For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமண இணைய தளம் மூலம் பெண்களிடம் மோசடி: இன்னொரு கில்லாடி கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இந்தி விளம்பர நடிகரின் படத்தை பயன்படுத்தி மேட்ரிமோனியல் இணைய தளத்தில் பல பெண்களிடம் மோசடி செய்தவர் பிடிபட்டுள்ளார்.

திருமண இணையத் தளம் மூலம் இவர் சுமார் 13 பெண்களை ஏமாற்றியுள்ளார்.

லியாகத் அலி விவகாரமே இன்னும் மறக்கப்படாத நிலையில் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இந்த கில்லாடி வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த வடிவேலன் என்பவர் மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், எனது தங்கையின் பெயர் கிருத்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரியான அவருக்கு வரன் தேடினோம். ஒரு திருமண இணைய தளத்தில் கிருத்திகாவின் புகைப்படம் மற்றும் குடும்ப விவரங்களை வெளியிட்டோம்.

இந் நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த டாக்டர் ஆகாஷ், என்ற பெயரில் எங்கள் வீட்டிற்கு ஒருவர் போனில் பேசினார்.

டெல்லியில் டாக்டராக உள்ளதாகவும் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும், இணைய தளத்தில் மணமகளை தேடினேன். அதில் உங்களது தங்கையின் படத்தை பார்த்தேன், மிகவும் பிடித்துவிட்டது. எனது போட்டோவை அனுப்புகிறேன் பிடித்திருந்தால் சொல்லுங்கள் தாய் தந்தையை அழைத்து வந்து நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம். மற்ற விஷயங்களை பெற்றோர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

மேலும், ரூ.1 கோடி செலவில் பிரமாண்ட மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறேன் என்றார்.

அவரது பேச்சு எங்களைக் கவர்ந்தது. சில நாட்களில் ஒரு போட்டாவை அனுப்பி வைத்தார். எனது தங்கை உள்பட அனைவருக்கும் அவரை பிடித்து விட்டது.

அவர் கொடுத் திருந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு பேசினோம். மருத்துவமனை கட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. பிஸியாக உள்ளேன். விரைவில் வந்து நிச்சயம் செய்கிறேன் என்றார்.

இந் நிலையில் எங்களுக்குத் தெரியாமல் எனது தங்கையுடன் செல்போனில் பேச ஆரம்பித்துள்ளார். சில நேரங்களில் விடிய விடியக் கூட பேசியுள்ளனர்.

ஒரு முறை, என்னை அடிக்கடி தொடர்பு கொண்டால் வேலை பாதிக்கப்படும். பேசவேண்டும் என்றால் எனது நண்பர் டாக்டர் செந்தில்குமாருக்கு செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பு, செந்தில்குமார் சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் வேலைபார்கிறார். அவர் எனக்கு தகவல் சொல்வார். நான் உங்களிடம் பேசுகிறேன் என கூறியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு எனது தங்கைக்கு போன் செய்து நான் சென்னை புறப்பட்டு வந்த போது கார் விபத்திற்குள்ளாகி விட்டது எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. நடக்க முடியவில்லை ஆந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

உடனடியாக ரூ.1 லட்சம் பணம் தேவை. எனது நண்பர் செந்தில்குமாரிடமும் கேட்டேன். அவர் ரூ. 50,000 கொடுத்தார். உன்னிடம் ஏதாவது பணம் இருந்தால் கொடு, வீடு திரும்பியதும் தந்து விடுகிறேன் என கூறியுள்ளார்.

பதறிப் போன எனது தங்கையும் ரூ. 40,000 இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து செந்தில்குமார் வந்து பணத்தை பெற்றுக் கொள்வார் என்று கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் டாக்டர் செந்தில்குமார் பேசுவதாக என் தங்கையிடம் ஒரு நபர் பேசி உள்ளார். முக்கியமான ஆபரேசன் காரணமாக வர முடியவில்லை. எனது கார் டிரைவரை அனுப்புகிறேன். அவரிடம் பணத்தை கொடுத்தனுப்புங்கள் என அந்த நபர் கூறியுள்ளார்.

சில மணி நேரத்தில் ரமேஷ் என ஒரு நபர் வந்து எனது தங்கையிடம் இருந்து ரூ.20,000 வாங்கி சென்றுள்ளார். அதன் பின்னர் ஆகாஷ் என் தங்கையை தொடர்பு கொள்ளவில்லை.

குழம்பிப் போன எனது தங்கை எங்களிடம் விவரத்தைக் கூறவும், நாங்கள் ஆகாஷ் கொடுத்த செல்போனைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அது ஆப் செய்து வைத்திருந்தது. செந்தில்குமார் கொடுத்த எண்ணுக்கு முயன்றோம். அதுவும் போலியானது என்பது தெரிய வந்தது.

நாங்கள் ஏமாந்ததை உணர்ந்தோம். அந்த மோசடி நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இன்பராஜ் என்ற நபர்தான் கிருத்திகாவிடம் பணத்தை மோசடி செய்தவர் என்று தெரிய வந்தது.

இன்பராஜை தனிப்படை போலீசார் பூக்கடை பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இன்பராஜ் 6-ம் வகுப்பு வரையே படித்துள்ளார். மகேஸ்வரி என்ற மனைவியும் 1 மகளும் உள்ளனர். கொளத்தூர், பால விநாயகர் கோவில் பகுதியில் உள்ள வீட்டில் வசிக்கின்றனர்.

பல மொழி பேசும் திறமை உள்ளதால் அதை வைத்து கடந்த 1 வருடமாக 13 பெண்களிடம் லட்சக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.

இந்த நாடகத்தில் இடம் பெற்ற பிற கேரக்டர்களான டாக்டர் செந்தில்குமார், கார் டிரைவர் ரமேஷ் என அனைவருமே இன்பராஜ்தான். குரலை மாற்றி மாற்றிப் பேசிய வித்தை காட்டியுள்ளார்.

ஒவ்வொரு பெண்ணிடமும் ரூ.20,000 முதல் 50,000 வரை பணம் பறித்துள்ளார். இவர் டாக்டர் ஆகாஷ் என்ற பெயரில் அனுப்பிய புகைப்படம், இந்தி விளம்பரபடங்களில் நடிக்கும் டி.வி. நடிகர் சாம்ரிஷ் என்பதும் தெரிய வந்துள்ளது.

மணிகணக்கில் பெண்களிடம் பேசியதற்காக செல்போனுக்கு மட்டுமே மாதம் ரூ. 5,000க்கு மேல் கட்டியுள்ளார். ஏமாற்றப்பட்ட எந்த பெண்ணிடமும் நேரடியாக பேசுவதில்லை. பணம் பெற மட்டுமே மாற்று பெயரில் நேரில் சென்றுள்ளார்.

இவரது செல்போனில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பெண்களின் செல்போன் நம்பரை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில் 3 பேர் மட்டுமே இன்பராஜ் தங்களிடம் மோசடி செய்துவிட்டதாக புகார் கூறி உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X