தஞ்சை-2 வாலிபர்கள் நடுரோட்டில் வெட்டிக் கொலை
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இரு வாலிபர்கள் நடுரோட்டில் விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
நண்பர்களான நந்தகுமார் (29), ராஜசேகர் (23) இருவரும் கோடியம்மன் கோவிலில் திருவிழாவில் பங்கேற்க பைக்கில் சென்றனர்.
கோவில் அருகே சென்றபோது அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாள், கத்திகளால் பயங்கரமாகத் தாக்கினர்.
இருவரும் தப்பியோடவே அவர்களை அக் கும்பல் விரட்டி விரட்டி நடுரோட்டில் வைத்து வெட்டித் தள்ளியது. இதில் இருவருமே அந்த இடத்திலேயே பலியாயினர்.
கொலையாளிகள் சாலையில் வந்தவர்களை கத்தி, அரிவாள்களை காட்டி மிரட்டி விட்டு தப்பி விட்டனர்.
கொலை குறித்து தகவல் அறிந்த இருவரின் உறவினர்களும் அங்கு குவிந்தனர். சிலர் அந்த பகுதியில் உள்ள சிலரது வீடுகளை அடித்து நொறுக்கினர். வீடுகளுக்கு தீயும் வைக்கப்பட்டது.
இச் சம்பவத்தை படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி கேமராமேன் ஹரி என்பவரையும் சிலர் தலையில் கடப்பாரையால் தாக்கி, வயிற்றில் கத்தியால் குத்தினர்.
இதில் படுகாயமடைந்த ஹரி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீடுகளுக்கு வைக்கப்பட்ட தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 12 வீடுகள், ஒரு கடை ஆகியவை முற்றிலும் எரிந்துபோய்விட்டன.
கொலை செய்யப்பட்ட நந்தகுமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த கனி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
கனி, அவரது சகோதரர் சூரி மற்றும் அவரது ஆட்கள் தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.