4 புதிய ரயில் திட்டங்கள்-பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நான்கு முக்கிய ரயில்வே திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், எண்ணூர் துறைமுகம் முதல் புத்தூர் வரையில் தனியான சரக்குப் பாதையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஈரோட்டையும், கோவில் நகரமான பழனியையும் இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.
மாமல்லபுரத்திலிருந்து கடலூருக்கு புதுச்சேரி வழியாக புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.
விழுப்புரம், திண்டுக்கல் இடையே கூடுதல் ரயில் பாதை அமைக்க வேண்டும்.
மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நான்கு முக்கிய திட்டங்களும் ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.