For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுஜாதா பெயரில் விருது- மனுஷ்யபுத்திரன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: எழுத்தாளர் சுஜாதாவின் பெயரில் ஆண்டுதோறும் உயரிய இலக்கிய விருது வழங்கப்படும் என உயிர்மை பதிப்பக ஆசிரியரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் அறிவித்துள்ளார்.

எழுத்துலக பிரம்மாக்களில் ஒருவராகத் திகழ்ந்த சுஜாதா என்கிற எஸ்.ரெங்கராஜன் அண்மையில் மரணமடைந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

ஆழ்வார்பேட்டையில் நாரத கான சபாவில் நடந்த இந் நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நடிகர்கள் சிவகுமார், கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுஜாதாவின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் அஞ்சலி கூட்டம் நடந்தது.

மரபுகளை மீறிய துணிச்சல்காரர்-ஜெயகாந்தன்:

ஜெயகாந்தன் பேசுகையில், எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் சுஜாதா. அவருடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரது எழுத்துக்களை நான் வெகுவாக ரசித்தவன். தமிழில் வசீகரமான ஒரு எழுத்து நடையை அறிமுகப்படுத்தியவர், அதற்காக பல மரபுகளை மீறிய துணிச்சல்காரர் என்றார்.

புரட்சிகரமான எழுத்தாளர்:

சுஜாதாவுக்கு நெருக்கமான எழுத்தாளர்களில் ஒருவரும், உயிர்மை பதிப்பக உரிமையாளருமான மனுஷ்யபுத்திரன் பேச்சு மிகவும் உணர்வுப் பூர்வமாக அமைந்திருந்தது.

அவர் பேசுகையில், மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் புரட்சிகரமான எழுத்தாளர் ஒருவர் இருந்தாரென்றால் அவர் சுஜாதாதான். இதைப் பலமுறை பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். அந்த எழுத்து மேதையை நினைவு கூறும் வகையில் இனி ஆண்டுதோறும் சுஜாதா இலக்கிய விருதினை உயிர்மை பதிப்பகம் மூலம் வழங்கவிருக்கிறோம். புதிய எழுத்தாளர்களுக்கு அந்த விருது மிகப்பெரிய உற்சாகத்தையும் வேகத்தையும் தரும் என்றார்.

திரைக்கதை சுஜாதா-கமல்...

நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், சுஜாதா முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, மேலும் அதிக பாரத்தை அவருக்குக் கொடுத்தவன் நான்.

எனக்கு அவர் எழுதிக் கொடுத்து, ஆனால் சினிமாவாக எடுக்காத கதைகள் இன்னமும் எவ்வளவோ என் வீட்டில் உள்ளன. எனது மருதநாயகம் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் சுஜாதா.

டைட்டிலில் திரைக்கதை சுஜாதா-கமல் என நான் எழுதிக் கொடுத்தேன். உடனே அந்த காகிதத்தை வாங்கிய சுஜாதா, அவரது பெயரை அடித்துவிட்டதோடு, உங்க பெயரே இருக்கட்டும் என்றார் பெருந்தன்மையோடு.

அவருடன் இணைந்துதான் மீண்டும் அந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவர் போய்விட்டார். இப்போது மருதநாயகம் படத்தை எடுத்தால் நான் மட்டுமே அதிகம் எழுத வேண்டியிருக்கும். நேர்மை, ஒழுக்கம் இரண்டையும் தனது வாழ்க்கை நெறியாகக் கொண்டவர் அவர்.

தமிழுக்காக இப்படி ஒரு விழா எடுப்பது பெருமையாக உள்ளது. தமிழ் வாசகர்களின் தரத்தை உயர்த்திக் காட்டும் ஒரு நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன். சுஜாதா அதிகம் காதலித்தது தமிழைத்தான். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்ற வார்த்தையில் அதிக நிஜமிருக்கிறது என்றார் கமல்.

