சாலை விபத்தில் 3 பெண்கள் பலி-19 பேர் படுகாயம்
சிவகங்கை: சிவகங்கை அருகே திருமண வீட்டார் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். புதுமாப்பிள்ளை உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த நந்தகுமாருக்கும், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜான்சி ராணிக்கும் நேற்று கல்யாணம் நடந்தது. கல்யாணத்தை முடித்துக் கொண்டு திருப்பாச்சேத்தியிலிருந்து திருமங்கலத்துக்கு திருமண வீட்டார் வேனில் கிளம்பினர்.
அப்போது எதிரே கரும்பு ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் வேனில் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த சீனியம்மாள், செல்லத்தாய், அன்னபூரணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
புதுமாப்பிள்ளை நந்தகுமார் உள்ளிட்ட 19 பேர் படுகாயமடைந்தனர். இதில் நந்தகுமாரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.