ஆதாம் பாலத்தில் தவித்த 7 அகதிகள் மீட்பு
ராமேஸ்வரம்: இலங்கையின் மன்னாரிலிருந்து படகு மூலம் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்ட 7 அகதிகள் ஆதாம் பாலத்தின் முதல் திட்டில் இறக்கி விடப்பட்டு பரிதவிப்புக்கு ஆளாகினர். அவர்களை கடலோரக் காவல் படையினர் மீட்டு மண்டபம் முகாமில் சேர்த்தனர்.
வவுனியாவைச் சேர்ந்தவர் ரவி. இவர் 3 குழந்தைகள், 4 பெண்களுடன் படகு மூலம் மன்னாரிலிருந்து ராமேஸ்வரத்திற்குக் கிளம்பினார். தலா ரூ.10 ஆயிரம் கொடுத்து அவர்கள் வந்தனர்.
அவர்களை அழைத்து வந்த படடட்டி, ஆதாம் பாலத்தின் முதல் திட்டில் இறக்கி விட்டுச் சென்று விட்டார். இதனால் இலங்கைக்கும் திரும்பிச் செல்ல முடியாமல், ராமேஸ்வரத்திற்கும் வர முடியாமல் அனைவரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
பின்னர் ரவி 6 மைல் கல் தொலைவுக்கு கடலில் நீந்தி, அரிச்சமுனைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து நடந்த அவர் கடலோரக் காவல் படை போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கடலோரக் காவல் படையினர் ஆதாம் பாலத்திற்கு விரைந்து சென்று தவித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். பின்னர் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.