ஆபாச பட விவகாரத்தி்ல் பெண் துணை தாசில்தார்
மதுரை: மதுரையில் பல்வேறு பெண்களை மிரட்டி ஆபாசப் படம் எடுத்த வழக்கில் பெண் துணை தாசில்தார் ஒருவர் சிக்கியுள்ளார்.
இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெண் துணை தாசில்தார் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை சி.எம்.ஆர். ரோட்டில் நகை புரோக்கராக இருந்தவர் லட்சுமணன். இவரது மனைவி முத்துலட்சுமி (40). லட்சுமணன் இறந்து விட்டார். இந் நிலையில் லட்சுமணனின் நண்பரான இஸ்மாயில்புரத்தை சேர்ந்த ஜாகீர் உசேனுக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் முத்துலட்சுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை தனது செல்போனில் ஆபாசப் படம் எடுத்துள்ளார் ஜாகீர் உசேன்.
பின்னர் அதைக் காட்டி முத்துலட்சுமியை மிரட்டி அவரது சொத்துக்களைப் பறிக்க முயன்றார் ஜாகீர் உசேன். ஆனால் சொத்துக்களைத் தர மறுத்துள்ளார் முத்துலட்சுமி.
இதனால் ஆத்திரமடைந்த ஜாகீர் உசேன், தனது காதலி ஆனந்தி உள்ளிட்டோரின் உதவியுடன், முத்துலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து நகை, பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றார்.
இதையடுத்து தெப்பக்குளம் காவல் நிலையத்தில் ஜாகீர் உசேன் மீது முத்துலட்சுமி புகார் கொடுத்தார். இதையடுத்து ஜாகீர் உசேனும், ஆனந்தியும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் பெற்று விட்டனர்.
இதற்கிடையே, போலீஸ் விசாரணையில், ஜாகீர் உசேன் ஏற்கனவே பல்வேறு பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டியதாக அவர் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் இன்னொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாகீர் உசேனின் காதலியான ஆனந்தி ஒரு துணை தாசில்தார் எனத் தெரிய வந்துள்ளது.
ஜாகீர் உசேனின் கூட்டாளியாகவும் செயல்பட்டு வந்துள்ளார் ஆனந்தி என்று தெரிய வந்துள்ளது. எனவே ஆபாச பட சம்பவங்களில் ஆனந்திக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
செக்ஸ் டாக்டர் பிரகாஷ், லியாகத் அலி வழக்கு போல ஜாகீர் உசேன் விவகாரமும் பெரிய அளவில் இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இந்த நிலையில் துணை தாசில்தார் ஆனந்தி மீது துறை ரீதியிலான விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை அரசு அதிகாரிகள் மத்தியில், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.