
தென் மாவட்டங்களில் கன மழை
மதுரை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் வைகை உள்பட பல்வேறு அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது.
இந்த மழை வட மாவட்டங்களில் குறைந்து விட்டது. ஆனால் தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கொடைக்கானலில் ...
கொடைக்கானலில் கடந்த ஐந்து நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாட்டுப்பட்டியில் உள்ள பாலம் உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பேரிஜம் ஏரி நிரம்பிவிட்டது. வெள்ளி அருவி, வட்டக்காணல் அருவி ஆகியவற்றில் வெள்ளம் போல தண்ணீர் கொட்டுகிறது.
விக்கிரமாசிங்கபுரத்தில் பேய்மழை:
நெல்லை மாவட்டம் விக்கிரமாசிங்கபுரத்தில் பெய்த பலத்த மழையால் 50 வீடுகளை வெள்ளம் சுழ்ந்தது. அங்கு குடியிருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
விக்கிரமாசிங்கபுரம் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை கொட்டியது. இதையடுத்து பாபநாசம் மெயின் ரோட்டில் மருதநகர் அருகேயுள்ள வடக்கு கோடைமேழலகியான் கால்வாய் நிரம்பி மருதநகர் மெயின்ரோட்டில் 4 அடி உயரத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பாபநாசத்தில் இருந்து புறப்பட்ட பேருந்துகள் அனைத்தும் ஆமை வேகத்தில் உருண்டு சென்றன. மேலும் அருகேயுள்ள திருவள்ளூவர் நகர் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 92ம் ஆண்டு மழையால் 25 உயிர்கள் பலி கொண்டதை போல மீண்டும் அந்த சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் விகேபுரம் மெயின்ரோட்டில் உள்ள ராமலிங்கபுரம் தெருவில் உள்ள 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
தூத்துக்குடியில் ..:
தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள திருவிக நகருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
சுமார் 100 வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. இதையடுத்து அங்கு வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர்.
தென்காசியில் ...:
தென்காசி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் செல்லும் வழியில் மரக்கிளை முறிந்து விழுந்தது. தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் நேற்று பகல் பொழுதில் பலத்த மழை பெய்தது.
குற்றாலம் செல்லும் வழியில் மின்நகர் விலக்கு அருகே மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இதில் சிறுதுநேரம் போக்குவரத்து மற்றும் மின்தடை பாதிப்பு ஏற்பட்டது.
மின் வாரிய ஊழியர்கள் விரைநது வந்து மின் வயர்களை சரிசெய்தனர்.
இலங்கையிலும்...:
அதே போல இலங்கையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் 60,000க்கும் அதிகமான தமிழர்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. மட்டக்களப்பு உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரக் கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமான வீடுகளை அடித்துச் சென்று விட்டது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் 60,000 குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
அந்த பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகளும் நிரம்பி எந்த நேரத்திலும் உடையும் அபாயம் உள்ளது.
மன்முனையில் 13 ஆயிரம் குடும்பங்களும், காத்தான் குடியில் 3385 குடும்பங்களும் வீடுகளை இழந்துள்ளனர். வழக்கத்துக்கு மாறாக இந்த மாதம் அங்கு 36 செ.மீ. மழை பெய்துள்ளது. சில கிராமங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.