சரிகா ஷா கொலை வழக்கில் 9 பேருக்கு சிறைத் தண்டனை உறுதி
சென்னை: ஈவ் டீசிங்கில் சென்னை மாணவி சரிகா ஷா கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் சரிகா. இவர் எத்திராஜ் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்ப வெளியே வந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த ஒரு காலிக் கும்பல் சரிகா ஷா மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலாட்டா செய்தனர். அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார் சரிகா ஷா.
தமிழகத்ைத பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹரி, புகழேந்தி, பிரபுதாஸ், வினோத், ஸ்ரீதர், இன்னொரு ஸ்ரீதர், பன்னீர் செல்வம், சரவணன், முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அத்தனை பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.
இவர்கள் மீது சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 2001ம் ஆண்டு 9 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து 9 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார். இதில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, குற்றவாளிகள் 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தனது தீர்ப்பில் நீதிபதி கிருஷ்ணன் கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவது வேதனை தரக்கூடியது. 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகாஷா பலியாகி உள்ளார்.
எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்கிறேன்.
இந்த வழக்கில் அரசுக்கு சில பரிந்துரைகளை சொல்ல விரும்புகிறேன்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி-கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும், பள்ளி, கல்லூரி பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் வகுப்புகளை நடத்த வேண்டும். இதற்காக அரசு பாடம் கொண்டு வர வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி.