நிர்வாணப்படுத்தி ராமேஸ்வரம் மீனவர்களை சித்திரவதை செய்த கடற்படை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களைப் பிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை அடித்தும், நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியும் சித்திரவதை செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் விசைப் படகு என்ஜினை துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தி விட்டுச் சென்ற சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் செய்யும் வகையில் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது இலங்கை கடற்படை.

குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினரிடம் தினசரி சிக்கி படாதபாடு பட்டு வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் ஒரு கொடுமையை அரங்கேற்றியுள்ளது இலங்கை கடற்படை.

நேற்று மாலை கச்சத்தீவு அருகே 400க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப் படகுகளில் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 ரோந்துப் படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.

தமிழக மீனவர்களின் சில படகுகளை மட்டும் பிடித்துக் கொண்டனர். மற்றவர்கள விரட்டி விட்டனர். பின்னர் பிடிபட்ட படகுகளில் இருந்த மீனவர்களை அடித்தனர். பிறகு அவர்களை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தினர்.

பிறகு மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலில் வீசினர். மீனவர்களின் வலைகளையும் துண்டித்து சேதப்படுத்தினர்.

பின்னர் கிளம்பிச் செல்வதற்கு முன்பு மீனவர்களின் படகுகளின் என்ஜின்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து என்ஜின்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

பின்னர் கடற்படையினர் அங்கிருந்து சென்றவுடன் தீயை அணைத்த மீனவர்கள் அங்கிருந்து தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பும், கொந்தளிப்பும் நிலவுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...