For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமதாஸ் சொல்வது குற்றச்சாட்டு அல்ல, ஆக்கப்பூர்வ விமர்சனங்கள்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அன்றாடம் விடும் அறிக்கையை பார்த்து அரசைப் பற்றி குறை கூறுகிறாரே என்று கவலைப்படக் கூடாது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை விவரம்

கேள்வி: மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க அரசு சார்பில் நீங்கள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறீர்கள். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியும் குழு அமைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த நிலையில் பாமக நிறுவனர் அன்றாடம் விடும் அறிக்கையில் தமிழகத்திலே உள்ள மருத்துவமனைகளிலே மருத்துவர்கள் இல்லை என்றும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் மாணவர்களைத் தூண்டி விடுவதாகவும் சாடிக் கொண்டே இருக்கிறாரே?

பதில்: டாக்டர் அன்றாடம் விடும் அறிக்கையைப் பார்த்து அந்தந்த துறை அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் பேசி முடிந்த வரை தவறுகளை களைய முனைவதற்கு அது பயன்படுகிறது என்பது மட்டும் நிச்சயம். எனவே அவர் இவ்வாறு அன்றாடம் அரசைப் பற்றி குறை கூறுகிறாரே என்பதற்காகக் கவலைப்படக் கூடாது. என்னைப் பொறுத்தவரையில் டாக்டர் கூறும் குற்றச்சாட்டுக்களையெல்லாம் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களாகத்தான் எடுத்துக் கொள்கிறேன்.

கேள்வி: அரசு சார்பில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதற்குப் பதிலாக குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தர வேண்டும் என்றும், இன்த திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பதற்கான புள்ளி விவரத்தை அளிக்க முடியுமா என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கேட்டிருக்கிறாரே?

பதில்: அவர் கேட்டார் என்பதற்காக அல்ல, இதற்கு முன்பிருந்த ஆட்சியில் தமிழக அரசின் சார்பில் யாரையும் வேலைக்கு எடுக்கக் கூடாது என்று வேலை நியமனத் தடை ஆணை ஒன்றே பிறப்பித்திருந்தார்கள். ஆனால் திமுக ஆட்சி 2006ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற பின்னர் வேலை நியமனத் தடை ஆணையை ரத்து செய்ததோடு, கடந்த 1 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு துறையின் சார்பில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு,

ஊரக வளர்ச்சித்துறையில் 16,602 பேர், பேரூராட்சிகளில் கால முறை ஊதிய அடிப்படையில் 2,923 பேர், நகராட்சி நிர்வாகத் துறையில் 3,789 பேர், நகராட்சி, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் காலமுறை ஊதியத்தில் ஆசிரியர்கள் 53,005 பேர், பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் மற்றும் பிற பணிகளில் 51,099 பேர், கல்லூரிக் கல்வித் துறை மற்றும் தொழில் நுட்பக் கல்வித் துறையில் ஆசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் 5,558 பேர்,

மின் வாரியத்தில் நிரந்தரப் பணியாளர்களாக 12,000 பேர், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல பணிகளில் 19,326 பேர், வருவாய்த் துறையில் 7,565 பேர், வணிகவரித் துறையில் 1,070 பேர், நெடுஞ்சாலைத் துறையில் 469 பேர், போக்குவரத்துத் துறையில் 10,095 பேர்,

பொது நூலகத் துறையில் 795 பேர், சமூக நலத்துறையில் 32,105 பேர், காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையில் 6,637 பேர், நீதித்துறையில் 345 பேர், பொதுப்பணித் துறையில் 1,921 பேர், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில் 1,022 பேர், வேளாண்மைத் துறையில் 340 பேர், இதர துறைகளில் 1,486 பேர் ஆக மொத்தம் கடந்த 1 ஆண்டு காலத்தில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 149 பேர் அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2006ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கையில் அரசுப் பணிகளில் நிரப்பப்படாமல் உள்ள 3 லட்சம் காலி இடங்களுக்கு பணியாளர்களை நியமிப்போம் என்று அறிவித்தோம்.

அந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் 1 ஆண்டுக் காலத்திற்குள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 149 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகத்திற்கு 11,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட முதலீட்டில் தொழில்களைத் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் தமிழக அரசின் முயற்சியால் செய்து கொள்ளப்பட்டு, அந்தத் தொழிற்சாலைகளின் மூலமாகவும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.

ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, தேர்தல் அறிக்கையில் அது சொன்னீர்களே, இது சொன்னீர்களே, அதெல்லாம் என்னவாயிற்று என்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பார்கள். எல்லாவற்றையும் மக்கள் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேள்வி: வேலை வாய்ப்பு இதுவரை கிடைக்காதவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி அளிப்பதாக தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னவாயிற்று?

பதில்: அந்தத்திட்டம் கடந்த ஆண்டே ஆட்சிக்கு வந்தவுடன் அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது. 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் 150 ரூபாய் என்றும், மேல்நிலை வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் 200 ரூபாய் என்றும், பட்டப்படிப்பு வரை படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் 300 ரூபாய் என்றும் உதவித் தொகை தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

3 மாதங்களுக்கு ஒரு முறை அதற்கான நிகழ்ச்சிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு, அமைச்சர்கள் எல்லாம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அதற்கான ஆணைகளையும், நிதியையும் வழங்கி வருகிறார்கள்.

இந்தத் திட்டத்தின்படி இதுவரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 488 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 77 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரத்து 360 ரூபாய் அரசின் சார்பில் நிதி உதவியாக அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி வருவதற்கு ஒரு சான்றுதான்.

கேள்வி: ஆந்திராவில் ஏப்ரல் முதல் ரூ.2க்கு 1 கிலோ அரிசி என்று அந்த மாநில முதல்வர் அறிவித்திருக்கிறாரே?

பதில்: மகிழ்ச்சி. முதன் முதலில் இந்தியாவிலேயே அந்தத் திட்டத்தை அறிவித்து, நடை முறைப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்பதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஆந்திராவிலே மாத்திரமல்ல, விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அங்கே காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமேயானால், ஏழைகளுக்கு இலவச ரேசன் பொருட்கள், கலர் டி.வி. போன்ற ஏராளமான சலுகைகளை வழங்குவோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

எனவே மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சி நடைபெறுகிறது.

கேள்வி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நேற்றைய தினம் அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டிருக்கிறதே?

பதில்: எதற்காக? கோத்தகிரியில்தான் கோடநாடு எஸ்டேட் உள்ளது. அந்த இடத்தை கையகப்படுத்திக் கொண்டு, அந்த ஊர் மக்களுக்கே வழிவிட முடியாது என்று ஜெயலலிதாவின் ஆட்கள் தடுக்கிறார்களே, அதை எதிர்த்து யார் உண்ணாவிரதம் இருப்பது. முறைப்படி பெற்றிட வேண்டிய அனுமதியைப் பெறாமல், முறைகேடாக மாளிகை கட்டிக்கொண்டு தங்கள் இஷ்டம் போல ஆட்டம் நடத்துகிறார்களே, அதை எதிர்த்து யார் உண்ணாவிரதம் இருப்பது?.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X