கைதி மனைவி 'கற்பழிப்பு' வழக்கில் பெரும் திருப்பம்
திருப்பூர்: வேலூர் சிறைக் காவலர்களால் கற்பழிக்கப்பட்டதாக கூறப்பட்ட கைதியின் மனைவி நதியா, தனக்கு திருமணமே ஆகவில்லை என்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நதியாவை அவரது பெற்றோருடன் செல்ல நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கற்பழிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் கணேசன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில் தனது மனைவி நதியாவை, துணை ஜெயிலர் தமிழ்ச்செல்வன், சிறை வார்டன்கள் பாலமுருகன், மூர்த்தி, மகேந்திரன் ஆகியோர் கடத்திச் சென்று 2 முறை கற்பழித்ததாக தெரிவித்திருந்தார். மேலும் அவரை ஆபாச படம் எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இந் நிலையில் தனது மனைவியைக் காணவில்லை என்றும், அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேலூர் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நதியாவை போலீஸார் தேடி வந்தனர். மேலும், வேலூர் மாவட்ட எஸ்.பி. அறிவுச்செல்வம், கைதி கணேசனிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
இந் நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட நதியா திருப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக அவரை காட்பாடி டி.எஸ்.பி. பட்டாபி தலைமையிலான போலீஸ் படை வானியம்பாடிக்கு கொண்டு வந்தது.
அங்கு டி.எஸ்.பி. அலுவலகத்தில், எஸ்.பி. அறிவுச்செல்வம் முன்னிலையில் நதியா ஆஜர்படுத்தப்பட்டார். நதியாவிடம் எஸ்.பி. விசாரணை நடத்தினார்.
'கற்பழிக்கவில்லை':
விசாரணையின்போது தன்னை யாரும் கற்பழிக்கவில்லை என்றும் வேலை தேடியே திருப்பூர் சென்றதாகவும் நதியா கூறியதாக தெரிகிறது. தன்னுடன் தநது தாயாரும் வந்ததாகவும் நதியா கூறியுள்ளார். இதனால் இந்த வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து இன்று பிற்பகல் நதியாவை வேலூர் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
பின்னர் உயர்நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார். அங்கு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
'கல்யாணமே ஆகவில்லை':
பின்னர் நதியா நீதிபதிகளிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, தனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை என்று நதியா கூறவே நீதிபதிகள் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நதியாவை அவரது பெற்றோருடன் செல்ல அனுமதித்தனர். வழக்கை வருகிற 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் நதியா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
முதலில் நதியாவிடம் ரகசிய விசாரணை நடத்த நீதிபதிகள் தீர்மானித்திருந்தனர். ஆனால் பின்னர் இதை ரத்து செய்து விட்ட ஓபன் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
தனக்கு திருமணமே ஆகவில்லை என்று நதியா கூறியிருப்பது பெரும் குழப்பத்தையும், திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கணேசன் கூறுவது உண்மையா, நதியா கூறுவது உண்மையா என்பது புரியவில்லை.
ஒருவேளை, சிறைக் காவலர்களை பழி தீர்க்க கணேசன் நாடகமாடியுள்ளாரா அல்லது போலீஸாருக்குப் பயந்து நதியா இவ்வாறு கூறுகிறாரா என்பது தெரியவில்லை. நீதிமன்றத்தின் தொடர் விசாரணையில் இதுகுறித்துத் தெரிய வரும் என்று தெரிகிறது.