தீவிரவாதம்-கொண்டு வந்ததே அமெரிக்கா தான்: ஈரான்

பல்லாண்டுகள் நீடித்த ஈரான்-இராக் போருக்குப் பின் ஈரானிய அதிபர் அந் நாட்டுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இராக் அதிபர் ஜலால் தலிபானியுடன் பேச்சு நடத்திய அவர் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
இராக்கில் ஷியா தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்கி வருவதாக அமெரிக்கா கூறுவது தவறு. இப்படியே அடுத்தவர்களை குற்றம் சாட்டுவதையே ஜார்ஜ் புஷ் வேலையாக வைத்திருந்தால் அமெரிக்காவுக்குத் தான் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
இது இராக். அமெரிக்கா அல்ல என்பது புஷ் முதலில் உணர வேண்டும். இந்தப் பகுதிக்கு தீவிரவாதத்தை கொண்டு வந்தே அமெரிக்கா தான்.
சர்வாதிகாரி சதாம் ஹூசேன் இல்லாத இராக்குக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. பலமான, ஐக்கிய, சக்தி வாய்ந்த இராக் உருவாவது இந்த பிராந்தியத்தையே பலப்படுத்தும் என்றார் அகமதிநிஜாத்.
இஸ்ரேலுக்கு கண்டனம்:
இந் நிலையில் பாலஸ்தீனத்தில் காஸா பகுதிக்குள் இஸ்ரேலியப் படைகள் மீண்டும் ஊடுருவியுள்ளதை ஈரான் மிக வன்மையாக கண்டித்துள்ளது.
இது குறித்து ஈரான் மதத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கூறுகையில்,
காஸா பகுதி வன்முறைக்கு அமெரிக்கா தான் பொறுப்பு. பாலஸ்தீனத்தில் இந்த மன்னிக்க முடியாத குற்றங்களை இஸ்ரேல் செய்து வருவதற்கு அமெரிக்காவின் பின்னணி உதவிகள் தான் காரணம்.
இந்த ஆக்கிரமிப்பு சக்திகளை எதிர்த்து இஸ்லாமி நாடுகள் ஒன்று திரள வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாங்கள் கைப்பாவை அல்ல: செளதி
இதறிகிடையே செளதி அரேபிய இளவரசரும் அந் நாட்டு வெளியுறவு அமைச்சருமான செளத் அல் பைசல் நேற்று அந் நாட்டின் உயர் மட்ட செளரா கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில்,
அமெரிக்காவின் நெருக்கடியால் செளதி தனது உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளை மாற்றி்க் கொள்ளாது. நாங்கள் யாருக்கும் கைப்பாவையாக இருக்க மாட்டோம்.
கடந்த 20 வருடமாக அமெரிக்காவுடன் பாதுகாப்புரீதியில் நெருக்கமாக இருக்கிறோமே தவிர, நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகு வைக்க மாட்டோம்.
பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலை அடக்கி வைக்குமாறு அமெரிக்காவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.