India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகம் மாநிலமா அல்லது தனி நாடா?- கி.வீரமணி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: எந்த சட்டத்தையும் மதிக்காமல் செயல்படும் கர்நாடகா, இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமா அல்லது தனி நாடா என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையை கேலிக்கூத்தாக்கும் சம்பவங்கள், பற்பல மாநிலங்களில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடைபெறுகின்றன.

கர்நாடக தேர்தல் வரவிருக்கிறது என்றவுடனேயே ஆயுதமாக ஓகனேக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தை கையில் எடுத்து இனவெறியை கிளப்பி விட்டு, தமிழர்களின் உரிமை பறிப்பு விளையாட்டு விளையாடி வருகின்றனர்.

தமிழக முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு, பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தினை தாக்குதல், தமிழ்த் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளை தாக்குதல், தமிழ்நாட்டு பஸ்களை சிறைப்பிடித்தல் இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டு தமிழர்களின் உணர்வுகளுக்கு அறைகூவல் விடுக்கின்றனர்.

பன்மடங்கு செய்யத் தெரியாதா?:

இங்கே அதையே திருப்பி, அதை விட பன்மடங்கு அதிகமாக செய்யத் தெரியாதா தமிழர்களுக்கு? தமிழ்நாட்டில் உள்ள கனரா வங்கிகள், உடுப்பி ஹோட்டல்கள், கன்னட வணிக நிலையங்களுக்கு பாதுகாப்பு கோர வேண்டிய அளவுக்கு எதிர்விளைவுகள் கிளம்பத் தொடங்கினால் என்னவாகும்?

அண்டை மாநிலங்களுடன் சுமூக உறவுடன் பிரச்சினைகளை பேசித் தீர்க்க எப்போதும் தயங்காத, முதிர்ந்த அரசியல் அணுகுமுறையை கையாளும் திமுக அரசு இங்கே இருப்பதால் சகோதரத்துவம் இங்கே இருக்கிறது. அது சில நேரங்களில் பலமாக கருதப்படாமல், பலவீனமாக நோக்கப்பட்டு விடுகிறது.

கர்நாடகாவில் நடைபெறுவது குடியரசுத் தலைவர் ஆட்சி- மத்திய அரசின் ஆட்சிதான். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்கக் கூடாது.

கர்நாடகம், இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநிலமா அல்லது பிரிக்கப்பட்ட சுதந்திர நாடா?. ஓடும் நதிக்கு அவர்களே உரிமையாளர்களா?. மத்திய அரசின் சட்டம் எதையும் மதிக்காமல், வன்முறை, காலித்தனங்கள், விரட்டுதல் என்றால் அது தமிழ்நாட்டில் எதிரொலிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று கூறியுள்ளார் வீரமணி.

தமிழர்களின் பொறுமையை உடைத்து விடாதீர்கள்:

லட்சிய திராவிட முன்னேற்ற கழக பொதுசெயலாளர் விஜய டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு செல்லும் பஸ்களுக்கு பெருஞ்சேதம் விளைவிப்பது, பயணிகளை சிறைபிடிப்பது, தமிழ்ப்படங்கள் ஓடும் தியேட்டர்களை தாக்கி சேதப்படுத்துவது, பேனர்களை கிழிப்பது, தமிழ்ச் சங்க பெயர் பலகையை போட்டு உடைப்பது போன்றவை ஜனநாயக ரீதியில் நடைபெறும் சம்பவங்களாக தோன்றவில்லை. இதுபோன்ற வன்முறை சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அந்த மாநில அரசு அடக்க வேண்டும்.

கர்நாடகத்தில் நடப்பது கவர்னர் ஆட்சிதான் என்றாலும் கூட அதுவும் ஒருவிதத்தில் காங்கிரஸ் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் ஆட்சிதான். தேசிய ஒருமைப்பாட்டை எண்ணிப்பார்த்து அதை மனதில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக சட்டசபைக்கு எதிர்வரும் தேர்தலை குறி வைத்த வண்ணம் கன்னடர்களின் வாக்குகளான ஓட்டை எண்ணிக் கொண்டு, நாட்டையும், தேசிய ஒருமைப்பாட்டையும் எண்ணிப்பார்க்காமல் மத்திய அரசு மவுனம் சாதிக்க கூடாது.

கன்னட அமைப்பினர் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிகிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்லாயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். இதுவரை அந்த கன்னடத் தோழர்களுக்கு எங்களால், எந்தவித பங்கமோ, பாதிப்போ ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றதில்லை.

அது எங்களின் பண்பு. தமிழர்களின் பண்பாடு. அதற்காக எங்களை கோழைகள் என்றோ, வீரமில்லாதவர்கள் என்றோ கருதிவிட வேண்டாம். எங்களது வீரத்திற்கு எல்லை என்பதே இல்லை. ஆனால் பொறுமைக்கு உண்டு எல்லை.

அதனால்தான் கன்னட அமைப்பினருக்கு தெரிவித்து கொள்கிறோம். தமிழர்களாகிய எங்களுக்கு நாங்களே போட்டுக் கொண்டிருக்கும் பொறுமையெனும் பூட்டை உடைத்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X