For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெல்மட் கெடுபிடி: மக்கள் சாலை மறியல்; மாணவர்கள் - போலீஸ் மோதல்- தடியடி!

By Staff
Google Oneindia Tamil News


மதுரை:

மதுரையில் ஹெல்ட் அணியாதவர்களை வளைத்து வளைத்துப் பிடித்து போலீஸார் அபராதம் விதிப்பதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஹெல்மட் போடாமல் போன இரு சட்டக் கல்லூரி மாணவர்களிடம் போலீஸார் அபராதம் விதித்ததை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் தடியடி நடத்திக் கைது செய்தனர்.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. ஆனால் பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்து வருவதால் நீக்குப் போக்காக இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய நகரங்களில் அடிக்கடி போலீஸார் ரெய்டு நடத்தி ஹெல்மட் அணியாமல் செல்பவர்களைப் பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். சமீப காலமாக மதுரையில் தினசரி ரெய்டு நடந்து வருகிறது.

காலையில் வேலைக்குச் செல்லும் நேரத்திலும், மாலையிலும் இப்படி போலீஸார் வளைத்து வளைத்துப் பிடித்து அபராதம் தீட்டுவதால் மக்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் காலை கோரிப்பாளையம் பகுதியில் ஹெல்மட் அணியாமல் சென்றவர்களை போலீஸார் பிடித்து அபராதம் போட்டனர். அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த பலரும் போலீஸாரிடம் சிக்கினர். இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து இரு சக்கர வாகனங்களில் சென்ற அனைவரும் சாலை மறியலில் குதித்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியலில் குதித்ததால் அங்கு பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. போலீஸாரும் செய்வதறியாது திகைத்தனர்.

பின்னர் பொதுமக்களை சமாதானப்படுத்திய போலீஸார் சோதனையை நிறுத்தி விட்டு அனைவரையும் கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்தே மக்கள் அங்கிருந்து சென்றனர்.

சட்ட மாணவர்களுடன் மோதல்:

இந் நிலையில், தேவர் சிலை பகுதியில், ஹெல்மட் அணியாமல் சென்ற செந்தில்குமார் மற்றும் பெரியகருப்பன் ஆகிய இரு சட்டக் கல்லூரி மாணவர்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

ஆனால், லஞ்சமாக வசூலித்துக் கொண்டு, ரசீது தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த இருவரும் கண்டிப்பாக ரசீது தர வேண்டும் என்று கேட்டனர். அப்போது போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பெரியகருப்பனை அடித்ததாக கூறப்படுகிறது.

தகவல் பரவியதும் சட்டக் கல்லூரி மாணவர்கள் விரைந்து வந்து சாலை மறியலில் குதித்தனர். இதனால் கோரிப்பாளையம் பகுதியில் மறுபடியும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸார் சாலை மறியல் செய்தவர்களைக் கைது செய்தனர். தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அவர்களைக் கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை விடுவித்தனர். ஆனால் வெளியேறாத மாணவர்கள், பெரியகருப்பனை அடித்த இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி காவல் நிலையத்தின் மாடியில் ஏறி அங்கிருந்து குதிக்கப் போவதாக மிரட்டினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந் நிலையில் அதிமுக மாநில மாணவரணிச் செயலாளர் வக்கீல் உதயக்குமார் தலைமையில் பெரும் திரளான மாணவர்கள் அங்கு வந்தனர். காவல் நிலையம் முன்பு அவர்கள் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கிளம்பி அழகர் கோவில் சாலைக்கு வந்தனர். அங்குள்ள பெரியார் சிலை முன்பு மறியல் போராட்டத்தில் குதித்தனர். பிறகு அங்கிருந்து கிளம்பி நீதிமன்றத்திற்கு வந்தனர். நீதிமன்றம் முன்பு சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்தனர். ஆனால் போலீஸாருடன் செல்ல மாணவர்கள் மறுத்தனர். இதையடுத்து தடியடி நடத்தி போலீஸார் மாணவர்களை குண்டுக் கட்டாகத் தூக்கி வேனுக்குள் போட்டனர். அப்போது வேனில் இருந்த மாணவர்கள் சிலர் போலீஸாரைத் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து வேனில் இருந்த மாணவர்களை சரமாரியாக தாக்கினர் போலீஸார்.

போலீஸ் தடியடியில் உதயக்குமார் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். மாணவர்கள் நடத்திய தாக்குதலில் போலீஸார் 7 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் மாணவர் பெரியகருப்பன், 2வது குற்றவியல் நீதிபதியை அணுகி, தன்னை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தாக்கியதாக புகார் கொடுத்தார். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் நடந்த இந்த அடுக்கடுக்கான சம்பவத்தால் கோரிப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X