For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நதிகள் இணைப்பை தேசியத் திட்டமாக அறிவிக்க கருணாநிதி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

karunanidhi
சென்னை: நதிகளின் இணைப்பை ஒரு தேசியத் திட்டமாக அறிவித்து அதற்குக் காலவரையறையுடனான ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தேசிய வளர்ச்சி கவுன்சிலில் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்ற தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது,

10வது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்மைத் துறையில் தமிழகம் தேக்க நிலையை அடைந்தது. ஆனால் அதனை இந்த திட்ட காலத்தில் சரி செய்திட உறுதி கொண்டுள்ளோம். உணவு பாதுகாப்பை உறுதி செய்திடவும், வேளாண் தொழில் வருவாயை பெருக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழகத்தில் விவசாயக் கூட்டுறவுக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளதையும், நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருவதையும் அனைவரும் அறிவீர்கள்.

நாங்கள் இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கர் நிலங்களை 1 லட்சத்து 16 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம்.

பாசன வசதியற்ற பகுதி மற்றும் பிற வரையறைகள் அடிப்படையில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தேசிய வளர்ச்சிக் குழுவின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நிதி ஒதுக்கீட்டிற்கு ஆலோசனை கூறப்பட்டுள்ள முறை மிகவும் சிக்கலானது.

மேலும் இதன்படி திட்ட பணிகளுக்கு பொருத்தமான வகையில் நிதி ஒதுக்கீட்டினை மாநில அரசுகள் நிர்ணயம் செய்வதிலும் சிரமம் உள்ளது. வரையறுக்கப்பட்ட செலவினத்திற்கு கூடுதலாக மாநில அரசினால் மேற்கொள்ளப்படும் செலவினம் மானியமாக அளிக்கப்பட வேண்டும்.

எனவே மாநில வாரியான நிதி ஒதுக்கீட்டிற்குரிய நடைமுறைகளை எளிமைப்படுத்திட வேண்டுமென மைய அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால் தகுந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியின் நோக்கம் தோல்வியுற்றுவிடும்.

கடந்த முறை நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஆறுகள் இணைக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து நான் கூறிய கருத்துக்களை நினைவூட்ட விரும்புகிறேன்.

ஆறுகளின் இணைப்பை ஒரு தேசியத் திட்டம் என அறிவிக்க வேண்டுமென்றும், அதற்குக் காலவரையறையுடனான ஒரு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்.

ஆற்று நீரை பகிர்ந்து கொள்வதில் மாநிலங்களுக்கு இடையில் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். மாநிலங்களுக்கு இடையில் நல்லிணக்கம் நிலவிட வேண்டுமென்றும் அக்கறையுடன், இத்தகைய கருத்து வேறுபாடுகள் சட்டங்களின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதும், அதிகார அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் முடிவுகளுக்கு மாநில அரசுகள் மதிப்பளித்து அவைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதும் இன்றியமையாததாகும்.

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகள் இணைக்கப்படுவதை பொறுத்தவரை தேசிய வளர்ச்சிக் குழுவின் 53வது கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி இத்தகைய திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.

அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளச் சேதங்களாலும், வறட்சிகளாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் காப்பதற்காக அவர்களின் விவசாயக் கூட்டுறவு கடன்களைத் தமிழக அரசு ரத்து செய்தது.

ரத்து செய்யப்பட்ட இந்தக் கூட்டுறவு கடனில் ஒரு பகுதியை நாட்டில் குறிப்பிட்ட சில மாநிலங்கலுக்கு வழங்கப்பட்டுள்ள தொகுப்புச் சலுகைகள் போலக் கருதி மத்திய அரசு ஏற்க வேண்டும் என மீண்டும் வற்புறுத்துகிறேன்.

எங்கள் மாநில அரசு தன் சொந்த நிதியைக் கொண்டு ஏற்கனவே நல்ல ஊரகக் கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மத்திய நிதியுதவிகளை நாங்கள் பெற முடியவில்லை.

