வி.சிறுத்தைகள் எம்எல்ஏ விபத்தில் காயம்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை சாலை விபத்தில் காயமடைந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மங்களூர் தனித் தொகுதி எம்.எல்.ஏ செல்வம், தனது தொகுதியில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக காரில் சென்றார்.
விழுப்புரம் மாவட்டம் செங்குறிச்சி கிராமத்தில் கார் சென்றபோது, தனக்கு முன்னால் சென்ற லாரியை முந்த கார் டிரைவர் முயன்றார். அப்போது எதிர் திசையில் ஒரு பேருந்து வந்தது.
கார் மீது மோதி விடாமல் தவிர்க்க முயன்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறிய கார் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் செல்வம் காயமடைந்தார். செல்வத்தின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.