For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்-கர்நாடகத்துக்கு ரஜினி சூடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நான் பெரிதாக மதிக்கிற கர்நாடக அரசியல்வாதிகள் இன்று அரசியல் ஆதாயத்துக்காக ஆட்டம் போடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கிறேன்... அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்; அதன் விளைவு மோசமாக இருக்கும். மக்கள் உங்களைச் சும்மா விடமாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதியில் பேசிய ரஜினி,

இது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ்பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ்பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன். இதற்காக வேதனைப்படுகிறேன்.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. கவர்ன்மென்ட் இருக்கா, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா... மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்... யார் சொன்னால் கேட்பார்கள்... புரியவில்லை.

இப்ப நம்மளோட நிலம் இருக்கு... அதை வேறொருத்தர் சொந்தம்னு சொன்னா, பட்டா இருக்கா எடுய்யான்னு கேட்டு, அது இருந்தா ரிஜிஸ்திட்ராரே ஒதைச்சு அனுப்பிச்சுடுவார்...

பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டுவிட்டது. நமக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து நாம தண்ணி எடுத்துக்க திட்டம் போட்டா அதை எடுக்கக் கூடாதுன்னு தடுத்தா ஒதைக்க வேண்டாமா...

இதை எப்பவுமே அவங்க பண்ணிக்கிட்டிருக்காங்க... விடுங்க. சரி, எனக்கு இதுல என்ன வருத்தம்னு சொன்னா... ஒரு தேசியக் கட்சி... மிகப்பெரிய தேசியக் கட்சி (பாஜக), அந்த மாநிலத்தின் அந்த கட்சியோட மிகப்பெரிய தலைவராக இருந்தவர், இருப்பவர் (எதியூரப்பா).. இப்ப வந்து இந்த விஷயத்தைத் தூண்டிவிடறார். என்ன கேவலம் பாருங்க.

என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடா அவுங்க இவுங்க எல்லாத்தையும் விட்டுடுங்க...

பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். அப்படிப்பட்ட ஒரு பெரிய தலைவர் வந்து இதைத் தூண்டிவிடுறார். எதுக்கு? எலக்ஷன்... தேர்தல் வருது. அந்த தேசியக் கட்சியைச் சேர்ந்தவங்க, இங்க நம்ம மாநிலத்தில் இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காங்க.

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் (காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா) அவர். மும்பையிலிருந்து இப்ப வந்துட்டு (மகாராஷ்டிர கவர்னராக இருந்தவர்), இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதாவது இந்த வைரஸ் உருவாகக் காரணமே, கலைஞர்தான்னு சொல்றார்.

என்ன கேவலங்க இது. மக்கள் என்ன முட்டாள்களா... அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா.... மக்கள் எங்கிருந்தாலும் அது கர்நாடகமோ தமிழகமோ... அவங்க முட்டாள்கள் அல்ல...

அரசியல்வாதிகளே உண்மையைப் பேசுங்க. சத்தியம் பேசுங்க. சுயநினைவோட பேசுங்க. (நெஞ்சில் கை வைத்து) இங்க இருந்து பேசணும்... அவன் பாத்துக்கிட்டே இருக்கான். தெய்வம் அவன்.

இங்க இருக்கிற நீங்கள்ளாம் (மக்கள்) தெய்வத்துக்குச் சமம்... எனக்குத் தெரியாதா... உண்மை, சத்தியம், நியாயம் அதுதான் என்னிக்குமே சோறுபோடும். என்னிக்குமே காப்பாத்தும்.

சும்மா எல்லாரும் எலெக்ஷனுக்காக ஆட்டம் போட்டுக்கிட்டிருக்காங்க...
இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் அங்கே விரைவில் வரப்போகிற தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள்.

நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவகவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, தரம்சிங், கார்கே, அனந்தமூர்த்தி போன்றவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்... அதன் விளைவு மோசமாக இருக்கும். உங்களையே அழிச்சிடும்.

இதை மீண்டும் மீண்டும் வளர விடாதீர்கள், காவிரி பிரச்சினை மாதிரி. பத்து வருஷம் ஆச்சி, இந்திய அரசு இந்த விஷயத்தில் (ஓகேனக்கல் விவகாரத்தில்) என்ஓசி போட்டு.

அறிவோட செயல்படுங்க தயவு செஞ்சு. இங்கே, கலைஞர் மற்றும் எல்லாருக்கும் எனது வேண்டுகோள்... இது நகத்தால் கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம். அதற்கு இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது. இப்போது அதைச் செய்யத் தவறிவிட்டால் பின்னர் கோடாலி கொண்டு வெட்டினாலும் பிரச்சினை தீராது.

இப்பவே, இந்த நிமிஷமே ஏந்த வேலையைச் செய்யணும். இதைவிட வேறு பெரிய பிரச்சினை இப்போது கிடையாது.

உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்காதீர்கள், தயவுசெய்து இந்த விஷயத்துக்கு இப்பவே முடிவு கட்டுங்க... என்றார் ஆவேசமாக.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X