப்புகளை அமைக்கலாம். இதன் மூலம் சென்னை நகரின் நெருக்கடி பெருமளவில் குறையும்.

- தமிழகத்தில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வழங்கப்பட்டுள்ள டாக்டர் முத்துக்குமரன் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்கிய முடிவு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட பாமக செயற்குழுக் கூட்டம், வழக்கமான ஒரு செயற்குழுவாகவே முடிந்தது, திமுக தரப்பில் சற்றே ஆறுதலைக் கொடுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X