For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தையை சிறப்பாக கொண்டாடுவோம் - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதை விட தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளை தமிழர்கள் கூடுதல் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்காக தமிழ் சங்கப் பேரவை சார்பில் முதல்வருக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

இந்த விழாவில் நான் கலந்து கொள்ள முடியுமா என்று கேள்விக்குறியாக இருந்தது. நான் காலையிலேயே எழுந்து பேருரு எடுத்து அதன் பின்பு கலந்து கொண்டுதான் ஆக வேண்டும் என்ற மன உறுதி மற்றும் பிடிவாதத்தின் காரணமாகவும் இந்த விழாவை இன்று ஏற்பாடு செய்த
துரைமுருகன், ஜெகத்ரட்சகன் இருவருடைய முகங்களை பார்த்த பிறகும், நிச்சயமாக கலந்து கொள்வேன் என்று உறுதியளித்து இந்த விழாவில் உங்களையெல்லாம் காண்கின்ற நல்ல வாய்ப்பினை பெற்றிருக்கிறேன்.

இந்த வாய்ப்பு கிட்டியதால் தான், இன்று சிறப்புடன் நடைபெறுகின்ற இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் மருத்துவர்கள் தடைபோட்டு விடுவார்களோ என்ற அச்சத்துடன் இருந்தேன்.

ஆனால் அந்த மருத்துவர் தடைபோடாமல் என்னை இங்கே அழைத்து இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்கு உதவி புரிந்ததற்காக அவருக்கும், கொஞ்சம் என்னைவிட்டு விலகி இருக்கின்ற அந்த உடல் நோய்க்கும் நன்றி கூற நான் கடமைபட்டிருக்கிறேன்.

கடந்த மாதம் 23ம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா ஆற்றிய உரை தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என கொண்டாடப்படும் என்று அரசு சார்பில் அறிவித்தார்.

அதை நன்றியுடன் பாராட்டுவிழா எடுக்கின்ற அந்த பணியை இந்த சங்கம் ஏற்றுக்கொண்டு இந்த அமைப்பின் தலைவர்களாக விளங்குகின்ற துரைமுருகனும், ஜெகத்ரட்கனும் பெரும் பணியாற்றி தமிழகத்தில் சிறப்பாக தமிழ் தொடர்புடைய திறமை எங்கெங்கு இருக்கிறதோ அதை அனைத்தையும் சேகரித்து இந்த வள்ளுவர் கோட்டத்திலே நடத்தி எங்களுடன் உங்களையும் சேர்த்து மகிழ்வித்திருக்கிறார்கள்.

ஆன்மீகமும், அறிவு இயக்கமும் கலந்த ஒரு கலவை இந்த அமைப்பு என்பதை நான் அறிந்த காரணத்தால் தான், இந்த பொதுவான அமைப்பு தமிழ்ப்புத்தாண்டு உருவானதை வரவேற்கின்ற காரணத்தால் தான், இந்த விழாவில் கலந்து கொள்ள நான் ஒத்துக் கொண்டேன்.

நம்முடைய ஆண்டுகள்தமிழ் ஆண்டுகள் என்பதை இங்கு உரையாற்றிய அவ்வை நடராஜனும், பேராசிரியர் அன்பழகனும் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற பழமைவாதிகள், பெரியவர்கள் இவர்களை எல்லாம் நான் அறியாதவர்கள் என்று சொல்ல மாட்டேன்.

நான் பிறந்த கிராமம் முதல் சென்னை வரையுள்ள பெரியவர் ஆனாலும் சரி, அனைவருமே இன்றைக்கு எண்ணிக்கொண்டிருப்பது, வேறு ஆண்டுகளைத் தான். அது சமஸ்கிருத ஆண்டுகளைத் தான்.

ஆரியம் உயர்ந்ததா தமிழ் உயர்ந்ததா என்று கேள்வி கேட்டபோது, ஒரு தமிழ்ப்புலவர் ஆரியம் தான் உயர்ந்தது. தமிழ் உயர்ந்தது அல்ல என்று தீர்ப்பு கூறினார் என்று பழம் பாடல்களில் நாம் காண்கின்றோம்.

பொங்கல் நாள்தான் தமிழர்கள் உடைய ஆண்டின் முதல்நாள் என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் மாத்திரமல்ல. அவரைத் தொடர்ந்து பல புலவர்களும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வரும்போது, புதுப் பானை வைத்தோம் என்பதோடு நிறுத்தாமல், பொங்கலை நாம் கொண்டாடுகின்ற தீபாவளி போலவே கொண்டாட வேண்டும்.

தீபாவளியில் என்னென்ன காரியங்கள் நடைபெறுகின்றனவோ, அந்த காரியங்கள் எல்லாம் பொங்கல் திருநாளில் தமிழர்களுடைய இல்லத்தில் நடைபெற வேண்டும். திருவிளக்கு ஏற்றப்பட வேண்டும். புதுக் கோலங்கள் போடப்பட வேண்டும்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அனைவரும் புத்தாடை உடுத்த வேண்டும். அப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான நாளாக பெங்கலைக் கொண்டாடி இன்று தமிழர்களுடைய புத்தாண்டு நாள் என்றும் கொண்டாடப்பட வேண்டும் என்றார் முதல்வர்.

விழாவில் மாநில, மத்திய அமைச்சர்கள், தமிழறிஞர்கள், பல்துறைப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி கருணாநிதி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், ரவிராஜபாண்டியன், ராஜேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

முதல்வருக்கு நினைவுப் பரிசாக, முத்துச் சிப்பியில் கருணாநிதி அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற பேழை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அவ்வையார் உள்ளிட்டோர் கருணாநிதியை பாராட்டி கவிதை பாடுவது போன்ற நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது. அதை கருணாநிதி ரசித்துப் பார்த்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X