வெள்ளச் சேதம்-அடுத்த வாரம் மத்திய குழு வருகை
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு அடுத்த வாரம் தமிழகம் வருகிறது.
தமிழத்தில் கடந்த மாதம் பெரு மழை பெய்து பெரும் நாசத்தையும், 20க்கும் மேற்பட்டோரின் உயிரையும் பறித்து விட்டுச் சென்றது. இன்னும் அந்தப் பாதிப்பிலிருந்து விவசாயிகள் மீளவில்லை. பல லட்சம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் அனைத்தும் மூழ்கி நாசமாகி விட்டன.
பயிர்ச் சேதம் மற்றும் மழை, வெள்ள சேதம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர். இந்த அறிக்கைகளின் அடிப்படையில், மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை ஒன்றை அனுப்பி நிவாரண உதவியைக் கோரியுள்ளது.
இதையடுத்து அடுத்த வாரம் மத்திய நிபுணர் குழு தமிழகம் வரவுள்ளது. இக்குழுவினர் தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில், மத்திய அரசு தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை ஒதுக்கும்.
ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதம் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிவாரண நிதியே இன்னும் வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.