For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் உலவும் மதுரை ரவுடிகள்: சுட்டுப் பிடிக்க உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து பதுங்கியுள்ள ரவுடிக் கும்பலை பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களைக் கண்டதும் சுடவும் மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை எருக்கஞ்சேரி பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் டாடா சுமோ காருடன் பிடிபட்டது.

'டாக்' ரவி-திண்டுக்கல் பாண்டியன்:

அவர்களை விசாரித்தபோது 3 பேரும் மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் என்பதும், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி டாக் ரவி என்பவரை தீர்த்துக் கட்ட வந்ததும் தெரிய வந்தது.

இக்கும்பலைச் சேர்ந்த மேலும் 2 பேர் அரும்பாக்கத்தில் சிக்கினர். இக்கும்பலின் தலைவராக அழகர் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட கும்பலில் அழகரின் சகோதரரும் இடம் பெற்றுள்ளார்.

இக்கும்பல் அரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த 6 மாதங்களாக தங்கியுள்ளனர். மேலும், இவர்களுக்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர் முழு ஆதரவு தந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பயங்கர ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகளும் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

6 மாதங்களாக பயங்கர ரவுடிக் கும்பல் தங்கியிருந்தும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அலட்சியப் போக்கு காரணமாக, அரும்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அந்த இன்ஸ்பெக்டருக்கு இந்த ரவுடிக் கும்பல் பல வகைகளிலும் உதவியாக இருந்துள்ளது. அதாவது கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கடன் வசூலித்துத் தரும் பொறுப்பை இக்கும்பல் செய்து வந்துள்ளது. அதற்கு இன்ஸ்பெக்டர்தான் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

ஆனால் இந்தக் கும்பலின் முக்கிய நோக்கமே டாக் ரவியை தீர்த்துக் கட்டுவதுதான். மதுரையில் பிரபலமான ரவுடிதான் டாக் ரவி. இவரது போட்டிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் இந்த அழகர் அன்ட் கோ.

டாக் ரவி பல வழக்குகளில் தொடர்புடையவர். தஞ்சையில் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலையிலும், சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டு வைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் டாக் ரவிக்கு முக்கியப் பங்கு உள்ளதாம்.

கட்டப் பஞ்சாயத்து செய்தது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என பல வழக்குகள் டாக் ரவி மீது உள்ளன.

16 ரவுடிக் கும்பல்கள்:

மதுரையைக் கலக்கி வரும் ரவுடிக் கும்பல்கள்தான் டாக் ரவி மற்றும் அழகர் தலைமையிலான கும்பல்கள். இதுதவிர திண்டுக்கல் பாண்டியன் என்பவரும் ஒரு ரவுடிக் கும்பலை மதுரையில் வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக இந்த ரவுடிக் கும்பல்களிடையே கடும் மோதல் மூண்டுள்ளது.

குறிப்பாக டாக் ரவிக்கும், திண்டுக்கல் பாண்டியனுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இரு தரப்பினரும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் மோதிக் கொண்டுள்ளனர். இதனால் மதுரையில் பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில்தான் டாக் ரவி பெயிலில் வெளியே வந்தார். அதன் பின்னர் அவர் சென்னைக்கு தப்பி வந்து விட்டார். இங்குதான் அவர் கடந்த சில மாதங்களாக பதுங்கியுள்ளதாக தெகிறது.

டாக் ரவி, திண்டுக்கல் பாண்டியன், அழகர் ஆகியோருக்குக் கீழ் கிட்டத்தட்ட 16 சிறு சிறு ரவுடிக் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றனவாம்.

கண்டதும் சுட உத்தரவு:

தற்போது டாக் ரவி சென்னையில்தான் பதுங்கியுள்ளார். அவரையும், அவரைத் தீர்த்துக் கட்டுவதற்காக சென்னையில் ஊடுறுவியுள்ள பிற மதுரை ரவுடிகளையும் பிடிக்க பல்வேறு தனிப்படைகளை சென்னை காவல்துறை அமைத்துள்ளது.

டாக் ரவி மற்றும் பிற ரவுடிகளைக் கண்டதும் சுடவும் போலீஸாருக்கு மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ரவுடிகள் டாக் ரவி, திண்டுக்கல் பாண்டியன் உள்ளிட்டோர் மதுரையில் சிலகாலமாக ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தற்போது சென்னையில் பதுங்கியிருப்பதாக ெதரிகிறது. அவர்களைப் பிடித்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

தனிப்படைகள் அனைத்தும் கூடுதல் ஆணையர் ஜாங்கிட் மற்றும் இணை ஆணையர்கள் ரவி மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோரின் நேரடிப் பார்வையில் செயல்படுகின்றன.

தீவிர கண்காணிப்பு:

தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன.

சென்னை நகரில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. அங்கு தங்கியிருப்போர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

புறநகர்ப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் யாராவது தங்கியிருந்தால் தகவல் தர வேண்டும் எனவும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடிக் கும்பல்கள் சென்னையில் நடமாடுவதும், அவர்களை சுட்டுப் பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருப்பதாலும், சென்னை காவல்துறை பரபரப்பாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X