பிரபாகரன் சிங்களப் படத்துக்கு இடைக்கால தடை
சென்னை: சிங்கள இயக்குநர் துஷாரா பெரீஸ் இயக்கியுள்ள பிரபாகரன் படத்துக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் பெரீஸ், பிரபாகரன் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இதில் பிரபாகரன் குறித்தும், தமிழர்கள் குறித்தும் இழிவாக சித்தரித்திருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், தமிழர் அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி
சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை முதலாவது சிட்டி சிவில் கோர்ட் நீதிபதி ஏ.சேதுராமன் விசாரித்தார். விசாரணைக்குப் பின்னர் இப்படத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் பட தயாரிப்புகளை ஜெமினி கலர் லேபிலிருந்து கொண்டு செல்லவும் தடை விதித்தார்.
மேலும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பட நிறுவனத்திற்கும், ஜெமினி லேபுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வருகிற 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.