டாஸ்மாக் கடைகளில் அலாரம்-திருட்டை தடுக்க நடவடிக்கை
நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் திருட்டை தடுக்க அலாரம் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிக அளவில் பணப்புழக்கம் உள்ளதால் கொள்ளையர்களின் கவனம் இந்த பக்கம் திரும்பியுள்ளது. பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வருகின்றன.
இந் நிலையில் கொள்ளை சம்பவங்கள் மற்றும் ஊழியர்களின் முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மதுபான விற்பனைக்கு கம்யூட்டர் பில்லிங் முறை அறிமுகப்பட்டுத்தப்பட்டது.
அனைத்து கடைகளுக்கும் இந்த நடைமுறையை விரிவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் திர்மானித்துள்ளது.
அதே போல கடைகளில் கொள்ளைகளை தடுக்க வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ளது போன்று டாஸ்மாக் கடைகளிலும் அலாரம் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 கடைகளில் அலாரம் பொருத்தப்படும். கடையின் வெளிப்புறக் கதவு, அல்லது ஷாட்டர் மற்றும் பணம் வைக்கப்பட்டிருக்கும் லாக்கர் ஆகிய இடங்களில் அலாரம் பொருத்தப்படுகிறது. தினமும் ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள கடைகளில் அலாரம் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.