சோனியா தலைவர் பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவு
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவியேற்று நாளையுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் அதிக காலம் நீடிக்கும் புதிய சாதனையை நாளை சோனியா காந்தி படைக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் வயது 123. இத்தனை ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் எந்த ஒரு தலைவரும் 10 ஆண்டுகள் வரை கட்சித் தலைவர் பதவியை வகித்ததில்லை. அந்தப் புதிய சாதனையை சோனியா காந்தி நாளை படைக்கிறார்.
இந்த பத்து ஆண்டுகளில் சோனியா சந்தித்த சோதனைகள், சவால்கள், சிக்கல்கள், நெருக்கடிகள், குளறுபடிகள் ஏராளம். இவற்றில் பெரும் சவாலுக்குரிய விஷயமாக கருதப்படுவது மத்தியில் உள்ள கூட்டணி அரசையும், அந்த அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகளையும் நிர்வகித்து வருவதுதான்.
அடுத்த முக்கிய அம்சமாக கருதப்படுவது தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை வேண்டாம் என்று கூறி அதில் மன்மோகன் சிங்கை அமர்த்தியது. இந்த தியாகம்தான் சோனியாவின் செல்வாக்கை ஒரேயடியாக உயர்த்த உதவியது என்பது அரசியல் திறனாய்வாளர்களின் எண்ணம்.
1991ம் ஆண்டு, ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்ட பின்னர் சோனியா காந்தி சுமார் 7 ஆண்டு காலத்திற்கு அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.
இந்தக் காலகட்டத்தில் பி.வி.நரசிம்மராவும், சீதாராம் கேசரியும் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தனர். இவர்கள் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி படு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. கட்சிக்குள் வேற்றுமையும், கோஷ்டி மோதல்களும் தலை விரித்தாடின.
இதையடுத்து கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சோனியா காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மன்றாடினர். இதையடுத்து 1998ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார் சோனியா.
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவியேற்று 10 ஆண்டுகள் ஆவது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தொண்டர்களும் மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். சோனியாவின் தலைமையில் காங்கிரஸ் பீடு நடை போட்டு வருகிறது. காங்கிரஸ் வரலாற்றிலேயே அதிக காலம் தலைவர் பதவியை வகித்துள்ளவர் சோனியா காந்திதான்.
கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வலுவடைந்துள்ளது. தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டுள்ளது. மக்களிடையே நன்கு பரவியுள்ளது என்றார் திவாரி.
ஆரம்பத்தில் நிர்வாகத் திறமையில்லாதவராக கருதப்பட்ட சோனியா காந்தி இன்று வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக மாறியுள்ளார் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரலாக சோனியா காந்தி விளங்குகிறார். எதிர்க்கட்சிகளுக்கு பெரும் சவாலாக திகழ்கிறார். காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக மாறியிருக்கிறார்.
சோனியா காங்கிரஸ் தலைவர் பதவியேற்றபோது, இவர் எங்கே நீடிக்கப் போகிறார் என்ற கருத்து பரவலாக நிலவியது. காங்கிரஸுக்குள்ளும் கூட சோனியா மீதான அலட்சியப் போக்குடன் இருந்தவர்கள் பலர். ஆனால் அத்தனையையும் குறுகிய காலத்தில் அவர் தவிடுபொடியாக்கினார்.
தனது அணுகுமுறையால், காங்கிரஸ்காரர்களை மட்டுமல்லாது கூட்டணிக் கட்சியினரையும் கூட தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் சோனியா. கடந்த 10 ஆண்டுகளில் கூட்டணிக்குள் பல்வேறு சலசலப்புகள், பிரச்சினைகள் எழுந்தபோதெல்லாம் அவற்றை சாதுரியமாக அவர் சமாளித்துள்ளார்.
அதேபோல அடிக்கடி முட்டுக்கட்டை போடும் இடதுசாரிகளையும் கூட சாதுரியமாக சமாளித்து வருகிறார் சோனியா.
ராகுல் காந்தியை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என கட்சிக்குள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டபோதும் கூட சோனியா காந்தி அவசரப்படவில்லை. அவருக்கு பதவி தர அவர் 3 ஆண்டு காலம் எடுத்துக் கொண்டார். 8 ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
உலகின் பத்து சக்தி வாய்ந்த பெண்களில் 3வது இடத்தைப் பிடித்ததும் சோனியா காந்தியின் சாதனை.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் கடும் நெருக்கடி கொடுத்து வரும், சவாலான சூழ்நிலையில் சோனியா காந்தி பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாட காங்கிரஸ் தயாராகி வருகின்றனர்.