For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'தேவர்': அரசியலை விட்டு விலக தயார்-ஜெவுக்கு கருணாநிதி சவால்

By Staff
Google Oneindia Tamil News


மதுரை: தேவர் ஜெயந்தி விழாவுக்காக ஜெயலலிதா தனது ஆட்சியில் ரூ.3 கோடி ஒதுக்கியதை நிரூபித்தால் அரசியலை விட்‌டே விலக தயார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந் நிலையில் இன்று மதுரையில் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

கேள்வி: முல்லைப் பெரியாறு அணையில் நீர் நிரம்பி வருகிறது. 136 அடி அளவிற்கு தண்ணீர் எட்டியிருக்கிறது. 142 அடி அளவிற்கு நீர் மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. அதனை அமல்படுத்த இந்த ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?

கருணாநிதி பதில்: 142 அடி அளவிற்கு நீர் மட்டத்தை உயர்த்துவதை நாம் வலியுறுத்தலாம் என்பதற்கு மற்றொரு சான்றாக 136 அடி அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்தும் எந்தவிதமான ஆபத்தும் நேரவில்லை என்பது அறியப்பட்டுள்ளது. 142 அடி அளவிற்கு நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற நம்முடைய கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கேள்வி: கேரளாவில் பெரியாறு அணையை ஒட்டி புதிய அணை கட்டக்கூடாது என்று நமது அரசின் சார்பில் நிர்ப்பந்தம் செய்யப்படுமா?

கருணாநிதி: நிச்சயமாக. புதிய அணை கட்டுவதை நாம் அனுமதிக்கவும் முடியாது, அதற்கு ஒப்புதல் தரவும் முடியாது.

கேள்வி: நேற்று ஜெயலலிதா பேசும்போது முக்குலத்தோர் மூன்று பிரிவாக இருந்ததை ஒன்றாக இணைத்து நான் ஆட்சியில் இருந்தபோது தான் உத்தரவு பிறப்பித்திருந்தேன். ஆனால் அதை தற்போது கிடப்பில் போட்டு விட்டதாகச் சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி: ரத்து செய்து விட்டதாகச் சொல்லவில்லை அல்லவா, கிடப்பில் போட்டு விட்டதாகத்தானே சொல்லியிருக்கிறார். அதில் இருந்து என்ன புரிகிறது? அந்த மூன்று சமூகத்தினரும், தங்களை தேவர் இனம் ஓர் இனம் என்று சொல்லிக் கொள்வதற்கு, மாறுபாடான சில கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியுமா, இல்லையா? நீங்களே சொல்லுங்கள். எல்லா முக்குலத்தோரும் அதை ஒத்துக் கொள்கிறார்களா?. தேவர் இனம், கள்ளர், மறவர், அகமுடையர் என்றெல்லாம் பிரிவுகளாக இருக்கிறார்களே?. அவர்கள் அனைவரும் ஒரு குடைக்கீழ் கொண்டு வர அனைவரும் ஒப்புக் கொள்கிறார்களா என்பதில் ஐயப்பாடு இருக்கிறதே? அது கிடப்பிலே இருக்கிறது என்றால், அதனை ரத்து செய்து விட்டதாக அர்த்தம் இல்லையே.

கேள்வி: தேவர் நூற்றாண்டு விழாவிற்கு தனது ஆட்சியில் ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அதை நீங்கள் குறைத்து ரூ. 50 லட்சம் மட்டுமே ஒதுக்கியதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளாரே?

கருணாநிதி: அவர்கள் ஒன்றுமே கொடுக்கவில்லை. அதனால்தான் எங்களை குறைவாகக் கொடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

கேள்வி: அதிமுக ஆட்சியில் ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாக ஜெயலலிதா பேசியிருக்கிறாரே?

கருணாநிதி: கிடையாது. யார் யாரோ சவால் விடுகிறார்களே, இவர்களும் சவால் விட்டுப் பார்க்கட்டுமே. நான் சவால் விடுகிறேன். தேவர் நூற்றாண்டு விழாவுக்காக மூன்று கோடி ரூபாய் ஒதுக்கி செலவு செய்தேன் என்று ஜெயலலிதா சொல்வது உண்மைக்கு மாறான தகவல். அதை நிரூபிக்கட்டும், பார்க்கலாம். நேற்று பத்திரிகைகளில் இந்தச் செய்தி வந்ததும், நான் மதுரையிலிருந்தபடியே தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அப்படி எதுவும் கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தான் அவர்கள் சொன்னார்கள்.

இந்த விழா எல்லோரும் சேர்ந்து நடத்துகின்ற விழா. தனித் தனியாக தேவர் நினைவகத்தில் மரியாதை செலுத்தினாலும் கூட, இது எல்லோரும் சேர்ந்து நடத்துகின்ற விழா. இதிலே தகராறு கூடாது, எல்லோரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியோடு விழாவினை கொண்டாட வேண்டும். ஆனால் ஏதோ ஓட்டுக்காக கருணாநிதி வந்தார் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். நான் தேவர் மறைந்த காலத்திலிருந்து பல ஆண்டுகள் அந்த நினைவிடத்திற்கு வந்திருக்கிறேன்.

இன்னும் சொல்லப் போனால், அந்த நினைவு மண்டபத்தைக் கட்டியதே திமுக ஆட்சி தான். மேலநீலிதநல்லூர், கமுதி, உசிலம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் தேவர் பெயரால் நான் என்னுடைய ஆட்சிக் காலத்தில் மூன்று கல்லூரிகளை உருவாக்கினேன். மதுரையில் பிரமாண்ட மான தேவர் சிலையை அமைத்து, அப்போது குடியரசு தலைவராக இருந்த வி.வி. கிரியை அழைத்து வந்து அதைத் திறந்து வைத்தோம்.

நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும், மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கும் சார்புடையவனாக இருக்கிறேன் என்பதால் தான் எனக்கு ஒரு சாராரால் தமிழ்நாட்டில் எதிர்ப்பே.

கேள்வி: டாக்டர் ராமதாஸ் தமிழக காவல் துறை செயல்படவில்லை, அவர்களுக்கு ஈரலே இல்லை என்றும் சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி: அவர்தான் 2011ல் ஆட்சிக்கு வருவதாக சொல்லியிருக்கிறாரே. அவர் செயல்பட வைக்கட்டும். அவருடைய கூற்றுப்படி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவர் ஆட்சிக்கு வரப்போகிறார். அப்போது காவல் துறையைச் செயல்பட வைக்கட்டும். முன்கூட்டியே அதற்கான அட்வான்ஸ் வாழ்த்துக்கள். பாராட்டுகள்!

கேள்வி: உளவுத்துறை சரியாகச் செயல்படவில்லை என்று சொல்லப்படுகிறதே?

கருணாநிதி: காவல்துறையிடம் விசாரித்தபோது, நாங்கள் அந்த வழியாக எந்தத் தலைவரும் செல்லக் கூடாது என்று தடை பிறப்பித்திருந்தோம். அது தெரியாமல் அவர்கள் சென்று விட்டார்கள் என்றார்கள். அதுதான் அவர்கள் கூறுகின்ற காரணம். போகப் போகத்தான் உண்மை விஷயங்கள் வெளிவரும்.

கிருஷ்ணசாமியைக் குறி வைத்து, இப்படித் தாக்க வேண்டுமென்று யாரும் எண்ணியிருக்க முடியாது. ஏனென்றால் அவர் எந்தக் கருத்தையும் கடுமையான முறையிலே வெளியிடுபவரல்ல. அதனால் அவரை திட்டமிட்டுக் குறிபார்த்து இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்பது விசாரணைக்குப் பிறகு தான் தெரியும்.

கேள்வி: ஜெயலலிதா நேற்று பேசும்போது நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரப்போகிறது என்றும், தேவர் சமுதாயத்தினர் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி: நான் தேவர் நூற்றாண்டு விழாவிற்காக அவருக்கு மரியாதை செலுத்த வந்தேன். அவர்கள் வந்த வேலையை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

கேள்வி: தேவர் ஜெயந்தியைப் போல தேசத் தலைவர்கள் வ.உ.சி, பாரதியார், காமராஜர் போன்றவர்களுக்கெல்லாம் இதைப்போல விழாவினை அரசே நடத்துமா?

கருணாநிதி: நீங்கள் அனுபவங்களை, நிலைமைகளைப் பார்த்து கருத்துக்களை வெளியிட வேண்டும். தேவருக்கு மக்கள் அவர்களாகவே வந்து, முளைப்பாரி எடுப்பதும், காவடி எடுப்பதும், அவரை தெய்வமாகப் போற்றுவதும் இயல்பாகவே தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் ஏற்பட்டு விட்ட ஒன்றாகும்.

இதில் அரசுதான் இந்த விழாவினை எடுக்கிறது என்பதை விட தேவரிடத்திலே அன்பும் பக்தியும் உள்ள மக்கள் எடுக்கின்ற விழாவில் அரசும் துணை நிற்கிறது என்பதுதான் பொருத்தமான விளக்கமாகும். கட்சித் தலைவர்கள் பற்றி அந்தந்த கட்சிகள் சார்பில் விழாகள் எடுக்கப்படுகின்றன.

கேள்வி: மதுரைக்கு முக்கியமான அமைச்சர் பொறுப்பு எதுவும் கொடுக்கப்படாமல் உள்ளதே? பக்கத்தில் உள்ள விருதுநகருக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் தரப்பட்டுள்ளதே?

கருணாநிதி: (சிரித்தபடியே) யாரை நியமிக்கலாம் என்று நீங்களே எழுதி அனுப்புங்களேன். மதுரைக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துத்தானே பி.டி.ஆர். அவர்களுக்கு கொடுத்தோம். மதுரையைப் புறக்கணித்துவிட்டதாக யாரும் நினைக்கக்கூடாது.

கேள்வி: கடந்த ஆட்சியில் தினசரி பத்திரிகைகள், வாரப் பத்திரிகைகள் என்று பிரித்துப் பார்த்தார்கள். பத்திரிகையாளராகிய நீங்கள் வாரப் பத்திரிகைக நிருபர்களுக்கும் அரசு பஸ் பாஸ் கொடுப்பீர்களா? ஏனென்றால் கடந்த ஆட்சியில் பத்திரிகைகளைப் பிரித்துப் பார்த்தார்கள்.

கருணாநிதி: பத்திரிகை என்றால், பிரித்துத்தானே படிக்க முடியும், என்று சொல்லிவிட்டு பலமாக சிரித்தார் முதல்வர். நிருபர்களாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மருதுபாண்டியர்கள் சிலை: கருணாநிதி திறப்பு

இந் நிலையில் இன்று மதுரையில் மாமன்னர்கள் மருதுபாண்டி சகோதரர்களின் சிலைகளை கருணாநிதி இன்று திறந்து வைக்கிறார். மாரியம்மன் தெப்பக்குளம் அருகே இந்த சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவியரசு வைரமுத்து, அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X