சமையலுக்கு விறகுகளை எரிபொருளாக பயன்படுத்தி துன்பங்களுக்கு ஆளாகும் ஏழை பெண்களின் சிரமங்களை குறைப்பதற்காக தமிழக அரசு சமையல் எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகளை அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

தமிழக கிராமங்கள் அனைத்திற்கும் மின்வசதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதியுதவியை ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் எரிவாயு அடுப்புகள் வழங்கும் தமிழ அரசின் இந்தத் திட்டத்திற்கு வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

பெண்களின் நலமே குடும்ப நலமாகக் கருத்தப்படுகிறது. ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த பல பெண்கள், அவர்கள் கருவுற்ற நிலையிலும் கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவர் நலன்களையும் பாதிக்கிறு. இதனை சீர்படுத்திட நாங்கள் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு உதவிடும் ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்துகிறோம்.

இத்திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணித் தாய்மார்கள் கருவுற்ற காலத்தில் இழக்கும் வருமானத்தை ஈடுகட்டும் வகையிலும், நல்ல சத்துள்ள உணவை அவர்கள் உட்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ரூ.6,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது.

வளரும் குழந்தைகளுக்கு போதுமான சத்துணவு தேவை. இதன் பொருட்டு 2 முதல் 14 வயது வரையுள்ள ஏறத்தாழ 70 லட்சம் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முறை முட்டை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம். இந்த 2 திட்டங்கள் குறித்தும், தேசிய அளவில் விவாதித்து இந்த திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து இந்திராகாந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2004ம் ஆண்டில் 210 சதுர அடி கொண்ட ஒரு வீடு கட்ட அனுமதிக்கப்பட்ட செலவு ரூ.25,000. இன்றைய விலை நிர்ணயங்களின் படி ரூ.60,000க்கு குறைவாக அந்த வீட்டைக் கட்டுவது என்பது இயலாது.

எனவே இந்திராகாந்தி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 325 சதுர அடி கொண்ட கூடுதல் பரப்பளளவுடன் ஒரு குடியிருப்பை கட்டுவதற்கு தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீட்டை உயர்த்தி தருமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படுவதை நான் வரவேற்கிறேன். தமிழகத்தில் இந்த முத்திரைத் திட்டம் பெற்ற வெற்றிக்கு உரிய முக்கிய காரணங்களில் ஒன்று, கிராமங்களின் தன்மைகள் அடிப்படையில் தனியே நிதி ஒதுக்கீடு வழங்கிட வகை செய்ததாகும். இந்த முறையை மாநில அரசுகள் தொடர்ந்து பின்பற்றிட அனுமதிக்குமாறு மத்திய அரசை நான் வற்புறுத்துகிறேன்.

விமான நிலையங்கள் மற்றும் பெரிய ரயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் போன்ற மத்திய அரசுத் திட்டங்களின் செலவினங்களில் மாநில அரசுகள் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இது மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசுக்கு நிதி மாற்றம் செய்திடும் தலைகீழான நடைமுறையாகும். ஆகையால், மத்திய திட்டங்களுக்காக மாநில அரசுகள் நிதி செலுத்த வேண்டுமென வலியுறுத்தக் கூடாது என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

நகர மற்றும் கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களின் சுகாதார மேம்பாட்டிற்குத் தமிழக அரசு தலையாய முன்னுரிமை அளிக்கிறது. இதற்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மிக முக்கிய தேவையாகும்.

இந்த அடிப்படையில் 11வது திட்டத்தில் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் முக்கிய சுகாதாரத் திட்டங்களுக்கு பெரிய அளவில் உதவிடும் ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக தற்போது துண்டு துண்டாக நிதி வழங்குவது போல் இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பொருந்தக் கூடிய பொருத்தமான முறையில் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு நிதியுதவி அளித்திட வேண்டுமென்றும், இந்த 11வது திட்டத்தில் இருந்து இத்தகைய மாற்றத்தை அறிமுக்பபடுத்திட வேண்டுமென்று திட்டக்குழுவை நான் கேட்டுக் கொள்கிறேன்.

சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்கீழ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

சோனியா காந்தி நாட்டை வளப்படுத்துவதிலும், அதை நிர்வகிப்பதிலும் இந்திய மகளிர் தங்கள் நியாயமான பங்கினை பெறுவதில் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வார் என நான் உறுதியாக நம்புகிறேன்.

பிரதமர், திட்டக் குழுவின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும், சமூக வளர்ச்சிக்கு வழி வகுக்கும் இந்த 11வது ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கியுள்ளமைக்காக என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X