சிவகுமார்...:

நடிகர் சிவகுமார் பேசுகையில், சுஜாதாவின் தீவிர ரசிகன் நான். அவரது நூல்களை ஒரு லைப்ரரியாகவே சேமித்து வைத்திருக்கிறேன். அந்த மேதையை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோமா என்ற கேள்வி இன்னமும் எனக்குள் உறுத்திக் கொண்டே இருக்கிறது. நாடக உலகுக்கு அவர் செய்தவை ஏராளம். அவர் மறுபிறவி எடுக்க வேண்டும், மீண்டும் சுஜாதாவாகவே நம்முடன் வாழவேண்டும் என பேராசைப்படுகிறேன் என்றார்.

சுஜாதாயிஸம்- வைரமுத்து:

வைரமுத்து பேசுகையி்ல், மரபுகளை உடைத்த மாமேதை சுஜாதா. வாழ்க்கை தராத மலர்ச்சியை அவருக்கு மரணம் தந்தது. அவரது உடலை நான் கண்டபோது, அதில் உறைந்த புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் ஒரு கடல்.

பொதுவாக, தமிழர்கள் செத்தபிறகுதான் சிங்காரித்து அழகு பார்ப்பார்கள். அப்படியில்லாமல், இனியாவது வாழும்போதே வாழ்த்த கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்திய இலக்கியத்தையும், மேல்நாட்டு இலக்கியத்தையும் கலந்து சுஜாதாயிஸம் என்ற புது இலக்கியமே படைத்தவர் அந்த மேதை. எனக்குத் தெரிந்து எந்த எழுத்தாளரையுமே அவர் புறம் பேசியதில்லை.

உங்கள் எழுத்தை மேம்படுத்துங்கள், அடுத்தவர் எழுத்தைக் குறை சொல்லாதீர்கள் என்பார் எப்போதும். தமிழும் அதன் வீச்சும் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும். உண்மை, இது வெறும் புகழ்ச்சியில்லை என்றார்.

ஞானகுரு- பாலகுமாரன்:

எழுத்தாளர் பாலகுமாரன் பேசுகையில், நாமெல்லோருமே பல விஷயங்களை சுஜாதாவிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம். எனது எழுத்துக்கள் அனைத்துக்குமே சுஜாதாதான் ஞானகுரு என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்... என்றார் எழுத்தாளர் பாலகுமாரன்.

கனிமொழி:

கவிஞர் கனிமொழி எம்.பி., பேசுகையில், அடுத்த எழுத்தாளர்களைக் குறைசொல்வது சுஜாதாவுக்குப் பிடிக்காத விஷயம். தன்னை மோசமாக விமர்சித்த எழுத்தாளர் ஒருவரின் கவிதையை என்னிடம் காட்டி, தமிழின் மிகச்சிறந்த ஹைக்கூ இது என்று பாராட்டிய பெருமகன் அவர். அவரைப் போன்ற ஆளுமை படைத்த எழுத்தாளரை பார்க்க முடியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்த அவரை இழந்த சோகம் என் ஆயுள் வரை தீராது என்றார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சாருநிவேதிதா, மதன், கணையாழி கஸ்தூரிரங்கன், விகடன் ஆசிரியர் அசோகன், ஓவியர் ஜெயராஜ், சிவசங்கரி, இயக்குநர்கள் பாலுமகேந்திரா, தங்கர் பச்சான், பெண்டாமீடியா சந்திரசேகர், நடிகர் சத்யராஜ், தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் ஞானசம்பந்தன், திருப்பூர் கிருஷ்ணன் உள்பட பலரும் சுஜாதாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் உருவப்படத்தை சுஜாதாவின் மகன்கள் கேசவபிரசாத், ரங்கபிரசாத்திடம் வழங்கினார் கமல்ஹாசன்.

புகழஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உயிர்மை பதிப்பக ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் நடராஜன், இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் வசந்த் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X