For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பிரம்ம முகூர்த்தத்தில்' உதயமான 'கலைஞர் டிவி'!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுகவின் புதிய சானலான கலைஞர் தொலைக்காட்சி இன்று முதல் தனது ஒளிபரப்பை முழு அளவில் தொடங்கியுள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்தையே சேனலின் முகப்பு இசையாக கொண்டுள்ளது கலைஞர் டிவி.

Kalaignar Tv Logoசன் டிவியுடன் உறவு முறிந்ததும் உருவானது உருவானது கலைஞர் டிவி.

முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் சேனலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கின. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார் கருணாநிதி.

மத்திய அரசின் அனுமதி, சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்கள், அலுவலகம், ஊழியர்கள், கருவிகள் ஆகியவை மின்னல் வேகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன.

திட்டமிடப்பட்ட 3 வாரத்தில் வெற்றிகரமாக சோதனை ஒளிபரப்பை தொடங்கியது கலைஞர் டிவி. இது சோதனை ஒளிபரப்பு என்ற டிக்கருடன் ஒளிபரப்பு தொடங்கியது.

ஆனால், எடுத்தவுடனே சோதனை என்ற வார்த்தை வேண்டாம் என்று நினைத்தார்களோ என்னவோ, அதை முன்னோட்ட ஒளிபரப்பு என மாற்றினர்.

தமிழகம் முழுவதும் கலைஞர் டிவிக்கான விளம்பரங்களும் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டன.

மதுரையில் எங்கு நோக்கினும் அழகிரியின் படத்தோடு கலைஞர் டிவிக்கான விளம்பரங்கள் தான் காணப்படுகின்றன.

இந் நிலையில் கலைஞர் தொைலக்காட்சி இன்று முதல் தனது அதிகாரப்பூர்வ ஒளிபரப்பைத் தொடங்கியது.

இடது புறத்தில், கீழே மெல்லப் பளிச்சிடும் சூரியன், கீழே கலைஞர் என்ற தொலைக்காட்சியின் பெயருடன் இன்று முதல் பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்திருக்கிறது இந்தத் தொைலக்காட்சி.

நீராடும் கடலுடுத்த என்ற தமிழ்த் தாய் வாழ்த்தையே தொலைக்காட்சியின் முகப்பு இசையாக வடிவமைத்துள்ளனர்.

கலைஞர் டிவியில் இடம் பெற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பிற கலைஞர்கள் பெரும்பாலும் சன் டிவியிலிருந்து வந்தவர்கள்தான். சன் டிவி உருவானபோது முக்கிய பங்கு வகித்த சரத்குமார் என்பவர் தான் இந்த டிவியை உருவாக்கியதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அவரையே இதன் நிர்வாக இயக்குநராகவும் நியமித்துள்ளனர். இயக்குநர் அமிர்தம், தலைமை நிதி அதிகாரியாக செயல்படுகிறார்.

இயக்குநர் ராம.நாராயணன் தலைமை செயல் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருக்கிறார்.

சன் டிவியின் அடையாளங்களில் ஒருவராக சன் டிவி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இருந்து வந்தவரான பெப்சி உமா, இப்போது கலைஞர் டிவியில் அடைக்கலம். ரமேஷ் பிரபாவும் கலைஞருக்கு வந்து விட்டார். வெண்ணிற ஆடை மூர்த்தியும் வந்துள்ளார். இன்னும் பல பிரபலங்கள் கலைஞர் டிவிக்கு வந்துள்ளனர்.

முதல் நாளான இன்று வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசியை திரையிடுகிறது கலைஞர் டிவி. அதேபோல மொழி படமும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது.

பளிச்சிடும் நிகழ்ச்சிகள், துல்லியமான ஒளிபரப்பு, அனுபவம் வாய்ந்த அணி என பக்கவாக களம் இறங்கியுள்ளது கலைஞர்.

இதை சன் டிவி எப்படி கெளண்டர் செய்யப் போகிறது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிரம்ம முகூர்த்தத்தில் உதயமான டிவி:

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் கலைஞர் டிவியின் முழு நேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாள் பார்த்து, நேரம் பார்த்து ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது கலைஞர் டிவி.

அண்ணா பிறந்த நாளில்...

ஆனால், இன்று அண்ணா பிறந்த நாள் என்பதால் இந்த தினத்தில் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பு கூறுகிறது.

கலைஞர் டிவிக்கு கருணாநிதி வாழ்த்து!:

கலைஞர் டிவிக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

எத்தனையோ புதிய தொலைக்காட்சிகள் எனது வாழ்த்தைக் கேட்டுப் பெற்றிருக்கின்றன. அப்படி ஆரம்பித்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

இப்போது என்னுடைய பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிற இந்த புதிய தொலைக்காட்சியையும் என்னையே வாழ்த்துமாறு கூறினார்கள்.

அதற்குக் காரணம், நான் ராசியானவன், நான் தொட்டது துலங்கும், என் வார்த்தைகள் பலிக்கும் என்ற நம்பிக்கைதான், அவர்களைக் கேட்குமாறு தூண்டியிருக்கிறது. அதற்கேற்ப எத்தனையோ முறை, நான் கூறிய வாழ்த்துக்கள் பலித்திருக்கின்றன, நல்லது நடந்திருக்கிறது.

அந்த வகையில், இந்த புதிய தொலைக்காட்சியும், பல வெற்றிகளைக் குவித்திட தமிழர் உள்ளங்களைக் குளிர்வித்திட என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் கலைஞர் தொலைக்காட்சிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X