அமெரிக்காவில் 100 இந்தியத் தொழிலாளர்கள் ராஜினாமா

சிக்னல் இன்டர்நேஷனல் என்கிற நிறுவனம், இந்தியாவிலிருந்து பிட்டர்கள், வெல்டர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களைத் தேர்வு செய்து அமெரிக்காவின் மிசிஸிபியில் உள்ள பாஸ்ககெளலா என்ற இடத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு வேலைக்கு அழைத்து வந்தது.
பெரும் ஊதியம் தருவதாகவும், பல்வேறு வசதிகளையும் காட்டி இவர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் இங்கு வந்த பின்னர் அவர்களை அடிமைகள் போல நடத்த ஆரம்பித்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 100 இந்தியத் தொழிலாளர்களும் தங்களது வேலையை ராஜினாமா செய்து விட்டனர். சிக்னல் இன்டர்நேஷனல் நிறுவனம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க சட்டத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நியூ ஆர்லியன்ஸில் உள்ள தொழிலாளர் உரிமை மையத்தைச் சேர்ந்த சாகேத் சோனி என்பவர் கூறுகையில், 2005ம் ஆண்டு அமெரிக்காவை காத்ரீனா சூறாவளி தாக்கிய பின்னர் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதையடுத்து இந்தியாவிலிருந்து இந்த 100 பேரும் எச்-2பி விசாவில் அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் இங்கு வந்ததும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.
ஒரே அறையில் 24 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு வாடகையாக ஒவ்வொரு தொழிலாளருக்கும் 1050 டாலர்களை வசூலித்துள்ளனர்.
இந்த முறைகேட்டை கண்டித்து பலமுறை தொழிலாளர்கள் குரல் கொடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. மன வேதனையில் ஒரு தொழிலாளர் தனது மணிக்கட்டை கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் நடந்துள்ளது என்றார்.
இந்த கப்பல் கட்டும் தளத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இதே போன்ற பிரச்சினை வெடித்தது. அப்போது 300 இந்திய தொழிலாளர்கள் வேலையை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தப் புகார்களை சிக்னல் மறுத்துள்ளது. அமெரிக்க தொழிலாளர் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடிதான் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. எந்தவித விதி மீறலும், சட்ட மீறலிலும் நாங்கள் ஈடுபடவில்லை என்று அது கூறியுள்ளது.