
இந்திராகாந்தி சரணாலயம்-சுற்றுலா பயணிகளுக்கு தடை
பொள்ளாச்சி: இந்திராகாந்தி சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே இந்திராகாந்தி வனச் சரணாலயம் உள்ளது. இங்கு பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி என 6 வனச்சரகங்கள் உள்ளது.
தமிழகத்தில் கோடையில் ஏற்படும் வறட்சியால் ஆண்டுதோறும் வனச்சரணாலயங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படும். கோடை வறட்சியின்போது குடிநீர் மற்றும் குளுமையான வசிப்பிடத்துக்காக விலங்குகள் அடந்த காட்டுக்குள் இருந்து வெளியே வரும்.
இது சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பல்ல என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வறட்சி காலத்தில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும் போன்ற காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தாண்டு கோடையை முன்னிட்டு இந்திரா காந்தி வனச் சரணாலயத்தில் நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில தினங்களாக கனமழை பெய்த போதிலும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வன அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதே போன்று கடந்த 1ம் தேதி முதல் நீலகிரி முதுமலை சரணாயலத்தலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.