For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா வெறும் வாய்ஜாலம்- விடுதலைப் புலிகள் சாடல்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை தமிழரின் இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்திய அரசு கூறுவது வெறும் வாய்ஜாலம்தான் என்று எல்டிடிஈ அமைப்பின் அதிகாரபூர்வ ஏடு கடுமையாக சாடியுள்ளது.

இதுதொடர்பாக அதில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழரின் தேசிய இனப் பிரச்னைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண சிங்கள அரசு விரும்பவில்லை என்ற உண்மையையும், ராணுவத்தீர்வு மூலம் தமிழினத்தை அடிமைப்படுத்த அது முயல்கின்றது என்ற எதார்த்தத்தையும் இப்போது, உலக நாடுகளுக்குப் புரியத் தொடங்கியுள்ளது.

'போர் வெறிகொண்ட தீவிரவாதிகள்', 'சமாதான வழியில் நாட்டமில்லாதவர்கள்' என்றெல்லாம் புலிகள் மீது சிங்கள அரசு தொடுத்து வந்த அரசியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையில், சிங்கள ஆட்சியாளர்களுக்குத்தான் பொருந்தும் என்பதையும் உலக மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இதன் விளைவாக சிங்கள அரசின் சர்வதேச உறவுகளில் நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கிவிட்டன. போருக்கான அரசியல் ஆதரவையும், ஆயுதங்களையும், நிதியுதவியையும் முன்பு வழங்கி வந்த உலக வல்லரசு நாடுகள் இந்த உதவிகளையும், தார்மீக ஆதரவுகளையும் படிப்படியாக நிறுத்தி வருகின்றன.

இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்க முடியாமல் சிங்கள அரசு தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இலங்கை அரசின் இன அழிப்பு போருக்கு வேண்டிய ராணுவ உதவி மற்றும் அரசியல் ஆதரவை கொடுக்க முற்படும் இந்திய அரசின் செயல், தமிழர்களை கோபம் அடையச் செய்துள்ளது. சர்வதேச சமூகத்தையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

போரில் சிங்களப்படைகள் இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் போதெல்லாம், சிங்களத் தளபதிகள் பதறியடித்து இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள ஆட்சியாளர்களையும், இந்திய ராணுவத் தளபதிகளையும் கலந்து ஆலோசிப்பது வழக்கமாகிவிட்டது.

தமிழினத்தைப் பூண்டோடு அழிப்பதற்காக போரிட்டுவரும் சிங்களத் தளபதிகளுக்கு இந்தியா சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதை உலக நாடுகள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

சிங்கள அரசின் போர் நடவடிக்கையுடன் இந்தியத் தேசிய நலனை இணைத்து அதிகாரிகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழர்களைப் புண்படுத்தி வருகின்றன.

'இலங்கைக்கு வேற்று நாடுகளின் ஆயுதங்களால் இந்தியாவுக்கு ஆபத்து' என்ற இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் கருத்தும், 'சிங்களப் படைகள் சோர்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை' என்ற இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளரின் பேச்சும், சிங்கள அரசுக்கு ராணுவ உதவிகளை வழங்கிவரும் இந்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதாக உள்ளன.

சிங்கள அரசின் போருக்கு ஆதரவு அளிப்பதோடு, அதன் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் நிலப்பகுதிகளில் வர்த்தக லாபத்தை ஈட்ட முயலுவது இந்திய அரசின் சிறுமைத்தனத்தை காட்டுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியை சிங்களப்படைகள் ஆக்கிரமித்த பின்னர், அங்கே ஒரு அனல் மின்நிலையத்தை சிங்கள அரசுடன் இணைந்து நிறுவும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.

இதேபோல், இந்தியாவில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையத்தில் தயாராகும் மின்சாரத்தை சிங்களப்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர்நிலம் (தலைமன்னார்) வழியாக அனுராதபுரம் வரை கொண்டு சென்று வழங்குவதற்கான வாணிப ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் இந்தியா முனைந்துள்ளது.

சிங்கள அரசின் நில ஆக்கிரமிப்புக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் ஓர் அரசியல் நடவடிக்கையாகவே இந்திய அரசின் இந்த வாணிப முயற்சிகள் அமைந்திருக்கின்றன.

இவ்வாறு, தமிழினப் படுகொலை செய்துவரும் சிங்கள அரசுக்கு பல்வேறு உதவிகளை இந்திய அரசு வழங்கிவருகிறது.

எனவேதான், இந்திய அரசின் அனைத்து வகை ஆதரவுடனும் சிங்கள அரசு செய்யும் தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்தநிலையில் "இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும்- தமிழரின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே காணப்படவேண்டும்" என்று இந்திய அரசு விடுக்கும் அறிக்கைகளை வெறும் வாய்ச்சொற்களாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.

இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X