சென்னை ராமச்சந்திராவை விலை பேசிய கில்லாடி பேர்வழி கைது
சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையை ரூ. 3000 கோடிக்கு விற்க, போலி ஆவணங்களைக் கொண்டு விலை பேசிய கில்லாடி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். ஒரு அரசு பஸ் நின்று கொண்டிருக்கும். அதை ஒரு நபரிடம் வடிவேலு பேரம் பேசுவார். கிராமங்களில் நடப்பது போல இருவரும் கையில் துண்டைப் போட்டு விலை பேசிக் கொண்டிருப்பார்கள். அதேபோன்ற ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை போரூரில் உள்ள பிரபலமான ராமச்சந்திரா மருத்துவமனையை போலி ஆவணங்களை வைத்து ரூ. 3000 கோடிக்கு விலை பேசிய பலே பேர்வழியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூர் ரவுண்டானா பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ஒரு நபர் வந்தார். அங்கிருந்த பழனி என்பவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் அந்த நபர், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையை விற்க அந்த மருத்துவனையின் உரிமையாளர் வெங்கடாச்சலம் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான உரிமையை (பவர்) என்னிடம் கொடுத்துள்ளார். நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும். ரூ. 3000 கோடிக்கு விலை வைத்துள்ளோம் என்றார்.
அந்த நபரின் பேச்சு, கடிதம் ஆகியவற்றைப் பார்த்த பழனிக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கொடுத்த கடிதம், பவர் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் பீதாம்பர். கேரளாவைச் சேர்ந்தவர். இவரது மனைவி பத்மினி. இவர் ஒரு டாக்டர். இவர்களின் மகன் ப்ரீதம் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறார்.
பீதாம்பர் ஏகப்பட்ட டிகிரிகளை வாங்கியதாக அவர் வைத்துள்ள விசிட்டிங் கார்டுகள் காட்டுகின்றன. அதில் சில டாக்டர் பட்டங்களும் அடங்கும். இவை அனைத்தும் போலியான பட்டங்களாக இருக்கக் கூடுமோ என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இவரிடம் இன்னொரு கடிதமும் இருந்தது. அதாவது உலக வர்த்தக மையத்துக்கு இடம் வாங்க பவர் கொடுக்கப்பட்டதைப் போன்ற ஒரு கடிதமும், பல கல்லூரிகளை விற்பதற்கு பவர் கொடுக்கப்பட்டதைப் போன்ற ஆவணங்களையும் இந்த நபர் வைத்துள்ளார். அத்தனையும் போலி என்று தெரிய வந்துள்ளது.
இவர் மிகப் பெரிய நில மோசடிப் பேர்வழியாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். இவருக்கு கருணாகரன் என்பவர் உதவியாக இருந்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இவரைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.