For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடன் வசூலுக்கு குண்டர்களை ஏவிய ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, கலெக்ஷன் ஏஜெண்டுகள் என்ற பெயரில் குண்டர்களை வைத்து கடன் வாங்கியவர்களை மிரட்டி பணம் வசூல் செய்ததற்காக டெல்லி நுகர்வோர் ஆணையம் ரூ.55 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி உட்பட அனைத்து வங்கிகளும் டூ-வீலர் லோன், கார் கடன், தனிநபர் கடன், நகைக் கடன், வியாபார கடன், கிரடிட் கார்டு என பலவகை கடன் திட்டங்களை வைத்துள்ளன.

இவற்றை புரமோட் செய்வதற்காக ஏஜென்டுகளை வைத்துள்ளனர். இந்த ஏஜென்டுகள் நம்மை போனிலும், நேரிலும் தொடர்பு கொண்டு லோன் வாங்குமாறு அனத்துவார்கள்.

நமக்குத் தேவை இல்லையென்று கூறினாலும் விட மாட்டார்கள். அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் சரி என்று கூறி விட்டால், அவர்களுக்கு தேவையான ஆவணங்களை வாங்கிக் கொண்டு லோனை தலையில் கட்டி விடுவார்கள்.

அதன் பின்னர் தான் தலைவலியே ஆரம்பிக்கும். சரியாக தவணையை கட்டிவிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் நடுத்தர குடும்பத்தினருக்கு அப்படி முடியாமல் போய் விடுமே. இதனால் பணம் கட்டமுடியாமல் போய்விட்டால் லோன் வாங்குவதற்கு முன்னர் நம்மை தூங்க விடாத வங்கியினர், பணத்தை வசூல் செய்வதிலும் அதைவிட கொடுமையான செயல்களில் ஈடுபடுவார்கள்.

கடன்களை வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில், அவற்றை வசூலிக்க ஏஜென்டுகளை வைத்துள்ளனர். ஆனால் இந்த ஏஜென்டுள் பெரும்பாலும் குண்டர் படையினர் தான்.

கடன் வாங்கியவர்களை தொலைபேசியிலும், நேரிலும் போய் மிரட்டுவது, வீட்டுக்கு வெளியில் நின்று அசிங்கமாக திட்டுவது, அதையும் தாண்டி அடித்து உதைப்பது என அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் பெரும்பாலான ஏஜென்டுகள்.

வசூலிக்கும் கடன் தொகையில் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வங்கி கமிஷனாகத் தந்துவிடும். இதனால் கடன் வாங்கிய நபரை பாடாய் படுத்தி பணத்தை வசூலிப்பதில் இந்த ஏஜென்ட் எனப்படும் குண்டர்கள் வேகம் காட்டுவார்கள்.

இவர்களுக்கு பயந்து சில தற்கொலைகளும் கூட நடந்துவிட்ட நிலையில், இவர்களை அடக்குவார் இல்லை.

இதுகுறித்து நீதிமன்றங்களும், ரிசர்வ் வங்கியும் வங்கி நிர்வாகங்களை கடுமையாக கண்டித்தும் பயனில்லை. வங்கி நிர்வாகங்களும், அவர்கள் வைத்துள்ள கூலிப் படையினரும் திருந்தியபாடில்லை.

இதற்கு சமீபத்திய உதாரணம் தபன் போஸ். டெல்லியைச் சேர்ந்த இவர் ஐசிஐசிஐ வங்கி மூலம் கார் லோன் வாங்கியிருந்தார். சரியாக மாத தவணையை கட்டி வந்த அவருக்கு பண நெருக்கடியால் மூன்று மாதங்கள் தொடர்ந்து பணத்தை கட்ட முடியாமல் போனது.

தொடர்ந்து 3 மாதங்கள் அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணமில்லாத காரணத்தால் ரிட்டர்ன் ஆகிவிட்டது. இதனால் ஐசிஐசிஐ வங்கி நியமித்த ஏஜெண்டுகள், போஸின் காரை குறி வைத்து விரட்டினர்.

அதில் இருப்பது யார் என்று கூட பார்க்காமல் இரும்புக் கம்பிகளால் தாக்கினர். இதில் காரை ஓட்டிச் சென்ற போஸின் உறவினர் வினோத் குமார் தலையில் படுகாயமடைந்தார். அவரை இழுத்து ரோட்டில் போட்டுவிட்டு காரை பறிமுதல் செய்து கொண்டு போய்விட்டனர். (அப்போது காரில் தபன் போஸே இல்லை)

வினோத்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தபன் போஸ் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் ஜே.டி.கபூர் ஐசிஐசி வங்கியின் செயலை கடுமையாக கண்டித்தார்.

அவர் பிறப்பித்த உத்தரவில், வங்கி கலெக்சன் ஏஜெண்டுகளால் தாக்கப்பட்டு மூளை பாதிக்கப்பட்ட வினோத் குமாரின் மருத்துவ செலவுக்காக ஐசிஐசிஐ வங்கி அவருக்கு ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும்.

அடியாட்களை வைத்து பொதுமக்களை மிரட்டி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காரணத்திற்காக நுகர்வோர் ஆணைய மேம்பாட்டு நிதிக்கு ரூ.50 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கடன்களை வசூல் செய்வதற்கு அடியாட்களை வைத்து கடன் வாங்கியவர்களை மிரட்ட கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியும், உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளன.

ஆனால் அதையும் மீறி இந்த செயல் நடந்ததால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் கலெக்சன் ஏஜெண்டுகளால் சமீபத்தில் கூட சென்னையில் ஒரு அப்பாவி வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X