'கேப்டன்' பண்ணை வேலி அகற்றம்!: நிலம் கையகம்; அதிகாரிகள் அதிரடி!

மதுராந்தகம் அருகே விஜயகாந்த்துக்குச் சொந்தமான கேப்டன் பண்ணை உள்ளது. 400க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த நிலத்தில், 28 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக ஆய்வு நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள், விஜயகாந்த் நிலத்துடன் ஆக்கிரமிப்பு நிலவும் இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து மதுராந்தகம் தாசில்தார் நடராஜன், விஜயகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
தாசில்தார் கொடுத்த காலத்திற்குள் விஜயகாந்த் நிலத்தை ஒப்படைக்கவில்லை. மேலும், கால அவகாசம் தேவை என்று கூறி தனது வக்கீலை தாசில்தாரிடம் அனுப்பி வைத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த தாசில்தார் நடராஜன், இறுதி நோட்டீஸை விஜயகாந்த்துக்கு அனுப்பினார்.
இதனால் எந்த நேரமும் விஜயகாந்த் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை போலீஸாருடன் கேப்டன் பண்ணைக்கு தாசில்தார் நடராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்த வேண்டும், கேப்டன் பண்ணை நுழைவாயிலைத் திறந்து விடுங்கள் என அங்கிருந்தவர்களிடம் கூறினார். ஆனால் கேட் சாவியைத் தருவதில் விஜயகாந்த் தரப்பு காலதாமதம் செய்ததால், பொக்லைன் எந்திரத்தை வரவழைத்த அதிகாரிகள், அதிரடியாக மின் வேலியை தகர்த்து உள்ளே புகுந்தனர்.
மின் வேலி முழுவதையும் அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் தனியாக பிரிக்கப்பட்டு கையகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
விஜயகாந்த் நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் மற்றும் போலீஸார் குவிந்திருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.